எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் இல்லை!! சபாநாயகர்
12 Aug,2018
அரசாங்கத்துடன் தொடர்புபடாத அதிக எண்ணிக்கையை கொண்ட கட்சியின் தலை வராக இருக்கும் இரா. சம்பந்தனே தொடர்ந்தும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பார்.
அரசியல மைப்பின் பிரகாரமும் சம்பிரதாயங்களின் பிரகாரமும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் செய்வதற்கு சபாநாயகர் என்ற வகை யில் என்னால் முடியாது.
இதுவே எனது இறுதி தீர்மானமாகும். இந்த தீர்மானத்தை நிலை யியற் கட்டளைப் பிரகாரம் சவாலுக்கு உட் படுத்த முடியாது என சபாநாயகர் கரு ஜய சூரிய நேற்று சபையில் தெரிவித்தார்.
அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு விவாதங்களின் போது உரிய நேரம் ஒதுக்கீடு செய்வதற்கும் பாராளுமன்ற குழுக்களில் நீதியான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற் கும் தான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு நேரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தனது இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், 2015 ஆகஸ்ட் ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் எதிர்க்கட்சியில் 93 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர்களில் 70 பேருக்காக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தினேஷ் குணவர்த்தனவுக்கு வழங்குமாறும் கோரி கூட்டு எதிர்க்கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு 2018 ஆகஸ்ட் முதலாம் திகதி என்னிடம் எழுத்து மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
இது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்த பின்னர் எனது இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதற்கு எதிர்பார்க்கிறேன்.
அந்தக் கோரிக்கை தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதங்களுக்கான காலநேரங்களை வழங்குவது மற்றும் குழுக்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் நான் ஆராய்ந்தேன். அது தொடர்பாகவும் எனது தீர்மானத்தை அறிவிப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.
2018 ஆகஸ்ட் 7ஆம் திகதி பல மணித்தியாலயங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களால் என்னிடம் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பாக முழுமையான நிபுணத்துவம் பெற்றவர்களின் கருத்துக்கள் , உலகின் ஏனைய பாராளுமன்றங்களின் சம்பிரதாயங்கள், பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றங்கள் மற்றும் சர்வதேச பாராளுமன்ற சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பிரதாயங்கள் என்பனவற்றை மிகவும் ஆழமாக ஆராய்ந்து நான் இந்த அறிவிப்பை விடுக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது, பாராளுமன்ற வரலாற்றில் ஆரம்பத்திலிருந்தே முன்னெடுத்து செல்லப்படும் சம்பிரதாயங்களுக்கு அமைய எமது அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கௌரவம் மிக்க பதவியாகும்.
எமது நாட்டுக்கு உரித்தான வெஸ்மினிஸ்டர் அரசியலமைப்பு சம்பிரதாயத்துக்கு சமாந்தரமாக எதிர்க்கட்சியின் தலைமைப் பதவி அரசியலமைப்புக்கு உட்பட்ட அடையாளம் என்பதுடன், பாராளுமன்ற முறைமையின் அத்தியாவசியமான ஒரு பதவியாகும்.
எமது பாராளுமன்ற வரலாற்றுக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக அரசாங்கத்துடன் தொடர்பில்லாத, அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட, பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியினதோ அல்லது கூட்டணியினதோ குழுவுக்கு தலைமைதாங்கும் நபரை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவராக அறிவிப்பதே வழக்கமாகும்.
இவ்வாறான அரசியல் கலாசாரம் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற ஜனநாயக பாராளுமன்ற முறைமையை செயற்படுத்தும் நாடுகளிலும் காணப்படுகிறது.
அயல்நாடான இந்தியாவில் கூட அரசாங்கத்துடன் தொடர்புபடாத எதிர்த்தரப்பில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் ஒருவரை எதிர்க்கட்சி உறுப்பினர்களாக நியமிக்கின்றனர்.
பிரித்தானிய பாராளுமன்ற முறைமையை பின்பற்றும் நாடுகளிலும் இதுவே பின்பற்றப்படும் சம்பிரதாயகமாகவுள்ளது. இந்த விடயத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லையென்பது இவற்றை ஆராயும் போது அறியமுடிகிறது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 7ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அமையபெற்றிருந்த முறைமை பற்றியும் நாம் ஆராயவேண்டியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் பிரதமராக பதவியேற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் அமர்ந்தனர். அதுவரை ஆளும் தரப்பிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்தார்கள்.
அந்தப் புதிய நிலைமைக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் பிரச்சினை எழும்போது, எதிர்க்கட்சியில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரான நிமல் சிறிபால.டி.சில்வா எதிர்க்கட்சித் தலைவராக அப்போதிருந்த சபாநாயகரால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
நிமல் சிறிபால.டி.சில்வா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த காலப்பகுதியில் ஐ.ம.சு.முவின் உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாகப் பதவியேற்றதற்கு அமைய அவர்களுக்கு ஆளும் கட்சியில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதற்கு முன்னரும் ஆளும் கட்சியில் இருந்தவர்கள் எதிர்க்கட்சிக்குச் சென்றமை மற்றும் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் ஆளும் கட்சிக்குச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 46வது சரத்தின் 4 மற்றும் 5 உபபிரிவுகளின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக 2015 செப்டெம்பர் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பங்காளிக் கட்சியாக இருப்பதால் பாராளுமன்றத்தின் நிலைமை மாறியிருப்பது தொடர்பில் ஆராயவேண்டியது கட்டாயமாகியுள்ளது.
இதன்படி ஐ.ம.சு.மு வின் உறுப்பினர்கள் சிலர் அமைச்சர் பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தில் இணைந்து செயற்படுகின்றனர். அதேபோன்று 2015ஆம் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு அமைய, அக்கட்சியைச் சேர்ந்த எதிர்த்தரப்பில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களை எதிர்க்கட்சியில் தனியான கட்சியாக என்னால் அறிவிக்க முடியாது.
அரசாங்கத்துடன் தொடர்புபடாது அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தரப்பின் தலைவராக சபாநாயகரால் ஏற்றுக் கொள்வது ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக பின்பற்றப்படும் பாராளுமன்ற சம்பிரதாயமாகும்.
இதற்கமைய தற்போதைய 8 ஆவது பாராளுமன்றத்தில் அரசாங்கத்துடன் தொடர்புபடாத, எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் அதிக எண்ணிக்கையைக் கொண்ட கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான இராஜவரோதயம் சம்பந்தனை எதிர்க்கட்சியின் தலைவராக என்னால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக 2015 செப்டெம்பர் 3ஆம் திகதி நான் இந்த சபைக்கு அறிவித்துள்ளேன்.
இதற்கமைய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் மாற்றத்தைச் செய்வதற்கு, அரசியலமைப்புக்கு இணங்கவும், பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு இணங்கவும் அதியுயர் சபையின் சபாநாயகரான எனக்கு முடியாது என்ற எனது இறுதித் தீர்மானத்தை அறிவிக்கின்றேன்.
இருந்தபோதும், அரசியலமைப்புக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஐ.ம.சு.முவை பிரதிநிதித்துவப்படுத்தி, எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் வாத விவாதங்களில் கலந்துகொள்ள நியாயமான காலநேரத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கும், தற்பொழுது பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சகல குழுக்களிலும் நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அவசியமான சகல நடவடிக்கைகளையும் எடுத்து அந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை உறுதிப்படுத்துவேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்