P1 சிவகாமியின் சபதம்..15/16/17

17 Jun,2011
 

இரண்டாவது கட்டைத் தாண்டியதும், மூன்றாவது கட்டு ஒன்று இருந்தது. அது சமையல் கட்டு என்பது, அங்கு வந்த புகையினாலும், அடுப்பிலிருந்து வந்த பலவகை உணவுப் பதார்த்தங்களின் நறுமணங்களினாலும் தெரியவந்தது. தாழ்வாரத்தில் நின்றபடி, "அத்தை!" என்று கூப்பிட்டாள் சிவகாமி. "ஏன், குழந்தாய்?" என்று கேட்டுக்கொண்டு ஒரு மூதாட்டி சமையல் அறை வாசலில் தோன்றினாள். "அதிதிகள் இரண்டுபேர் வந்திருக்கிறார்கள். முன்னொரு தடவை வந்தாரே கடுவன் பூனை போன்ற முகத்துடனே ஒரு புத்த பிக்ஷு அவர் வந்திருக்கிறார்" என்றாள் சிவகாமி. "பெரியவர்களைப்பற்றி இப்படியெல்லாம் சொல்லாதே, கண்ணே நீ எங்கே கிளம்புகிறாய், ரதியையும் அழைத்துக் கொண்டு?" என்று மூதாட்டி கேட்டாள். "அப்பாவும் அந்தப் புத்த பிக்ஷுவும் ஏதோ தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது முடிகிறவரையில் நான் தாமரைக் குளத்துக்குப் போய்வருகிறேன்!" என்று சொல்லி விட்டுச் சிவகாமி சமையற்கட்டைத் தாண்டிச்சென்று வீட்டின் கொல்லைப்புறத்தை அடைந்தாள்.


கொல்லைப்புறத்தில் வீட்டைச் சேர்ந்தாற்போல் மல்லிகை, முல்லை, அலரி, பாரிஜாதம், சம்பங்கி முதலிய பூஞ்செடிகளும் கொடிகளும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் தாண்டி மரங்களடர்ந்த வனப் பிரதேசத்துக்குள்ளே சிவகாமி பிரவேசித்தாள். அந்தக் காட்டில் நடக்கும் போது அவள் ரதியிடம் பின்வருமாறு சொல்லிக்கொண்டு போனாள்.


"என்ன; ரதி! அப்பாவுக்கு என் அரங்கேற்றத்தின்போது இரண்டே இரண்டுபேர் வரவில்லை என்றுதான் வருத்தமாம்! இந்தப் புத்த பிக்ஷு வந்து என் அரங்கேற்றத்தைப் பார்க்கவில்லையென்று வருத்தம் என்ன வந்தது?.. யாருடைய பாராட்டுதலைப் பெறுவதற்காக நான் இரவு பகலாய்ப் படாதபாடுபட்டு இந்த நிருத்தியக் கலையைப் பயின்றேனோ, அவர் அன்றைக்கு வரவில்லை; இந்தப் பெரிய பல்லவ ராஜ்யத்துக்குள்ளே யார் மகா ரசிகரோ, அப்பேர்ப்பட்டவர் வரவில்லை. ஏழு வருடங்களுக்கு முந்தி, நான் உன்னைப் போல் சிறு குழந்தையாய் இருந்த காலத்தில், எவர் என்னுடன் கைகோத்து நின்று தாமும் நடனம் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடித்தாரோ - தமக்கும் நடனக் கலை சொல்லிக் கொடுக்கும்படி எவர் என் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாரோ - அவர் வரவில்லை, ரதி நீயே சொல்லு! ஆண் பிள்ளைகளைப்போல் பொல்லாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா...?" ரதி பாவம், சிவகாமி தன்னிடம் சொல்லிக்கொண்டுவந்த விஷயங்களின் முக்கியத்துவத்தைக் கொஞ்சமும் அறிந்து கொள்ளாமல் ஆங்காங்குத் தரையில் காணப்பட்ட அறுகம்புல்லின் நுனியைக் கடித்து மென்றுகொண்டு வந்தது.


அரை நாழிகை நேரம் அவர்கள் காட்டுக்குள் நடந்து வந்த பிறகு, கொஞ்சம் இடைவெளி காணப்பட்டது. அந்த இடைவெளியில், ஓர் அழகிய தடாகம் இருந்தது. அதில் தாமரை, செங்கழுநீர், நீலோத்பலம் முதலிய மலர்கள் செழித்து வளர்ந்திருந்தன. சிவகாமி அந்தக் குளத்தில் இறங்கி நீர்க்கரை ஓரமாய் நின்று தண்ணீரில் தன்னுடைய நிழலைப் பார்த்தவண்ணம் பேசினாள்.


"ரதி! இதைப் பார்! அவர்மட்டும் இனிமேல் எப்போதாவது வரட்டும்; நான் முகங்கொடுத்துப் பேசப் போவதே இல்லை! 'போதும், உம்முடைய சிநேகிதம்! போய் விட்டு வாரும்!' என்று கண்டிப்பாய்ச் சொல்லுகிறேனா, இல்லையா, பார்!" என்று சொல்லிய வண்ணம், அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள். சிவகாமி குளக்கரையில் வந்து நின்ற சிறிது நேரத்துக்கெல்லாம் காட்டில் சற்றுத் தூரத்தில் ஓர் உயர்ந்த ஜாதிக் குதிரை வந்து நின்றது. அதன்மேல் வீற்றிருந்த வீரன் சத்தம் செய்யாமல் குதிரை மேலிருந்து இறங்கித் தடாகத்தை நோக்கி வந்தான்.

ரதியின் தூது.15

 குதிரை வந்த சப்தம் சிவகாமியின் செவியில் விழுந்தது. குதிரை நின்றதையும் அதன்மேல் வந்த வீரன் இறங்கித் தன்னை நோக்கி நடந்து வருவதையும் அவள் உணர்ந்தாள். வருகிறது இன்னார்தாம் என்பதை அவளுடைய நெஞ்சு அவளுக்கு உணர்த்தியது. இருந்தாலும், திரும்பிப் பார்த்துச் சந்தேகம் தீரவேண்டுமென்ற ஆவல் அளவில்லாமல் எழுந்தது. அந்த ஆவலைப் பலவந்தமாக அடக்கிக்கொண்டு, சிவகாமி சிலையைப்போல் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.


குமார சக்கரவர்த்தி, மாமல்ல நரசிம்மர் கையில் பிடித்த வேலுடன் வந்து சிவகாமியின் அருகில் குளக்கரைப்படியில் நின்றார். குளத்தின் தெளிந்த நீரில் சிவகாமியின் உருவத்துக்குப் பக்கத்தில் நரசிம்மவர்மரின் உருவமும் புலப்பட்டது. அப்போதும் சிவகாமி அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. வீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய நரசிம்மரின் நவ யௌவன முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. அவரும் சிவகாமியை நேராகப் பார்க்காமல், தண்ணீரில் பிரதிபலித்த அவளுடைய முழுமதி முகத்தை உற்று நோக்கினார். சிவகாமி சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளுக்கு இன்னொரு பக்கத்தில் நின்ற மான்குட்டியைப் பார்த்து, "ரதி! இவர் யார்? எதற்காக இங்கு வந்தார் என்று கேள்?" என்றாள்.


இதைக் கேட்ட நரசிம்மரின் முகத்தில் புன்னகை மறைந்தது, புருவங்கள் நெறிந்தன. அவரும் ரதியைப் பார்த்து, "ரதி! உன் எஜமானி பரத கண்டத்திலேயே இணையற்ற பரத கலாராணியாகிவிட்டாள் அல்லவா? பழைய சிநேகத்தை நினைவு வைத்திருக்க முடியுமா? 'இவர் யார்?' என்று கேட்கத்தான் தோன்றும். இது ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை, ரதி!" என்றார்.


சிவகாமி ஆத்திரம் நிறைந்த குரலில் கூறினாள்: "ரதி! ஆச்சரியத்தையே அறியாதவரான சக்கரவர்த்தியின் திருக்குமாரருக்கு என்னுடைய ஆயிரங்கோடி நமஸ்காரத்தைச் சொல்லிவிட்டு இதையும் சொல்லு: அவரோ பூமண்டலாதிபதியின் புதல்வர்! தேசதேசங்களின் ராஜராஜாக்கள் எல்லாம் தம் திருப்பாதங்களில் விழுந்து வணங்கப்பெற்ற பிரபு; அப்பேர்ப்பட்டவர்க்கும் இந்த ஏழைச் சிற்பியின் மகளுக்கும் சிநேகம் எப்படிச் சாத்தியம்? அந்த எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டது என்னுடைய அறிவீனந்தான் என்பதை உணர்ந்து கொண்டேன், ரதி!"


மாமல்லர் பரிகாசம் தொனித்த குரலில் சொன்னார்: "ரதி! உன் எஜமானிக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்து: பரத சாஸ்திர பண்டிதையான சிவகாமி தேவி இப்போது ஆடரங்கத்தில் நிற்கவில்லை; அபிநயம் பிடிக்கவில்லை. நிருத்தம், நிருத்தியம், ஹஸ்தம் அபிநயம் ஆகியவைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து விட்டு என்னுடன் சுபாவிகமாகப் பேசச் சொல்லு!"


இயற்கையில் செவ்வரியோடிய சிவகாமியின் கண்கள் இப்போது கோபத்தினால் கோவைப்பழம்போல் சிவந்தன. "ஆமாம் ரதி, ஆமாம்! நான் நடன அரங்கத்தில் நடிக்கும் நாடகக்காரிதான். காஞ்சிச் சக்கரவர்த்தியின் திருக்குமாரர் எங்கே? ஆயனச் சிற்பியின் மகள் எங்கே? மாமல்லரின் அருளைப் பெறுவதற்கு அரண்மனைகளிலும் அந்தப்புரங்களிலும் வளரும் எத்தனையோ இராஜகுமாரிகள் தவங்கிடக்கிறார்கள்! அரங்க மேடையில் ஏறி ஆடும் இந்த ஏழைப் பெண்ணின் ஞாபகம் அவருக்கு எப்படி இருக்கும்?" என்று சிவகாமி சொன்னபோது, அவளுடைய குரல் தழுதழுத்தது; அவளுடைய கண்களில் நீர் துளித்தது.


நரசிம்மவர்மர் மனங்கனிந்தவராய் அன்பு ததும்பிய குரலில் "சிவகாமி! ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு நான் உண்மையில் தலைவனாகும்போது, அரங்க மேடையில் சதங்கை ஒலிக்க ஆடும் உன் அழகிய பாதங்களுக்கு அந்தப் பதவியை அர்ப்பணம் செய்வேன். என் உள்ளம் உனக்குத் தெரியாதா?" என்றார். இதனாலும் சிவகாமியின் மனம் மாறவில்லை. மீண்டும் அவள் மான் குட்டியையே பார்த்தவளாய், "ரதி! கதைகளிலும் காவியங்களிலும் புருஷர்களுடைய நயவஞ்சகத்தைப் பற்றி எவ்வளவோ கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் அவர்களில் யாரும் காஞ்சி குமார சக்கரவர்த்திக்கு இணையாக மாட்டார்கள்" என்றாள்.


நரசிம்மவர்மருக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்ததென்று அவருடைய புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. "சிவகாமி! ஏன் இன்றைக்கு இவ்விதம் மாறிப்போயிருக்கிறாய்? எவ்வளவோ ஆசையுடன் நான் உன்னைத் தேடி வந்தேன். எவ்வளவோ விஷயங்கள் பேச எண்ணியிருந்தேன். நான் வந்ததே உனக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது இதோ போகிறேன்" என்று ஓர் அடி எடுத்து வைத்தார். அப்போது சிவகாமி விம்மிய குரலில், "ரதி! அவர் போகிறதாயிருந்தால் போகட்டும் ஆனால், குற்றத்தை என் பேரில் சுமத்தி விட்டுப் போகவேண்டாமென்று சொல்லு!" என்றாள். நரசிம்மர் மேலே அடி எடுத்து வைக்காமல் நின்று, "நான் தான் என்ன குற்றம் செய்துவிட்டேன்? அதைச் சொல்லிவிட்டுக் கோபித்துக்கொண்டால் மிகவும் நன்றாயிருக்கும்!" என்றார்.


சிவகாமி பெண் சிங்கத்தைப்போல் கம்பீரமாக அவரைத் திரும்பிப் பார்த்து, "என்னுடைய நடனக் கலையைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் பாராட்டிப் பேசினீர்கள்! எவ்வளவெல்லாம் முகஸ்துதி செய்தீர்கள்! அப்படியெல்லாம் பேசிவிட்டு, என் அரங்கேற்றத்துக்கு ஏன் வராமல் இருந்தீர்கள்?" என்று கண்களில் கனல் பறக்கக் கேட்டாள். நரசிம்மர் 'கலகல'வென்று சிரித்து, "இதை முன்னமேயே கேட்டிருக்கக் கூடாதா? நான் அரங்கேற்றத்துக்கு வரவில்லையென்று உனக்கு யார் சொன்னது? மேல் உப்பரிகையில் என் தாய்மார்களோடு உட்கார்ந்து 'பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அவர்களுக்குப் பரத சாஸ்திர நுட்பங்களைப்பற்றி அவ்வப்போது எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சபையில் நேரில் வந்து உட்கார்ந்தால், ஒருவேளை உன் ஆட்டத்துக்குப் பங்கம் விளையுமோ என்று பயந்தேன். அதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா?" என்று கேட்டபோது, சிவகாமியின் முகத்தில் அதுவரை காணப்படாத மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தோன்றின. நரசிம்மரை ஆர்வத்துடன் நோக்கி, "இதை ஏன் முன்னமே நீங்கள் சொல்லவில்லை?" என்று கேட்டாள்.


"சொல்வதற்கு நீ இடம் கொடுத்தால்தானே? இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டியிருக்கிறது. உன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து பேசலாம், வா!" என்று கூறி, நரசிம்மர் குளக்கரையில் மரத்தடியில் அமைந்திருந்த பலகையைப் பார்த்தவாறு சிவகாமியின் கரத்தைப் பிடித்து அழைத்துப் போக யத்தனித்தார். சிவகாமியோ, அவர் பிடித்த கையைச் சட்டென்று இழுத்துக்கொண்டு, மானைப்போல் துள்ளிக் கரைமீது ஏறினாள். அவர்கள் இருவரும் போய் மரத்தடியில் போட்டிருந்த பலகையில் உட்கார்ந்ததை ரதி தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. இனி நம்முடைய தூது இவர்களுக்குத் தேவையில்லை என்பதைத் தெரிந்துகொண்டதுபோல், அது குளத்தோரமாகக் 'கருகரு'வென்று வளர்ந்திருந்த பசும் புல்லை மேயச் சென்றது


திருமணம்.16
பலகையில் உட்கார்ந்த பிறகும் சிவகாமி வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த நரசிம்மர், "இன்னும் என்ன கோபம், சிவகாமி? இப்படி நீ பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில் என்னிடம் உனக்குப் பிரியம் இல்லை என்றுதான் எண்ணிக்கொள்வேன்" என்றார். சிவகாமி உடனே திரும்பி, நரசிம்மரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, "உங்களுக்கு மட்டும் என்னிடம் பிரியம் இருக்கிறதா? இருந்தால் இந்த மூன்று நாளாக என்னுடைய ஞாபகம் இல்லாமல் போனதேன்?" என்று கேட்டாள்.


"இந்த மூன்று தினங்களாக நானும் உன்னைப் பார்க்க வரவேணுமென்று துடித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் முக்கியமான இராஜாங்க வேலைகள் குறுக்கிட்டன. அன்றைக்கு உன்னுடைய அரங்கேற்றத்தை நடுவில் முடிக்கும்படி நேர்ந்தது ஏன் என்று உனக்குத் தெரியாதா? பல்லவ சாம்ராஜ்யத்தில் பல வருஷங்களாக இல்லாத பெரிய யுத்தம் வந்திருக்கிறது..." இவ்விதம் நரசிம்மர் சொல்லி வந்தபோது சிவகாமி குறுக்கிட்டு, "நானும் கேள்விப்பட்டேன். யுத்தம் வந்து விட்டதே என்று நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களாக்கும்!" என்றாள்.


"கவலையா? ஒருநாளும் இல்லை; சிவகாமி! பல்லவ குலத்தில் பிறந்தவர்கள் யுத்தம் வந்துவிட்டதே என்று கவலைப்பட மாட்டார்கள் குதூகலப்படுவார்கள். என் பாட்டனார் சிம்ம விஷ்ணு மகாராஜாவின் காலத்திலிருந்து பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்தம் நேரவில்லை. பல்லவ சேனா வீரர்களின் கையில் வேல்களும் வாள்களும் துருப்பிடித்து வந்தன. இப்போது அவற்றுக்கெல்லாம் வேலை வந்திருக்கிறது. போர்க்களத்தில் ஆயிரக்கணக்கில் மின்னிப் பாயும் வேல்களையும், வாள்களையும் கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல. ஆனால், உன்னுடைய கரிய விழிகளிலிருந்து கிளம்பிப் பாயும் வாள்களையும் வேல்களையும் கண்டுதான் அஞ்சுகிறேன்!"


சிவகாமி தன்னை மீறி வந்த புன்முறுவலை அடக்கிக் கொள்ள முடியாதவளாய், "புருஷர்களே இப்படித்தான் போலிருக்கிறது. சாதுர்யமாயும் சக்கரவட்டமாயும் பேசி உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்" என்று முணுமுணுத்தாள். ஆனாலும், அந்த வார்த்தைகள் நரசிம்மரின் காதில் விழாமல் போகவில்லை. "பழிமேல் பழியாகச் சுமத்திக் கொண்டிருக்கிறாயே? எந்த உண்மையை நான் மறைக்கப் பார்த்தேன்!" என்று மாமல்லர் கேட்டார். "பின்னே, நீங்கள் யுத்தத்துக்குப் பயப்படுகிறவர் என்று நான் சொன்னேனா? நீங்கள் வீராதி வீரர், சிம்ம விஷ்ணு மகாராஜாவின் பேரர், மகேந்திர சக்கரவர்த்தியின் குமாரர் என்பதெல்லாம் எனக்குத் தெரியாதா? இந்த யுத்தம் வந்ததனால் திருமணம் தடைப்பட்டுவிட்டதே? அதைப்பற்றிக் கவலைப்படுகிறீர்களாக்கும் என்று தானே சொன்னேன்?"


இவ்விதம் சிவகாமி கூறியபோது, அவளுடைய முகத்தில் நாணத்துடன் கோபம் போராடியது. நரசிம்மர் வியப்புடன், "சிவகாமி! என்ன சொல்லுகிறாய்? திருமணம் தடைப்பட்டு விட்டதா? யாருடைய திருமணம்?" என்று கேட்டார். "ஓகோ! உங்களுக்குத் தெரியவே தெரியாதுபோல் இருக்கிறது. நான் சொல்லட்டுமா! காஞ்சி மாநகரத்தில் மகாராஜாதிராஜதிரிபுவன சக்கரவர்த்தி மகேந்திரவர்ம பல்லவர் இருக்கிறாரோ, இல்லையோ, அந்தச் சக்கரவர்த்திக்குத் தேசமெல்லாம் புகழ்பெற்ற மாமல்லர் என்னும் திருக்குமாரர் ஒருவர் உண்டு. அந்தக் குமார சக்கரவர்த்திக்குத் திருமணம் பேசி வருவதற்காக மதுரைக்கும், வஞ்சிக்கும், இன்னும் வட தேசத்துக்கும் தூதர்களை அனுப்ப ஏற்பாடாகி இருந்ததாம். அப்பேர்ப்பட்ட சமயத்தில் யாரோ ஒரு பொல்லாத அரசன் பல்லவ ராஜ்யத்துக்குள் படையெடுத்து வரவே கல்யாணத்தைத் தள்ளிப் போடவேண்டியதாகி விட்டது. இதெல்லாம் தங்களுக்குத் தெரியாதல்லவா? என்றாள் சிவகாமி.


நரசிம்மர் 'கலகல' வென்று சிரித்துவிட்டு, "இதற்குத்தானா இவ்வளவு பாடுபடுத்தினாய்? நான் பயந்து போய் விட்டேன். உனக்குத்தான் ஒருவேளை ஆயனர் திருமணம் நிச்சயம் செய்துவிட்டாரோ என்று! அப்படி ஒன்றும் இல்லையே?" என்றார். சிவகாமி கண்களில் கபடக் குறும்பு தோன்ற அவரைப் பார்த்து, "ஏன் இல்லை? என் தந்தைகூட அடிக்கடி என் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் சிற்ப வேலை கற்றுக்கொள்ளும் கெட்டிக்கார சீடப்பிள்ளை ஒருவனைப் பார்த்து என்னை மணம் செய்து கொடுக்கப் போகிறாராம்" என்றாள்.


"ரொம்ப சந்தோஷம் உன் தந்தை நிஜமாக அப்படிச் சொன்னாரா? அவரை உடனே பார்த்து என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்" என்று நரசிம்மர் கூறிய மறுமொழி சிவகாமியைத் திடுக்கிடச் செய்தது. அவள் தொடர்ந்து கலக்கமுற்ற குரலில், "ஆனால், நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. 'எனக்குக் கல்யாணமே வேண்டாம்! நான் புத்த பிக்ஷுணி ஆகப் போகிறேன்' என்று அப்பாவிடம் சொல்லி விட்டேன்" என்றாள்.


"என்ன? நீயா புத்த பிக்ஷுணி ஆகப் போகிறாய்? ஆயனர் மகளா இப்படிப் பேசுகிறது? சிவபெருமானும் திருமாலும் உனக்கு என்ன தீங்கைச் செய்தார்கள்? சிவகாமி! நம் திருநாவுக்கரசர் பெருமானின் தேனினும் இனிய சைவத் திருப் பாடல்களை நீ கேட்டிருக்கிறாயே? 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்' என்ற தெய்வீகப் பாடலுக்கு அபிநயங்கூடப் பிடித்தாயே? அப்படியிருந்தும், புத்த பிக்ஷுணி ஆக வேண்டுமென்ற எண்ணம் உன் மனத்தில் எப்படி உதித்தது?" என்று நரசிம்மர் சரமாரியாய்ப் பொழிந்தார்.


"எனக்குச் சிவன்பேரிலும் திருமாலின் பேரிலும் வெறுப்பு ஒன்றுமில்லை. கல்யாணத்தின் பேரிலேதான் வெறுப்பு. புத்த பிக்ஷுணியாகி, நான் தேச யாத்திரை செய்யப்போகிறேன்" என்று சிவகாமி தலை குனிந்தவண்ணம் கூறினாள். "சிவகாமி! அந்தமாதிரி எண்ணமே உனக்குத் தோன்றி இருக்கக்கூடாது. மகா மேதாவியான உன் தந்தையின் பேச்சை நீ தட்டலாமா? அவருடைய விருப்பத்தின்படி அவருடைய சீடர்களில் மிகவும் கெட்டிக்காரன் எவனோ, அவனை, நீ மணம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்" என்று நரசிம்மர் கடுமையான குரலில் சொன்னார். "என்னை எந்த அசட்டுப் பிள்ளையின் கழுத்திலாவது கட்டி விடுவதில் உங்களுக்கு என்ன அவ்வளவு சிரத்தை? அரண்மனையில் பிறந்து வளர்ந்த அரசிளங்குமரியை நீங்கள் மணந்து கொள்வதை நான் குறுக்கே நின்று தடுக்கவில்லையே?" என்றாள் சிவகாமி. அவளுடைய கண்களில் நீர் ததும்பி நின்றது.


"ஜாக்கிரதை, சிவகாமி! அசட்டுப் பிள்ளை என்று யாரைச் சொன்னாய்? உன் தந்தையின் சீடர்களுள் ரொம்பக் கெட்டிக்காரன் யார் என்பது உனக்குத் தெரியாதா? ஆயனர் எத்தனையோ தடவை, 'குமார சக்கரவர்த்திக்குச் சிற்பக் கலை வருவதுபோல் வேறு யாருக்கும் வராது' என்று சொல்லியதில்லையா? ஆயனரின் சீடர்களில் மிகவும் கெட்டிக்காரனுக்கு உன்னை மணம் செய்து கொடுப்பதாயிருந்தால் எனக்குத்தானே கொடுக்க வேண்டும்! அதற்காக உன் தந்தைக்கு நான் நன்றி செலுத்தவேண்டாமா?" என்று நரசிம்மர் கூறியபோது, அவருடைய முகத்தில் குறும்பும் குதூகலமும் தாண்டவமாடின.


சிவகாமியோ சட்டென்று பலகையிலிருந்து எழுந்து நின்றாள். "பிரபு! இந்த ஏழைப் பெண்ணுக்கு ஏன் வீண் ஆசை காட்டுகிறீர்கள்...?" என்று கூறி, மேலே பேசமுடியாமல் விம்மி அழத் தொடங்கினாள். நரசிம்மவர்மர் அவளுடைய கரங்களைப்பிடித்து மறுபடியும் பலகையில் தம் அருகில் உட்காரவைத்துக் கொண்டு, 'சிவகாமி! என்னை நீ இன்னும் தெரிந்துகொள்ளவில்லையா? இப்படி நீ கண்ணீர் விடுவதைப் பார்க்கும் போது.." என்று கூறுவதற்குள், சிவகாமி விம்மிக்கொண்டே, "பிரபு! இது ஆனந்தக் கண்ணீர்! துயரக் கண்ணீர் அல்ல!" என்றாள்.

வேலின் மேல் ஆணை!.17
 நரசிம்மர் தமது அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் சிவகாமியின் கண்ணீரைத் துடைத்த வண்ணம், "நினைக்க நினைக்க ஒரு விஷயம் எனக்கு வியப்பையளிக்கிறது!" என்று கூறினார். சற்றுமுன் சிவகாமியின் முகத்தை ரதி ஏறிட்டுப் பார்த்தது போல் இப்போது சிவகாமி நரசிம்மரை ஏறிட்டுப் பார்த்தாள். "அது என்ன வியப்பான விஷயம்?" என்னும் கேள்வியை அவளுடைய கண்களின் நோக்கும், புருவங்களின் நெறிப்பும் கேட்பன போலத் தோன்றின.


நரசிம்மர் சிவகாமியின் முகத்தைக் கண்களால் விழுங்கி விடுபவர்போல் பார்த்துக்கொண்டு கூறினார்: "மூன்று வருஷ காலத்திற்குள் உன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதலைத்தான் சொல்லுகிறேன். உனக்கு ஞாபகம் இருக்கிறதா, சிவகாமி? சக்கரவர்த்தியும் நானும் அந்த நாளில் உங்கள் வீட்டுக்கு வருவோம். என்னைக் கண்டதும் நீ கொஞ்சமும் கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் ஓடி வருவாய். என் கைகளைப் பிடித்துக் 'கரகர'வென்று இழுத்துக் கொண்டு போவாய். நம் இருவருடைய தந்தையரும் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் இன்னொரு பக்கத்தில் கொட்டம் அடிப்போம்! சில சமயம் நான் உன்னை எனக்குப் பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும்படி கேட்பேன். நீ சொல்லிக் கொடுக்க முயல்வாய்; எனக்கு நன்றாய் வராது. அதைக்கண்டு நீ கலகலவென்று சிரிப்பாய். உன்னுடைய முல்லைப்பல் வரிசையைப் பார்த்து நான் மதிமயங்கி நிற்பேன். இன்னும் சிலசமயம் நாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடுவோம். சில சமயம் ஆயனர் அமைத்த கற்சிலைகளுக்கு மத்தியில் நீயும் ஒரு சிலையைப்போல் அசையாமல் நிற்பாய். நானும் வேண்டுமென்றே உன்னைச் சிலையாகப் பாவித்துக்கொண்டு மேலே போவேன். உன்னுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டபிறகு திரும்பிப் பார்த்து உன்னைப் பிடித்துக் கொள்வேன். 'அகப்பட்டுக் கொண்டாயா, சிவகாமி தேவி?' என்று பாடுவேன். இப்படியெல்லாம் நாம் விளையாடுவதைப் பார்த்து நம்முடைய தந்தைமார்களும் சந்தோஷப்படுவார்கள். அதெல்லாம் ஒரு குதூகலமான கனவு மாதிரி இப்போது தோன்றுகிறது."


"பிரபு! நான் ஏதோ மாறிப்போனதாகச் சொன்னீர்கள். எந்தவிதத்தில் மாறியிருக்கிறேன்?" என்று சிவகாமி கேட்டாள். "நல்லவேளை, ஞாபகப்படுத்தினாய் எனக்குப் பதினாறு பிராயம் பூர்த்தியானபோது, சக்கரவர்த்தி என்னைத் தேச யாத்திரைக்கு அழைத்துச் சென்றார். தெற்கே சித்தர் மலையிலிருந்து வடக்கே நாகார்ஜுன மலை வரையில் நாங்கள் யாத்திரை செய்தோம். மேற்கே, காவிரி நதியின் ஜனன ஸ்தானம் வரையில் போயிருந்தோம். யாத்திரையை முடித்துக் கொண்டு நாங்கள் திரும்பி வருவதற்கு மூன்று வருஷம் ஆயிற்று..." "அந்த மூன்று வருஷமும் எனக்கு மூன்று யுகமாக இருந்தது" என்றாள் சிவகாமி.


"மூன்று வருஷம் கழித்து நான் திரும்பி வந்து மறுபடியும் உன்னைப் பார்த்தபோது, நீ பழைய சிவகாமியாகவே இல்லை. தேவ சபையிலிருந்து அரம்பையோ, ஊர்வசியோ வந்து ஆயனர் வீட்டில் வளர்வதாகவே தோன்றியது. உருவ மாறுதலைக் காட்டிலும் உன்னுடைய குணத்திலும் நடவடிக்கையிலும் காணப்பட்ட மாறுதல்தான் எனக்கு அதிக வியப்பை அளித்தது. என்னைக் கண்டதும் நீ முன்போல் ஆர்வத்துடன் ஓடிவந்து வரவேற்கவில்லை; கலகலப்பாகப் பேசவில்லை; தூண் மறைவில் மறைந்து கொண்டு நின்றாய்; நான் உன்னைப் பார்க்கும்போது நீ வேறு பக்கம் திரும்பிக் கொண்டாய்; நான் உன்னைப் பார்க்காத சமயங்களில் கடைக்கண்ணால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாய். தப்பித் தவறி நம் கண்கள் சந்திக்கும் சமயம் உடனே தலையைக் குனிந்துகொண்டாய்; உன்னுடைய கலீரென்ற சிரிப்பு மறைந்துவிட்டது! சில சமயம் உன் கண்களில் நீர் ததும்பி நிற்பதைக் கண்டேன். ஒரு காரணமுமில்லாமல் நீ பெருமூச்சு விடுவதைக் கேட்டேன். எல்லாவற்றையும் விட அதிக வியப்பை எனக்கு அளித்தது என்னவென்றால், என்னை அறியாமல் நானே சில சமயம் பெருமூச்சு விடத் தொடங்கினேன்!.." என்று நரசிம்மர் சொன்னபோது, சிவகாமி கலீர் என்று சிரித்து விட்டாள்.


நரசிம்மர் மீண்டும் தொடர்ந்து கூறினார்: "என் உள்ளத்திலும் ஒரு மாறுதலைக் கண்டேன். இரவும் பகலும் சதா சர்வ காலமும் உன்னுடைய நினைவு என் இருதயத்தில் குடிகொண்டது. அந்த நினைவு, இன்பத்தையும் வேதனையையும் ஏககாலத்தில் அளித்தது. எப்பேர்ப்பட்ட முக்கியமான காரியத்தில் ஈடுபட்டபோதிலும் உன்னை என்னால் மறக்க முடியவில்லை. இந்த நிலைமையில் இந்தத் தாமரைக் குளக்கரையில் ஒருநாள் நாம் தனியாகச் சந்தித்தோம். மூன்று வருஷம் உன்னை வந்து பார்க்காமல் இருந்ததற்காக நீ என்னைச் சண்டை பிடித்தாய். கடைசியில் உன்னை மறப்பதில்லை என்று கையடித்துச் சத்தியம் செய்து கொடுக்கச் சொன்னாய். எனக்குச் சிரிப்பு வந்தது உன்னை ஒருகணமும் மறக்க முடியாமல் நான் திண்டாடிய திண்டாட்டம் எனக்கல்லவா தெரியும்? ஆனாலும், உன்னுடைய மனத்திருப்திக்காகச் சத்தியம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு, இன்றுதான் நாம் இந்தக் குளக்கரையில் சந்திக்கிறோம். ஒருவேளை நீ இங்கு இருக்கமாட்டாயா என்ற ஆசையினால் வந்தேன். வந்து பார்த்தால், நீ இங்கே இருக்கிறாய்! நம்முடைய உள்ளங்கள்தாம் எப்படி ஒத்திருக்கின்றன!" என்று சொல்லி நரசிம்மர் நிறுத்தினர்.


இவ்வளவெல்லாம் சொன்னீர்கள் நான் முதலில் கேட்ட கேள்விக்கு மட்டும் மறுமொழி சொல்லவில்லை!" என்றாள் சிவகாமி. "என்ன கேள்வி அது? தயவு செய்து ஞாபகப்படுத்தினால் நல்லது" என்றார் மாமல்லர். "மதுரைக்கும் வஞ்சிக்கும் திருமணத் தூதர்களை அனுப்புவதாக இருந்த விஷயந்தான்!" நரசிம்மர் இலேசாகச் சிரித்துவிட்டு, "அது உண்மைதான் மகனுக்குக் கல்யாணம் செய்யவேண்டுமென்று எந்தத் தாயாருக்குத்தான் எண்ணமில்லாமலிருக்கும்? என் தாயாருடைய ஏற்பாடு அது! ஆனால், நான் சக்கரவர்த்தியிடம் என் மனநிலையைத் தெரியப்படுத்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள் இந்த யுத்தம் வந்து அதற்கு அவசியமே இல்லாமல் செய்து விட்டது" என்று கூறினார்.


"பிரபு எனக்கு என்னவோ நிம்மதி இல்லை. மூன்றரை வருஷத்துக்கு முன்பு இருந்ததுபோல் நாம் இருவரும் குழந்தைகளாகிவிடக் கூடாதா என்று தோன்றுகிறது." "இல்லை, சிவகாமி! மறுபடியும் குழந்தைகள் ஆவதற்கு ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, தேவி சிவகாமியைப் பார்த்தபிறகு குழந்தை சிவகாமியை நான் விரும்ப முடியாது. இரண்டாவது காரணம், சக்கரவர்த்தி இப்போதே நான் போர்க்களம் போவதற்கு ஆட்சேபிக்கிறார்; நான் குழந்தையாயிருந்தால் சம்மதிப்பாரா?"


"பிரபு! தாங்கள்கூட உண்மையாகவே போர்க்களம் போவீர்களா?" என்று சிவகாமி கவலையுடன் கேட்டாள். "அவசியம் போவேன் என் தந்தையுடன் அதைப்பற்றித் தான் மூன்று நாளாக வாதம் செய்துகொண்டிருக்கிறேன். நூறு வருஷ காலமாக அந்நியர்கள் காலடி வைக்காத பல்லவ சாம்ராஜ்யத்தில் இன்று சளுக்கர்கள் படையெடுத்திருக்கிறார்கள். அவர்களைத் துவம்ஸம் செய்து புத்தி புகட்ட வேண்டாமா?" "பிரபு! அதற்குப் பல்லவ சைனியங்கள் இல்லையா? படைத் தலைவர்கள் இல்லையா? தாங்கள் ஏன் போக வேண்டும்?"


"பல்லவ சைனியங்கள் அன்னியர்களை எதிர்த்து வீரப் போர் புரியும்போது, நான் என்ன செய்வதாம்? அரண்மனையில் உட்கார்ந்து அறுசுவை உண்டி அருந்தி அந்தப்புர மாதர்களுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கட்டுமா? அப்படி நான் இருந்தால், ஆயனர் மகளின் காதலுக்குப் பாத்திரம் ஆவேனா?" சிவகாமி கூறினாள்; "பிரபு! தாங்கள் போர்க்களம் போவதைத் தடுப்பவள் நானல்ல. தாராளமாய்ச் சென்று பகைவர்களை வென்று வாகைமாலை சூடி வாருங்கள், ஆனால்.." "ஆனால், என்ன?" "என்னுடைய கோரிக்கையைப் பரிகாசம் செய்யக் கூடாது." "இல்லை, சிவகாமி, சொல்லு!" "வள்ளியம்மைக்கு சுப்பிரமணியர் சத்தியம் செய்து கொடுத்ததுபோல், உங்கள் கையிலுள்ள வேலின் மேல் ஆணை வைத்துச் சொல்லுங்கள், போர்க்களத்திலும் என்னை மறப்பதில்லையென்று!"


நரசிம்மர் புன்முறுவல் செய்து, "இவ்வளவுதானே? 'என்னை மறந்துவிடுங்கள்' என்று நீ ஆணையிடச் சொன்னால்தான் என்னால் முடியாது! மறக்காமலிருப்பதற்கு எத்தனை தடவை வேணுமானாலும் செய்கிறேன். இதோ...!" என்று வேலைத் தூக்கிப் பிடித்தவர், சட்டென்று தயங்கி நின்றார். "பிரபு! ஏன் தயங்குகிறீர்கள்? அதற்குள்ளே மனம் மாறி விட்டதா?" என்றாள் சிவகாமி. "இல்லை, சிவகாமி இல்லை! இந்த வேல் என்னுடையதில்லையே! இன்னொருவருடைய வேலின்மேல் ஆணையிடலாமா என்றுதான் நான் யோசிக்கிறேன்." "உங்களுடைய வேல் இல்லையா? பின் யாருடையது?"


"அரங்கேற்றத்தன்று மதயானையின்மேல் வேல் எறிந்து ஆயனரையும் உன்னையும் தப்புவித்தானே, அந்த வீர வாலிபனுடையது. அந்த மகாவீரனை நேரில் கண்டு அவனிடம் கொடுக்க வேண்டுமென்று வைத்திருக்கிறேன்." "அப்புறம் அந்த வாலிபனை நீங்கள் பார்க்கவே இல்லையா?" என்று சிவகாமி கேட்டாள். "மூன்று நாளாக நாடு நகரமெல்லாம் தேடுகிறோம்; அவன் மட்டும் அகப்படவில்லை." "பிரபு! அவன் இருக்குமிடம் சொன்னால், எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டாள் சிவகாமி. "அவன் இருக்குமிடம் உனக்குத் தெரியுமா? சீக்கிரம் சொல், சிவகாமி! உனக்கு என்னையேதான் கொடுத்திருக்கிறேனே! வேறு என்ன தரப்போகிறேன்?"


"அந்த வாலிபன் இப்போது எங்கள் வீட்டில் இருக்கிறான்." நரசிம்மர் துள்ளி எழுந்து, "என்ன சொல்லுகிறாய் சிவகாமி! உங்கள் வீட்டுக்கு அவன் எப்படி வந்தான்?" என்று கேட்டார். "முன்னே உங்களிடம் சொன்னேனல்லவா, ஒரு புத்த பிக்ஷு அடிக்கடி வந்து அப்பாவையும் என்னையும் வடநாட்டுக்கு வரும்படி அழைத்துக்கொண்டிருக்கிறார் என்று; அந்த நாகநந்தி அடிகள் தான் அழைத்துக்கொண்டு வந்தார்." "ஆகா! சக்கரவர்த்தி கூறியது உண்மையாயிற்று..சிவகாமி! அதோ கேள்!" என்றார் நரசிம்மர்.


தூரத்தில் பேரிகை முழக்கம், சங்கநாதம், குதிரைகளின் காலடிச் சத்தம் கலந்து கேட்டன. "யார், சக்கரவர்த்தியா?" என்றாள் சிவகாமி. "ஆம்; சக்கரவர்த்திதான் வருகிறார் இதோ! நான் போய்ச் சக்கரவர்த்தியுடன் சேர்ந்துகொள்கிறேன். நீயும் சீக்கிரம் வீடு வந்து விடுவாயல்லவா?" "குறுக்கு வழியாக வந்துவிடுவேன்; பிரபு! தாங்கள் போர்க்களம் போவதற்கு முன்னால் இங்கே மறுபடியும் வருவீர்களா?" "அவசியம் வருகிறேன்! உன் கருவிழிகளில் மின்னும் வேல்களின்மீது ஆணை!" என்று சொல்லிவிட்டு நரசிம்மர் திரும்பிப் பார்த்துக்கொண்டே விரைந்து சென்று குதிரை மீதேறினார். அவர் போவதை மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற சிவகாமி, குதிரை காட்டுக்குள் மறைந்ததும் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள். வீட்டிலிருந்து வந்தபோது அவளுடைய நடையில் காணப்படாத மிடுக்கும் குதூகலமும் இப்போது காணப்பட்டன. ரதியை அவள் மறந்து சென்றாலும், அவள் போவதைப் பார்த்துவிட்டு ரதி பின் தொடர்ந்து துள்ளி ஓடிற்று.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies