இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க மாலைதீவு செல்கிறார் மகிந்த?
11 Nov,2018
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில், சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இந்த வாரக் கடைசியில் மாலைதீவுக்குப் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலைதீவில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் சோலி வரும், 17ஆம் நாள் பதவியேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு அதிபரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க, இந்தியப் பிரதமர் மோடி மாலேக்கு வரும் 17ஆம் நாள் செல்லவுள்ளார்.
மாலைதீவு அதிபரின் பதவியேற்பு நிகழ்வுக்கு செல்லுமாறும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச முடியும் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
மாலைதீவுக்குச் சென்றால், மோடியைச் சந்திக்க முடியுமா என்று மகிந்த ராஜபக்சவினால் கேட்க முடியும். அவ்வாறான சந்திப்பில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவருக்குத் தெளிவுபடுத்த முடியும் என்றும் மகிந்தவுக்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், இந்தியாவுடனான எந்த அதிகாரபூர்வ தொடர்பாடல்களும் நிகழவில்லை. இரண்டு தரப்புகளுடனும் இந்தியா தொடர்புகளை வைத்திருப்பதை தவிர்த்துள்ளது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், பொது நிகழ்வு ஒன்றில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலகுவாகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என்றும் அதனை வைத்து, அனைத்துலக பரப்புரைகளை மேற்கொள்ளலாம் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.