P1 சிவகாமியின் சபதம்..18/19

18 Jun,2011
 

முத்துமாலை.18

பழந்தமிழ் நாட்டு மன்னர்களுக்குள்ளே ஒப்புயர்வு அற்றவரும், தமது இணையில்லாத புகழை என்றும் அழியாத வண்ணம் கல்லிலே செதுக்கி வைத்தவருமான மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியை அன்றொரு நாள் இரவில், யுத்தச் செய்தி வந்த அவசரத்தில் மதயானையின் வெறியினால் நிகழ்ந்த தடபுடலுக்கு மத்தியில் நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். எத்தகைய சாமான்யக் குறுநில மன்னர்களையும்கூட அந்தந்த இராஜாங்கக் கவிகள் புத்தியிலே பிருகஸ்பதி என்றும், வித்தையிலே சரஸ்வதி என்றும், அழகிலே மன்மதன் என்றும் வீரத்திலே அர்ஜுனன் என்றும், கொடையிலே கர்ணன் என்றும் வர்ணிப்பதுண்டு. இந்த வர்ணனையெல்லாம் மகேந்திர சக்கரவர்த்தியின் விஷயத்தில் உண்மையிலேயே பொருந்துவதாயிருந்தது.


மகேந்திரவர்மர் ஆஜானுபாஹுவான தோற்றமுடையவர். அவருடைய கம்பீரமான முகத்தில் பல நூறு வருஷங்களாக வாழையடி வாழையாக வந்த இராஜ குலத்தின் வீரக் களையோடு சிறந்த கல்வி ஆராய்ச்சியினாலும் கலைப் பயிற்சியினாலும் ஏற்படும் வித்யாதேஜஸும் பிரகாசித்தது. காஞ்சி நகரின் பிரசித்தி பெற்ற பொற்கொல்லர்கள் சித்திர விசித்திர வேலைப்பாடுகளுடன் செய்த கிரீடம், குண்டலம், வாகுவலயம், வீரக்கழல் முதலிய ஆபரணங்கள் அவர் தரித்திருந்தார். அவருடைய விசாலமான வீர லக்ஷ்மி குடிகொண்ட மார்பை விதவிதமான வர்ணங்களுடன் பிரகாசித்த நவரத்தின மாலைகள் அலங்கரித்தன. அபூர்வ அழகும் நயமும் மென்மையும் வாய்ந்த பட்டுப் பீதாம்பரங்களை உற்பத்தி செய்வதில் அந்த நாளிலேயே காஞ்சி நகரம் பெயர் பெற்றிருந்தது. அத்தகைய பீதாம்பரங்களை மகேந்திர சக்கரவர்த்தி அழகு பொருந்த அணிந்தபோது, அவை அதிக சோபை பெற்று விளங்கியதாக நெசவுக் கலைஞர்கள் பெருமிதத்துடன் கூறினார்கள்.


மகேந்திரர் தமிழ்மொழி, வடமொழி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த தேர்ச்சிபெற்ற பண்டிதராக விளங்கினார். வடக்கே தக்ஷசீலம் முதல், தெற்கே கன்னியாகுமரி வரையில் உள்ள பண்டிதர்கள், மகா ரசிகரான மகேந்திர சக்கரவர்த்தியிடம் தங்களுடைய புலமையைக் காட்டிப் பரிசுபெறும் பொருட்டுக் காஞ்சி நகரில் வந்து மொய்த்த வண்ணம் இருந்தார்கள். அன்றைக்கு ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னால் வடநாட்டில் உஜ்ஜயினி நகரத்தில், அரசு செலுத்திக் காளிதாஸன் முதலிய மகா கவிகளை ஆதரித்த சந்திரகுப்த விக்கிரமாதித்யருக்குப் பிறகு, பண்டிதர்களுக்கும் கவிஞர்களுக்கும் கற்பகவிருக்ஷமாக விளங்கியவர் காஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி தான் என்பது வெகுஜன வாக்காயிருந்தது. சித்திரம், சிற்பம் ஆகிய கலைகளில் சக்கரவர்த்தி ஆர்வங்கொண்டிருந்ததோடல்லாமல் அவற்றை நன்றாகப் பயின்று அந்தந்தக் கலையில் வல்லவர்களாயிருந்த கலைவாணர் எல்லாரும் பார்த்து வியக்கும்படியான தேர்ச்சியும் பெற்றிருந்தார்.


சிற்பத் துறையில் மகேந்திரனின் அதிசயமான கற்பனைத் திறனைக்கண்டு வியந்து, சிற்பசாஸ்திர பண்டிதர்கள் அவருக்கு 'விசித்திர சித்தர்' என்ற பட்டத்தை வழங்கியிருந்தார்கள். அவ்விதமே சித்திரக்கலை வல்லவர்களிடம் 'சித்திரக்காரப் புலி' என்னும் பட்டத்தைச் சக்கரவர்த்தி பெற்றிருந்தார். 'மத்தவிலாஸப் பிரகசனம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை வடமொழியில் இயற்றி 'மத்தவிலாஸர்' என்னும் பட்டத்தை அடைந்தார். சங்கீத சாஸ்திரத்தைக் கரை கண்டிருந்த ருத்ராசாரியாரிடம் அவர் சங்கீதக் கலை பயின்று, ஏழு நரம்புகள் உடைய 'பரிவாதினி' என்னும் வீணையை அபூர்வமாய்க் கையாளும் திறமை பெற்றிருந்தார். தாள வகைகளிலே 'ஸங்கீர்ண ஜாதி' தாளத்தை அதிசயமாகக் கையாளும் வல்லமை காரணமாக 'ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர்' என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.


மகேந்திரர் இளம் பிராயத்தில் சமண மதத்தில் ஈடுபட்டிருந்து பிற்காலத்தில் சிவபக்திச் செல்வரான பிறகு, எந்த மதத்தையும் துவேஷிக்காதவராய், தமது சாம்ராஜ்யத்தில் இருந்த சைவர், வைஷ்ணவர், பௌத்தர், சமணர், சாக்தர் ஆகிய சகல மதத்தினரையும் தர்மம் தவறாமல் பரிபாலித்து வந்தபடியால், 'குணபரர்' என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. 'திருவதிகை' ஸ்தலத்தில் அவருடைய கொடையினால் கட்டப் பெற்ற சிவாலயத்துக்குக் 'குணபரேச்வரம்' என்ற பெயர் வழங்கிற்று. மகேந்திர சக்கரவர்த்திக்கு முற்பட்ட சுமார் முந்நூறு வருஷ காலத்தில் வடநாட்டிலிருந்து பண்டிதர்களும், கவிகளும், சமண முனிவர்களும், புத்த பிக்ஷுக்களும் இடைவிடாமல் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சி நகரில் வித்யா பீடங்களை ஏற்படுத்தி வந்தார்கள். இக்காரணத்தினால் நமது வரலாறு நிகழ்ந்த காலத்தில் தமிழகத்தில் சமஸ்கிருதமும் பிராகிருதமும் மிக்க பிரபலமடைந்து, செந்தமிழ் மொழியின் சிறப்பை ஓரளவு மங்கச் செய்திருந்தன என்பதையும் நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். திருநாவுக்கரசர் முதலிய சைவ நாயன்மார்களும், பொய்கையார் முதலிய வைஷ்ணவ ஆழ்வார்களும் பக்திச் சுவை சொட்டும் பாடல்களைப் பொழிந்து தெய்வத் தமிழ் மொழியை மீண்டும் சிம்மாசனம் ஏறச் செய்த மகோன்னத காலம் தமிழகத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. எனவே, மகேந்திர சக்கரவர்த்தியின் பட்டங்கள் பெரும்பாலும் வடமொழியில் இருப்பதன் காரணத்தை நேயர்கள் ஊகித்து அறியலாம்.


மகாராஜாதிராஜா - பூமண்டலாதிபதி - திரிபுவன சக்கரவர்த்தி - மத்தவிலாஸ - விசித்திர சித்த - ஸங்கீர்ண ஜாதிப் பிரகரண சித்திரக்காரப் புலி - குணபரரான மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியை இத்தனை நேரம் ஆயனர் வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்து விட்டதற்காக வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். அவ்விதம் நாம் அந்த மன்னர் பெருமானை நிறுத்தி வைத்துவிட்ட போதிலும், ஆயனச் சிற்பியார் அவரை வரவேற்று உபசரிப்பதில் சிறிதும் காலம் தாழ்த்தி விடவில்லை. சக்கரவர்த்தியின் வருகையை அறிவித்த பேரிகை ஒலி வெகுதூரத்தில் கேட்ட போதே ஆயனர் பரபரப்புடன் வீட்டு வாசலுக்கு வந்து அவரை வரவேற்க ஆயத்தமாக நின்றார்.


குதிரையிலிருந்து இறங்கும்போதே சக்கரவர்த்திப் பெருமான் "ஆயனரே! அன்றிரவு சுகமாக வந்து சேர்ந்தீர்களா? சிவகாமி சௌக்கியமா?" என்று கேட்டுக்கொண்டே இறங்கினார். ஆயனர், முன்னால் ஓர் அடி சென்று கும்பிட்டு, "ஆகா! சுகமாக வந்து சேர்ந்தோம்! குழந்தைதான் மூன்று நாளாக அவ்வளவு சௌக்கியம் இல்லாமலிருந்தாள்..." என்பதற்குள் மகேந்திர பல்லவர், "அப்படியா? இப்போது எப்படி இருக்கிறாள்?" என்று கவலைக் குரலில் கேட்டார். "இன்று சற்றுப் பாதகமில்லை" என்றார் ஆயனர்.


எல்லோரும் வீட்டுக்குள் சென்றார்கள் சக்கரவர்த்தி வரும் சமயங்களில் அமர்வதற்காகவே ஆயனர் ஓர் அழகிய கல்சிம்மாசனத்தை அமைத்திருந்தார். அந்தச் சிம்மாசனத்தில் மகேந்திரர் அமர்ந்ததும், ஆயனர் சிவகாமிக்குச் சமிக்ஞை செய்ய அவள் அருகில் நெருங்கி வந்து சக்கரவர்த்திக்கு நமஸ்கரித்தாள். அப்போது ஆயனர், "பெருமானே! அரங்கேற்றம் நடுவில் தடைப்பட்ட காரணத்தினால் குழந்தை உற்சாகம் இழந்திருக்கிறாள். அவளுடைய சௌக்கியக் குறைவுக்கு அதுதான் காரணம். ரசிக சிரோமணியான தாங்கள்தான் அவளுக்கு ஆசிகூறி உற்சாகப்படுத்த வேண்டும்" என்றார். "ஆயனரே! உமது குமாரி அன்றைக்கு நடனமாடியதாகவே எனக்குத் தோன்றவில்லை. நடனக் கலையே ஓர் உருவம் எடுத்து வந்து ஆடியதாகவே தோன்றியது" என்றார் மகேந்திரர்.


"ஸங்கீர்ண ஜாதி தாளத்தை உபயோகப்படுத்தி ஓர் ஆட்டம் கற்பித்திருந்தேன்; அதை ஆடமுடியாமல் போய் விட்டது" என்று ஆயனர் ஏமாற்றமான குரலில் கூறினார். "ஆம்; ஆம்! இன்னும் என்னவெல்லாமோ விந்தைகள் வரப் போகின்றன என்று எனக்குத் தெரிந்துதான் இருந்தது. நடுவில் எழுந்து போக நேர்ந்ததில் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தைச் சொல்லி முடியாது. அவ்வளவு முக்கியமான செய்தியாயிராவிட்டால் போயிருக்க மாட்டேன்!" என்றார் சக்கரவர்த்தி. "நானும் கேள்விப்பட்டேன், பிரபு! நமது ராஜ்யத்துக்குள்ளே அந்நியர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்களாமே? என்ன தைரியம்! என்ன துணிச்சல் அவர்களுக்கு!" என்று ஆயனர் உண்மையான ஆத்திரத்துடன் கூறினார்.


"அந்தத் துணிச்சலுக்குத் தகுந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள். ஆயனரே! பல வருஷ காலமாகப் பல்லவ ராஜ்யத்துக்குள் பகைவர் படைகள் நுழைந்ததில்லை. நான் போர்க்களத்தைக் கண்ணால் காண வேண்டும் என்பதற்காக என் தந்தை என்னை இலங்கையில் நடந்த போருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், நரசிம்மனுக்கோ இங்கேயே போர்க்களத்தைப் பார்க்கும்படியான பாக்கியம் நேரிட்டிருக்கிறது. வாதாபி அரசன் புலிகேசி பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு படையெடுத்து வருகிறான். நாமும் பெரும் பலம் திரட்டிக் கடும்போர் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு விஷயம் சொல்லுகிறேன்; நமது ராஜ்யத்தில் சளுக்கர் படையெடுத்ததனால் எனக்கு உண்டாகும் கோபத்தைக் காட்டிலும் அதனால் சிவகாமியின் அரங்கேற்றம் தடைப்பட்டதுதான் அதிகக் கோபத்தை உண்டாக்குகிறது. இந்தக் குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்!" என்றார்.


இதைக் கேட்ட ஆயனர் பெருமையினால் பூரித்தவராய், அருகில் தலை குனிந்தவண்ணம் நின்ற சிவகாமியை அருமையுடன் நோக்கினார். சக்கரவர்த்தி மேலும் கூறினார்: "அரங்கேற்றத்தன்று நான் என்னவெல்லாமோ திட்டம் போட்டிருந்தேன். அதெல்லாம் ஒன்றும் முடியாமல் போயிற்று. சபையிலே செய்திருக்க வேண்டிய சம்மானத்தை இங்கேயாவது செய்யலாமென்று உத்தேசித்திருக்கிறேன். அதற்கு ஆட்சேபணை ஒன்றுமில்லையே?" இவ்விதம் சொல்லிக்கொண்டு சக்கரவர்த்தி தம் கையிலிருந்த இரத்தினப் பையிலிருந்து அழகான இரட்டை வட முத்துமாலையை எடுத்தார்.


அப்போது ஆயனர், "பெருமானே! தங்கள் திருக்கரத்தினால் கொடுக்கும்போது எங்கே கொடுத்தால் என்ன? சிவகாமி! உன் பாக்கியமே பாக்கியம்! இந்தப் பரத கண்டத்திற்குள்ளே சகல கலைகளின் நுட்பங்களையும் நன்குணர்ந்தவரான விசித்திர சித்த மகாப் பிரபு உன்னுடைய கலைத் திறமையை மெச்சி உனக்குச் சம்மானம் அளிக்கப்போகிறார்!" என்று கூறிச் சமிக்ஞை செய்யவும், சிவகாமி முன்னால் வந்து சக்கரவர்த்தியைப் பணிவுடன் வணங்கிக் கரங்களை நீட்டினாள்.


மகேந்திரர் முத்துமாலையை எடுத்துச் சிவகாமியின் நீட்டிய கரங்களில் வைத்தபோது...அடடா! இதென்ன மீண்டும் அபசகுனம்! மாலை அவள் கையிலிருந்து நழுவிக் கீழே தரையில் விழுந்துவிட்டதே! ஆயனரின் முகம் சட்டென்று சுருங்கியது. மகேந்திர பல்லவருடைய திடசித்தங்கூடச் சிறிது கலங்கிவிட்டதாக அவருடைய புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. சிவகாமியின் மனத்திலும் ஏதேனும் துணுக்கம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ, நமக்குத் தெரியாது. ஆனால் அடுத்த கணத்தில் அவளுடைய முகம் மலர்ந்ததைப் பார்த்தால் அவளுடைய உள்ளமும் மலர்ந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாகத் தெரிந்தது.


கீழே விழுந்த முத்துமாலையை அந்தக் கணத்திலேயே குமார சக்கரவர்த்தி சட்டென்று குனிந்து எடுத்தார். எடுத்த மாலையைச் சிவகாமியின் நீட்டிய கரங்களில் அவர் வைக்க, சிவகாமி அதை ஆர்வத்துடன் வாங்கிக் கண்களில் ஒத்திக் கொண்டு கழுத்திலும் அணிந்துகொண்டாள். அந்த முத்துமாலைப் பரிசைக் குமார சக்கரவர்த்தியின் கையினால் பெற்றுக் கொள்ள நேர்ந்தது பற்றிச் சிவகாமியின் உள்ளத்தில் பொங்கிய உவகை முகத்திலும் பிரதிபலித்தது இயல்பே அல்லவா!

 

புத்தர் சிலை.19


நழுவித் தரையில் விழுந்த முத்துமாலையைக் குமார சக்கரவர்த்தி குனிந்து எடுத்துக் கொடுத்ததையும், அதைச் சிவகாமி முகமலர்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டதையும் பார்த்த ஆயனரின் முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது. சக்கரவர்த்தி இதையெல்லாம் கவனியாததுபோல் கவனித்தவராய், ஆயனரைப் பார்த்து, "மகா சிற்பியாரே! இந்த முத்துமாலையைப் போல் எவ்வளவோ உயர்ந்த பரிசுகளையெல்லாம் உமது புதல்வி வருங்காலத்தில் அடையப் போகிறாள்! இந்தப் பல்லவ ராஜ்யத்துக்கே அவளால் புகழும் மகிமையும் ஏற்படப் போகின்றன. வருங்காலத்தில் எது எப்படியானாலும், சிவகாமியின் நடனக் கலைப் பயிற்சி மட்டும் தடைப்படக்கூடாது. அவளுக்கு எவ்விதத்திலும் உற்சாகக் குறைவு நேரிடாமல் நீர் பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்று சொன்னார்.


ஆயனர், "பல்லவேந்திரா! தாங்களும் குமார சக்கரவர்த்தியும் உற்சாகப்படுத்துவதற்கு இருக்கும்போது சிவகாமிக்கு உற்சாகக் குறைவு ஏன் ஏற்படப்போகிறது? எனக்குத்தான் என்ன கவலை?" என்று சொல்ல, மகேந்திர பல்லவர் கூறினார்: "அப்படியில்லை, ஆயனரே! இந்த யுத்தம் காரணமாக நானும் குமார சக்கரவர்த்தியும் சில காலம் இவ்விடம் வரமுடியாமலும், உங்களைப் பார்க்க முடியாமலும் போகலாம். அதனாலே உங்கள் இருவருடைய கலைப் பணிக்கும் எந்தவிதமான குந்தகமும் ஏற்படக்கூடாது. சிவகாமி புத்த பிக்ஷுணியாக விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீரல்லவா? ஒருவிதத்தில் அது பொருத்தமானதுதான். சிவகாமி சாதாரணமான பெண் அல்ல; மற்றப் பெண்களைப் போல் உரிய பருவத்தில் இல்வாழ்க்கையை மேற்கொண்டு அற்ப சுகங்களில் காலம் கழிக்கப் பிறந்தவள் அல்ல; பெண்ணாய்ப் பிறந்தவர்களில் லட்சத்திலே ஒருவருக்குத்தான் இப்பேர்ப்பட்ட கலை உணர்ச்சி ஏற்படும்; அதைப் போற்றி வளர்க்கவேண்டும். சம்சார வாழ்க்கையைப் பொருத்தவரையில் சிவகாமி தன்னைப் பிக்ஷுணியாகவே நினைத்துக் கொள்ளலாம்; தெய்வீகமான நடனக்கலைக்கே அவள் தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளவேண்டும்!" இந்த மொழிகளைக் கூறியபோது மகேந்திரபல்லவரின் மனத்திலே என்ன இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய மொழிகள் அங்கிருந்த மூன்று பேருடைய உள்ளங்களிலும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கவேண்டுமென்பது அவர்களுடைய முகபாவ மாறுதல்களிலிருந்து நன்கு தெரிந்தது.


ஆயனர் தமது உள்ளக் கிளர்ச்சியை வார்த்தைகளினாலே வெளியிட்டார்: "பிரபு, என்னுடைய மனத்தில் உள்ளதை அப்படியே தாங்கள் கூறிவிட்டீர்கள்; இல்வாழ்க்கையை மேற்கொண்டு குழந்தைகுட்டிகளைப் பெற்று வளர்ப்பதற்கு எத்தனையோ லட்சம்பேர் இருக்கிறார்கள். இந்த அபூர்வமான தெய்வக்கலையைப் பயின்று வளர்ப்பதற்கு அதிகம் பேர் இல்லை தானே?" -இவ்விதம் ஆயனர் சொல்லிக்கொண்டே சிவகாமியைத் திரும்பிப் பார்த்து, "சக்கரவர்த்தியின் பொன்மொழிகளைக் கேட்டாயா, குழந்தாய்?" என்றார்.


சிவகாமியின் முகமானது அச்சமயம் கீழ்த்தரச் சிற்பி அமைத்த உணர்ச்சியற்ற கற்சிலையின் முகம்போல் இருந்தது. எத்தனையோ விதவிதமான உள்ளப்பாடுகளையெல்லாம் முகபாவத்திலே கண்ணிமையிலே, இதழ்களின் மடிப்பிலே அற்புதமாக வெளியிடும் ஆற்றல் பெற்றிருந்த சிவகாமி, அச்சமயம் தன் சொந்த மனோநிலையை முகம் வெளியிடாதபடி செய்வதில் அபூர்வத் திறமையைக் காட்டினாள் என்றே சொல்லவேண்டும். ஆனால், நரசிம்மவர்மர் அபிநயக் கலையில் தேர்ச்சி பெறாதவரானபடியால், சக்கரவர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டதும் அவருடைய முகம் சிவந்தது, இதழ்கள் துடித்தன. மற்றவர்கள் கவனியாதவண்ணம் உடனே அவர் திரும்பி பக்கத்தில் இருந்த சிலைகளையும் சித்திரங்களையும் பார்ப்பவர் போல் இவரிடமிருந்து பெயர்ந்து அப்பால் சென்றார். சக்கரவர்த்தியும் தாம் இத்தனை நேரம் வீற்றிருந்த சிற்ப சிம்மாசனத்திலிருந்து எழுந்து, "சிற்பியாரே! எவ்வளவோ முக்கியமான அவசர வேலைகள் எனக்கு இருக்கின்றன. இருந்தாலும் இங்கு வந்துவிட்டால் எல்லாம் மறந்து விடுகிறது. உமது புதிய சிலைகளைப் பார்த்துவிட்டுச் சீக்கிரம் கிளம்பவேண்டும்" என்று சொல்லிக்கொண்டே நடந்தார். ஆயனரும் சிவகாமியும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.


மகேந்திர பல்லவர், புதிதாகச் செய்திருந்த நடனத்தோற்றச் சிலைகளைப் பார்த்துக்கொண்டே, 'இது கஜஹஸ்தம்' 'இது அர்த்த சந்திர ஹஸ்தம்' என்று சொல்லிய வண்ணமாக நடந்து, ஆயனர் கடைசியாகச் செய்து முடித்திருந்த சிலையண்டைப் போனதும் "ஆஹா! என்று கூறிவிட்டு நின்றார். சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு, "ஆயனரே! தொண்டை மண்டலத்திலுள்ள மகா சிற்பிகளுக்குள்ளே உமக்கு நிகரானவர் எவருமில்லை. ஆனால், நீர் கூட இத்தனை காலமும் இந்தச் சிலையைப்போல் ஜீவ களை பொருந்திய சிலையைச் செய்தது கிடையாது. அன்பிற்குரியவர் நெடுங்காலம் வராதபடியினால் ஏற்பட்ட இருதய தாபத்தை இந்தச் சிலையின் முகபாவமும் மற்ற அங்கங்களின் நௌிந்த தோற்றமும் எவ்வளவு நன்றாய் வெளியிடுகின்றன! கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும்கூட அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன? ஆயனரே! சிவகாமியின் அரங்கேற்றத்துக்குப் பிற்பாடு இந்தச் சிலையைப் பூர்த்தி செய்திருக்கிறீர், இல்லையா?" என்று கேட்டார். "ஆம், பெருமானே! இன்று காலையில்தான் பூர்த்தி செய்தேன். சிவகாமி பெரிய மனது செய்து இன்றைக்கு எனக்காக மறுபடியும் ஆடி அபிநயம் பிடித்தாள்!" மகேந்திரர் மந்தஹாஸத்துடன் சிவகாமியைப் பார்த்துவிட்டு, "சிற்பியாரே! பரத சாஸ்திரத்தைத் தொகுத்து எழுதிய முனிவர் 'ஏழு வகைப் புருவ அபிநயம்' என்றுதானே சொல்லியிருக்கிறார்? அவர் நமது சிவகாமியின் நடனத்தைப் பார்த்திருந்தால், புருவ அபிநயம் ஏழு வகை அல்ல; எழுநூறு வகை என்று உணர்ந்து அவ்விதமே சாஸ்திரத்திலும் எழுதியிருப்பார்!" என்றார்.


இவ்விதம் உல்லாசமாகப் பேசிக்கொண்டு சென்ற சக்கரவர்த்தியின் பார்வை சிறிது தூரத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலையின்மீது விழுந்தது. அவ்விடத்திலேயே சற்று நின்று புத்த விக்ரகத்தைப் பார்த்தவண்ணம், "ஆஹா! கருணாமூர்த்தியான புத்த பகவான் பூவுலகத்திலிருந்து ஹிம்சையையும் யுத்தத்தையும் அடியோடு ஒழிக்க முயன்றார். அவருடைய உபதேசத்தை இந்த உலகிலுள்ள எல்லா மன்னர்களும் கேட்டு நடந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்? அவ்விதம் நடந்த புண்ணிய புருஷர் மௌரிய வம்சத்து அசோக சக்கரவர்த்தி ஒருவர்தான். அப்புறம் அத்தகைய அஹிம்சாமூர்த்தியான அரசர் இந்த நாட்டில் தோன்றவில்லை!" என்றார் மகேந்திரவர்மர்.


ஆயனர் மௌனமாய் நிற்கவே, சக்கரவர்த்தி, "நல்லது, சிற்பியாரே! உம்மை இராஜாங்க விரோதியாகப் பாவித்து நியாயமாகத் தண்டிக்கவேண்டும்..." என்று சொன்னபோது, ஆயனரின் முகத்தில் பெரும் கலவரம் காணப்பட்டது. சக்கரவர்த்தி அடுத்தாற்போல் கூறிய மொழிகள் அந்தக் கலவரத்தை ஒருவாறு நீக்கின. "ஆமாம்; இங்கு வந்துவிட்டு உடனே திரும்பவேண்டும் என்று எண்ணியிருந்த என்னை இத்தனை நேரம் இங்கே தங்கும்படி வைத்து விட்டீர் அல்லவா? அதனால் எவ்வளவு காரியங்கள் தடைப்பட்டு விட்டன? போகட்டும் இந்தத் தடவை உம்மை மன்னித்து விடுகிறேன்!" என்று கூறி ஹாஸ்ய நகைப்புடன் மகேந்திரர் வாசலை நோக்கி நடந்தார். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து சென்றார்கள்.


வீட்டு வாசற்படியைத் தாண்டியதும் சக்கரவர்த்தி ஆயனரைத் திரும்பிப் பார்த்துக் கூறினார்: "ஆயனரே உம்முடைய சிற்பத் திருக்கோயிலுக்கு மீண்டும் நான் எப்போது வருவேனோ, தெரியாது. ஆனால், ஒன்று சொல்லுகிறேன், பூர்வீகமான இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்தில் அழிவு நேர்ந்தாலும் நேரலாம்.." "பெருமானே! ஒரு நாளும் இல்லை, அப்படிச் சொல்ல வேண்டாம்!" என்று ஆயனர் அலறினார். "கேளும், சிற்பியாரே! உலகத்தில் இதற்குமுன் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இருந்திருக்கின்றன; மறைந்திருக்கின்றன. ஹஸ்தினாபுரம் என்ன, பாடலிபுத்திரம் என்ன, உஜ்ஜயினி என்ன இவையெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை. அதுபோல் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கும் ஒருநாள் முடிவு ஏற்படலாம். ஆனால், உம்முடைய கலாசாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்திலும் அழிவு கிடையாது. தெய்வத் தமிழ்மொழியும், தமிழகமும் உள்ள வரையில் உம்முடைய சிற்ப சம்ராஜ்யமும் நிலைபெற்றிருக்கும்!"


அப்போது ஆயனர் உணர்ச்சி ததும்பிய குரலில், "பிரபு! என்னைப்போல் ஆயிரம் சிற்பிகள் தோன்றுவார்கள்; மறைவார்கள்! எங்களுடைய பெயர்களும் மறைந்தொழிந்து போகும். ஆனால், இந்த நாட்டில் சிற்ப சித்திரக் கலைகள் உள்ளவரைக்கும், தங்களுடைய திருப்பெயரும் குமார சக்கரவர்த்தியின் பெயரும் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கும்" என்றார். அந்த மகாசிற்பியின் வாக்கு எவ்வளவு உண்மையான வாக்கு! மாமல்லபுரத்தை ஒரு சொப்பன உலகமாகச் செய்த தமிழ்நாட்டு மகாசிற்பிகளின் பெயர்கள் உண்மையில் மறைந்து போய்விட்டன! ஆனால், மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவரின் பெயர்கள் சரித்திரத்தில் இடம் பெற்று இன்றைக்கும் சிரஞ்சீவிப் பெயர்களாய் விளங்குகின்றன அல்லவா?


சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் தத்தம் குதிரை மீது ஏறிக்கொண்டார்கள். மகேந்திரர் குதிரைமேல் இருந்தபடியே, ஆயனரை மறுபடியும் நோக்கி, "பார்த்தீரா? வெகு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்; 'நான் வடக்கே கிளம்புவதற்கு முன்னால் மாமல்லபுரத்தில் நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்யவேண்டும். நாளை பிற்பகல் நீர் துறைமுகத்துக்கு வரவேண்டும்" என்றார். "ஆக்ஞை, பிரபு! வந்து சேருகிறேன்!" என்றார் ஆயனர். போகும் குதிரைகளைப் பார்த்துக்கொண்டு ஆயனரும் சிவகாமியும் வீட்டு வாசலில் நின்றார்கள்.


மகேந்திர பல்லவர் ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்ததிலிருந்து அவர் திரும்பிக் குதிரைமீதேறிய வரையில் அவரும் ஆயனரும் சம்பாஷணை நடத்தினார்களே தவிர, குமார நரசிம்மராவது, சிவகாமியாவது வாய்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குள்ளே கண்களின் மூலமாகச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பேசிக்கொள்ளவில்லையென்று நாம் சத்தியம் செய்து சொல்ல முடியாது. கடைசியாகச் சிவகாமியிடம் விடை பெற்றுக் கொள்வதற்கும் குமார சக்கரவர்த்தி அந்தக் கண்களின் பாஷையையே கையாண்டார்.


நரசிம்மரின் குதிரை சிறிது தூரம் சென்றதும், அவர் தமது தலையைமட்டும் திரும்பிச் சிவகாமி ஆவல் ததும்பப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தார். உடனே தம் கையிலிருந்த வேலினை உயரத் தூக்கிப் பிடித்துப் புன்னகை புரிந்தார். மறுகணத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு குதிரையைத் தட்டி விட்டார். குமார சக்கரவர்த்தியின் சமிக்ஞையைச் சிவகாமி அறிந்து கொண்டாள். அவளுடைய கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும் கலீரென்று சிரித்தன. குதிரைகள் காட்டுக்குள் மறையும் வரைக்கும் சிவகாமி இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரைகள் மறைந்து சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அவள் திரும்பி வீட்டுக்குள் செல்ல யத்தனித்தாள்.


நரசிம்மர் வேலைத் தூக்கிப் பிடித்துச் சமிக்ஞை செய்ததை நினைத்து உவகை கொண்ட சிவகாமிக்கு இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. அந்த வேலுக்கு உடையவனான இளைஞன் எங்கே? நரசிம்மர் பலமுறை இந்தக் கேள்வியைக் கண்களின் மூலமாகவே கேட்டதையும், தான் மறுமொழி சொல்லமுடியாமல் விழித்ததையும் நினைத்தபோது சிவகாமிக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. தனக்கு முன்னால் வீட்டுக்குள் போய்விட்ட ஆயனரிடம் அந்த வாலிபனைபற்றிக் கேட்கவேண்டுமென்னும் எண்ணத்துடன் அவள் உள்ளே புகுந்தபோது புத்தர் சிலைக்கு அருகாமையில் ஆயனர் செல்வதையும் அந்தச் சிலைக்குப் பின்னாலிருந்து புத்தபிக்ஷுவும் அவருடன் வந்த இளைஞனும் திடீரென்று எழுந்து நிற்பதையும் கண்டாள். அப்போது சிவகாமிக்கு ஏற்பட்ட வியப்பையும் திகைப்பையும் சொல்ல இயலாது.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies