தெய்வமாக் கலை.12
அரண்ய மத்தியில் அமைந்த ஆயனர் வீட்டின் உட்புறம் கண்கொள்ளாக் காட்சியளித்தது. வெளித் தாழ்வாரத்தையும் முன் வாசற்படியையும் தாண்டி உள்ளே சென்றதும், நாலுபுறமும் அகன்ற கூடங்களும், நடுவில் விசாலமான முற்றமாக அமைந்த பெரிய மண்டபமும் காணப்பட்டன. முற்றத்துக்கு மேலே மண்டபம் எடுப்பாகத் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. கூடங்களில் ஓரங்களில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் நின்றன. அவை மேல் மண்டபத்தைத் தாங்குவதற்காக நின்றனவோ, அல்லது அலங்காரத்துக்காக நின்றனவோ என்று சொல்ல முடியாமல் இருந்தது.
நாலு புறத்துச் சுவர்களிலும் விதவிதமான வர்ணங்களில் அழகழகான சித்திரங்கள் காணப்பட்டன. அந்தச் சித்திரங்களில் ஸரீநடராஜ மூர்த்தியின் நாதாந்த நடனம், தாண்டவ நடனம், குஞ்சித நடனம், ஊர்த்வ நடனம் ஆகிய தோற்றங்கள் அதிகமாக இருந்தன. அம்மாதிரியே ஓர் அழகிய இளம் பெண்ணின் பலவகை அபிநய நடனத் தோற்றங்களும் அதிகமாகக் காட்சியளித்தன. முற்றத்தில் பெரிய கருங்கற்களும், உடைந்த கருங்கற்களும், பாதி வேலை செய்யப் பெற்ற கருங்கற்களும் கிடந்தன. ஒரு பக்கத்துக் கூடத்தில் வேலை பூரணமாகி ஜீவ களையுடன் விளங்கிய சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சித்திரங்களில் தோன்றிய அதே இளம் பெண்ணின் மோகன வடிவந்தான் அந்தச் சிலைகளிலும் விளங்கின. ஒவ்வொரு சிலையும் பரத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் ஒன்றைக் குறிப்பிடுவதாயிருந்தது.
ஆனால், நாம் குறிப்பிடும் சமயத்தில் அந்தச் சிற்ப மண்டபத்துக்குள் பிரவேசிப்பவர்கள் மேற்கூறிய சிற்ப அதிசயங்களையெல்லாம் கவனம் செலுத்திப் பார்த்திருக்க முடியாது. அவர்களுடைய கருத்தையும் கண்களையும் அம்மண்டபத்தின் ஒரு பக்கத்துக் கூடத்தில் தோன்றிய காட்சி பூரணமாகக் கவர்ந்திருக்கும். சித்திரங்களிலும் சிலைகளிலும் தோற்றமளித்த இளம் பெண்ணானவள் அங்கே சுயமாகவே தோன்றி, கால் சதங்கை 'கலீர் கலீர்' என்று சப்திக்க நடனமாடிக் கொண்டிருந்தாள், அவளுக்கெதிரே சற்றுத் தூரத்தில் ஆயனச் சிற்பியார் உட்கார்ந்து கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று, "நில்!" என்றார், அந்த க்ஷணமே சிவகாமியும் ஆட்டத்தை நிறுத்தி, அப்போது நின்ற நிலையிலேயே அசையாமல் நின்றாள். ஆயனர் கையில் கல்லுளியை எடுத்தார். அவர் அருகில் ஏறக்குறைய வேலை பரிபூரணமான ஒரு சிலை கிடந்தது. அதன் கண் புருவத்தின் அருகே ஆயனர் கல்லுளியை வைத்து, இலேசாகத் தட்டினார். மறுபடியும் சிவகாமியை நிமிர்ந்து பார்த்து, "சற்று இரு! அம்மா!" என்று கூறி, மேலும் அச்சிலையின் புருவங்களில் சிறிது வேலை செய்தார். பிறகு, "போதும்! குழந்தாய்! இங்கே வந்து உட்கார்!" என்றார்.
காமி ஆயனர் அருகில் சென்று உட்கார்ந்தாள். அவள் முகத்தில் முத்து முத்தாகத் துளித்திருந்த வியர்வையை ஆயனர் தம் அங்கவஸ்திரத்தினால் துடைத்துவிட்டு, "அம்மா! சிவகாமி! பரத சாஸ்திரத்தை எழுதினாரே, அந்த மகா முனிவர் இப்போது இருந்தால் உன்னிடம் வந்து அபிநயக் கலையின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கும். கண் பார்வையிலும், புருவத்தின் நெறிப்பிலும் என்ன அற்புதமாய் நீ மனோபாவங்களைக் கொண்டு வந்து விடுகிறாய்? நடன கலைக்காகவே நீ பிறந்தவள்!" என்றார்.
"போதும் அப்பா, போதும் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!" என்ற அலுப்பான குரலில் கூறினாள் சிவகாமி. "பிடிக்கவில்லையா? என்ன பிடிக்கவில்லை?" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார். "நான் பெண்ணாகப் பிறந்ததே பிடிக்கவில்லை!" என்றாள் சிவகாமி. "சிவகாமி! இது என்ன இது? மூன்று நாளாகத்தான் உடம்பு நன்றாக இல்லை என்று சொன்னாய். இன்றைக்கு ஏன் இத்தனை வெறுப்பாய்ப் பேசுகிறாய்? என் பேரில் ஏதாவது கோபமா?" என்று ஆயனர் பரிவுடன் கேட்டார். "உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம், அப்பா! பரத சாஸ்திரம் என்று ஒன்றை எழுதினாரே, அந்த முனிவரின் பேரில்தான் கோபம். எதற்காக இந்தக் கலையை கற்றுக் கொண்டோம் என்றிருக்கிறது" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சிவகாமி.
"ஆகா! என்ன வார்த்தை சொன்னாய்? பரத முனிவரின் பேரில் கோபமா? சிவகாமி! நிருத்யக் கலையில் நீ அபூர்வமான தேர்ச்சியடைந்திருக்கிறாய். ஆனால், அந்தக் கலையின் பெருமையை நீ உணரவில்லை. நிருத்யக் கலைதான் மற்ற எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. சிவகாமி! அதனாலேதான் இதைத் தெய்வமாக் கலையென்றும், பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள், நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்து தான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவதத்துவத்தை அறிய முடியாது. அம்மா! அன்றைக்கு ருத்ராச்சாரியாரே இதை ஒப்புக் கொண்டுவிட்டார்..." "யார் ருத்ராச்சாரியார்? சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் பெரிய வெள்ளைத் தாடியோடு உட்கார்ந்திருந்தாரே, அவரா?"
"ஆம்; அவர்தான் நமது மகேந்திர சக்கரவர்த்தியின் சங்கீத ஆசிரியர். சங்கீதத்தைப் பற்றிச் சாஸ்திரம் எழுதியிருக்கிறார். இப்போது கிழவருக்கு வயது அதிகமாகிவிட்டது. இருந்தாலும் தடியை ஊன்றிக்கொண்டு உன்னுடைய அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். உன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டார். சபை கலைந்தவுடனே அவர் என்னைக் கூப்பிட்டு, 'உன் மகள் நன்றாயிருக்கவேண்டும் அவள்தான் இன்று என் குருட்டுக் கண்களைத் திறந்து, ஒரு முக்கியமான உண்மையை உணரச் செய்தாள். நான் சங்கீத சாஸ்திரம் எழுதியிருக்கிறேனே, அதெல்லாம் சுத்தத் தவறு. பரத சாஸ்திரம் பயிலாமல் நான் சங்கீதத்தைப் பற்றி எழுதியதே பெரும் பிசகு!' என்று சொன்னார். சங்கீத மகாசாகரமாகிய ருத்ராச்சாரியாரே இவ்வாறு சொல்லுகிறதென்றால்..."
"அப்பா! யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு என்னமோ ஒன்றும் பிடிக்கவில்லை. பரத, சங்கீதம், சிற்பம், சித்திரம் இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம்?" "சிவகாமி! நீதானா கேட்கிறாய் கலைகளினால் என்ன பிரயோஜனம் என்று? மகளே! நான் கேட்கிறதற்கு விடை சொல். வஸந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குவதனால் என்ன பிரயோஜனம்? பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம்? மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன்? கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்ததில்லையா? இன்றைக்கு ஏன் இப்படிப் பேசுகிறாய், அம்மா?"
சிவகாமி மறுமொழி சொல்லாமல் எங்கேயோ பார்த்தவண்ணம் இருந்தாள். காதளவு நீண்ட அவளுடைய கரிய கண்களில் முத்துப்போல் இரு கண்ணீர்த் துளிகள் துளித்து நின்றன. இதைப் பார்த்த ஆயனர் திடுக்கிட்டவராய்ச் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, சிவகாமியின் கூந்தலை அருமையுடன் தடவிக் கொடுத்த வண்ணம் கூறினார்.
"அம்மா! எனக்குத் தெரிந்தது, உன்னை அறியாப் பிராயத்துச் சிறு குழந்தையாகவே நான் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன் அது தவறுதான். உனக்குப் பிராயம் வந்து உலகம் தெரிந்து விட்டது. உன்னை ஒத்த பெண்கள் கல்யாணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாய் வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறாய், உன் அன்னை உயிரோடு இருந்திருந்தால், இத்தனை நாளும் உனக்குக் கல்யாணம் செய்து வைக்கும்படி என் பிராணனை வாங்கியிருப்பாள். ஆனால், நானும் அந்தக் கடமையை மறந்து விடவில்லை. சிவகாமி! பரத சாஸ்திரத்தில் சொல்லி இருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் நாற்பத்தெட்டு தோற்றங்களைச் சிலைகளில் அமைத்துவிட்டேன். இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே, உனக்குத் தக்க மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்!"
இவ்விதம் ஆயனர் சொன்னபோது சிவகாமி கண்களைத் துடைத்துக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்து, "கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். அப்பா! எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களைத் தனியாக விட்டு விட்டு நான் போவேனா? அத்தகைய கிராதகி அல்ல நான்!" என்றாள். உண்மை என்னவென்றால், சிவகாமியைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதில் ஆயனருக்கு அந்தரங்கத்தில் விருப்பம் கிடையாது. குழந்தைப் பிராயத்திலிருந்து அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தவர் அவர். கல்வியும் கலையும் பயில்வித்தவர் அவர். பெண்ணை விட்டுப் பிரிந்து ஒரு நிமிஷங்கூடத் தாம் உயிர் வாழ முடியாது என்று ஆயனர் எண்ணினார். ஆனாலும், என்றைக்காவது ஒரு நாள் அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துத்தானே ஆக வேண்டும் என்னும் நினைவு அடிக்கடி அவர் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தது.
எனவே, சிவகாமியின் கல்யாணத்தைப் பற்றி அவர் சில சமயம் பிரஸ்தாபிப்பது உண்டு. அப்போதெல்லாம் சிவகாமி, "எனக்குக் கல்யாணம் வேண்டாம்" என்று மறுமொழி கூறுவதைக் கேட்பதில் அவருக்கும் மிகவும் ஆனந்தம். இன்றைக்கும் சிவகாமியின் மறுமொழி ஆயனருக்கு ஆறுதலை அளித்தது. எனினும், அவர் மேலும் தொடர்ந்து, "அதெப்படி, சிவகாமி! மணம் செய்து கொடுக்காமலே நான் உன்னை என் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா? உலகம் ஒப்புக்கொள்ளுமா? ஒரு தகுந்த பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் இந்த யுத்தம் ஒன்று வந்து தொலைந்திருக்கிறது. இதனால் நமது குமார சக்கரவர்த்தியின் திருமணம்கூடத் தடைப்படும் போலிருக்கிறது."
சிவகாமியின் முகத்தில் அப்போது ஒரு அதிசயமான மாறுதல் காணப்பட்டது. ஆங்காரத்தினால் ஏற்பட்ட கிளர்ச்சி அந்த அழகிய முகத்தை இன்னும் அழகுபடுத்தியது. "என்ன அப்பா சொல்கிறீர்கள்? யாருக்குத் திருமணம்? குமார சக்கரவர்த்திக்கா?" என்றாள். "ஆமாம்! மாமல்லருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடத்த வேண்டுமென்று மகாராணிக்கு மிகவும் ஆசையாம். யுத்தம் முடிந்த பிறகுதான் கல்யாணம் என்று சக்கரவர்த்தி சொல்லிவிட்டாராம். இதனால் புவன மாதேவிக்கு மிகுந்த வருத்தம் என்று கேள்வி."
சிவகாமி குரோதம் ததும்பிய குரலில், "அப்பா! யார் வேணுமானாலும் கல்யாணம் செய்துகொள்ளட்டும்! அல்லது செய்து கொள்ளாமல் இருக்கட்டும். நான் என்னவோ கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை" என்றாள். ஆயனர் மீண்டும், "அதெப்படி முடியும், சிவகாமி! சைவ குலத்துப் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் எப்படி வைத்திருக்கலாம்? நாலு பேர் கேட்டால், நான் என்ன சொல்லுவது?" என்றார். "அப்பா! நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் புத்த மதத்தைச் சேர்ந்த பிக்ஷுணியாகி விடுகிறேன். அப்போது உங்களை ஒருவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்" என்றாள் சிவகாமி. அவள் இவ்விதம் சொல்லி வாய்மூடிய அதே சமயத்தில், வாசற்புறத்தில் "புத்தம் சரணம் கச்சாமி" என்று குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள் வாசற்படிக்கு அருகில் நாகநந்தி அடிகளும், அவருக்குப் பின்னால் வியப்புடன் உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டு பரஞ்சோதியும் நின்று கொண்டிருந்தார்கள்.
அமர சிருஷ்டி.13
புத்த பிக்ஷுவின் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த ஆயனர், விரைந்தெழுந்து, "வாருங்கள்! அடிகளே வாருங்கள்!" என்று கூறிக்கொண்டே வாசற்படியண்டை சென்றார். சிவகாமி அவசரமாக எழுந்து அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள். உள்ளே பிரவேசித்த பிக்ஷு நாலாபுறமும் சுற்றிப் பார்த்து விட்டு "ஆயனரே! நான் சென்ற தடவை வந்துபோன பின்னர், புதிய சிலைகள் செய்திருக்கிறீர்களோ?" என்றார். "ஆம், சுவாமி! அப்புறம் பன்னிரண்டு ஹஸ்த வகைகளை அமைத்திருக்கிறேன். இதோ பாருங்கள்! இந்தச் சிலைகளெல்லாம் புதியவை!" என்றார் ஆயனர்.
பிக்ஷு ஆயனர் காட்டிய சிலைகளைக் கண்ணோட்டமாய்ப் பார்த்துவிட்டு, தூணைப் பிடித்துக் கொண்டு நின்ற சிவகாமியை நோக்கியபடி, "அதோ அந்தத் தூணின் அருகில் நிற்பதும், சிலைதானோ?" என்று வினவினார். அப்போது புத்த பிக்ஷுவின் கடூர முகத்தில் தோன்றிய புன்னகை அந்த முகத்தின் விகாரத்தை அதிகமாக்கிற்று. ஆயனர் சிரித்துக்கொண்டே, "இல்லை சுவாமி! அவள் என் பெண் சிவகாமி!... குழந்தாய்! இதோ, நாகநந்தி அடிகள் வந்திருக்கிறார், பார்! பிக்ஷுவுக்கு வந்தனம் செய்!" என்றார். சிவகாமி அச்சமயம், நாகநந்திக்குப் பின்னால் வந்த இளைஞனைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆயனர் கூறியதைக் கேட்டதும் பிக்ஷுவின் பக்கம் திரும்பி நமஸ்கரித்தாள்.
பிக்ஷுவுடன் உள்ளே பிரவேசித்த பரஞ்சோதி அந்தச் சிற்ப மண்டபத்தில் நாலாபுறமும் காணப்பட்ட அதிசயங்களைப் பார்த்த வண்ணம் வாசற்படிக்கு அருகிலேயே பிரமித்துப்போய் நின்றான். அம்மாதிரியான அபூர்வ வேலைப்பாடமைந்த சிற்பங்களையும் சித்திரங்களையும் அவன் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை. இடையிடையே அவன் ஆயனர், சிவகாமி இவர்களையும் கவனித்தான். அன்று பல்லக்கில் அமர்ந்திருந்தவர்கள் - மதயானையின் கோபத்திலிருந்து தன்னால் காப்பாற்றப்பட்டவர்கள் அவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டான்.
புத்த பிக்ஷுவை ஆர்வத்துடன் வரவேற்று அவருடன் பேசிக் கொண்டே சென்ற ஆயனர் பரஞ்சோதியைக் கவனிக்கவே இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. ஆனால், தூணருகில் நின்ற அவருடைய மகள் அவ்வப்போது தன்னைக் கடைக் கண்ணால் கவனிப்பதைப் பரஞ்சோதி தெரிந்துகொண்டான். நடனத்துக்குரிய ஆடை ஆபரணங்களை அணிந்து நின்ற சிவகாமியின் நவ யௌவன சௌந்தர்யத்தின் ஒளி பரஞ்சோதியின் கண்களைக் கூசச் செய்தது.
கிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவனும், இயற்கையில் சங்கோசமுடையவனும், தாயைத் தவிர வேறு பெண்களுடன் பழகி அறியாதவனுமான பரஞ்சோதியினால் சிவகாமியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அதிலும், சிவகாமி தன்னைக் கவனிக்கிறாள் என்பதை அவன் அறிந்த பின்னர். அவர்கள் இருந்த பக்கமே திரும்பாமல் எதிர்ப்புறக் கூடத்தில் காணப்பட்ட சிலைகளைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான் அந்தச் சிலைகளின் தோற்றத்திலும், முக பாவத்திலும் ஏதோ ஓர் அதிசயம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்த அதிசயம் இன்னதென்பது மின்வெட்டைப் போல் அவன் உள்ளத்தில் உதித்தது. ஆ! இந்தச் சிலைகள் எல்லாம் தூணருகில் நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் பல்வேறு தோற்றங்கள் தாம்! இந்த உண்மையை அவன் உள்ளம் கண்டதும், சிவகாமியினிடம் அவனுக்குத் தெய்வங்களிடம் உண்டாவது போன்ற பயபக்தி உண்டாயிற்று.
சிவகாமி புத்த பிக்ஷுவை நமஸ்கரித்தபோது அவர் ஆர்வம் ததும்பிய விழிகளால் அவளை விழுங்குபவர்போல் பார்த்துவிட்டு "புத்த தேவர் அருளால் உன் கோரிக்கை நிறைவேறட்டும், அம்மா! புத்த பிக்ஷுணி ஆக விரும்புவதாகச் சற்று முன்னால் நீதானே சொல்லிக்கொண்டிருந்தாய்?" என்றார். இந்த ஆசி மொழியானது சிவகாமிக்கு அருவருப்பை உண்டாக்கியது என்று அவள் முகபாவத்தில் தெரிந்தது. ஆயனருக்கும் அது பிடிக்கவில்லையென்பது அவருடைய வார்த்தைகளில் வெளியாயிற்று.
"அடிகளே! குழந்தை ஏதோ வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நாலு நாளைக்கு முன்னால் காஞ்சியில், சிவகாமியின் அரங்கேற்றம் நடந்தது. ஆகா! தாங்கள் அதற்கு இல்லாமல் போய்விட்டீர்களே!" என்றார் ஆயனர். "எல்லாம் கேள்விப்பட்டேன் அரங்கேற்றம், அதற்குப் பின்னால் நடந்தவை எல்லாம் அறிந்து கொண்டேன். உங்களுக்குப் பெரிய ஆபத்து வந்ததாமே? மதயானையின் கோபத்துக்குத் தப்பினீர்களாமே!" என்றார் பிக்ஷு.
"ஆம், சுவாமி! ஏதோ தெய்வத்தின் அருள் இருந்தபடியால் தப்பிப் பிழைத்தோம்... தங்களுக்குச் சாவகாசம் தானே? இன்று பிக்ஷை இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறி, ஆயனர், பிக்ஷுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். "ஆகா! எனக்குச் சாவகாசந்தான் இன்றைக்குத் தங்கள் கிருஹத்திலே பிக்ஷை என்று எண்ணிக் கொண்டுதான் வந்தேன். தங்களுக்கு அதிகச் சிரமம் இல்லாவிட்டால்...?" என்று பிக்ஷு கூறுவதற்குள் "சிரமமா? என்னுடைய பாக்கியம்!" என்றார் ஆயனர்.
முற்றத்தில் கிடந்த இரண்டு பெரிய கற்களில் இருவரும் எதிர் எதிராக அமர்ந்தார்கள். "அம்மா, சிவகாமி! நீயும் உட்காரலாமே? அடிகளுக்குக் கலைகளில் அபார பிரேமை, தெரியுமோ, இல்லையோ?" என்று ஆயனர் கூறிவிட்டு, பிக்ஷுவைப் பார்த்துச் சற்று மெதுவான குரலில், "அடிகளே! அஜந்தா சித்திரங்களைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா?" என்று கேட்டார். அப்போது அவருடைய முகத்தில் அளவிடக்கூடாத ஆர்வம் தோன்றியது. ஆயனர் உட்காரச் சொல்லியும் சிவகாமி உட்காரவில்லை. தூணைப் பிடித்துக்கொண்டே நின்றாள். அவளுடைய கவனம் இவர்களுடைய பேச்சில் இருந்தபோதிலும், இடையிடையே கண்கள் பரஞ்சோதியையும் கவனித்தன. புத்த பிக்ஷு ஆயனரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லாமல், "ஆயனரே! தெய்வத்தின் சிருஷ்டியைக் காட்டிலும் தங்களுடைய சிருஷ்டியே மேல் என்று எனக்குத் தோன்றுகிறது!" என்றார்.
"சுவாமி.." என்று ஆயனர் மறுமொழி சொல்ல ஆரம்பித்தபோது, பிக்ஷு அதற்கு இடங்கொடாமல் தொடர்ந்து சொன்னார்: "நான் முகஸ்துதி செய்யவில்லை, ஆயனரே! உண்மையைச் சொல்லுகிறேன். தெய்வத்தின் சிருஷ்டி அழிந்து போகக் கூடியது. இந்த மனித உடம்புக்கு நூறு வயதுக்கு மேல் கிடையாது. நரை, திரை, மூப்புத் துன்பங்கள் மனித தேகத்துக்கு உண்டு. ஆனால், நீர் அமைத்திருக்கிறீரே, இந்த அற்புதச் சிலைகள், இவற்றுக்கு அழிவே இல்லையல்லவா? நரை, திரை, மூப்புத் துன்பம் இந்தச் சிலைகளை அணுகாவல்லவா? கல்லால் அமைந்த இந்தச் சிலைகளில் விளங்கும் ஜீவகளை ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் ஆனபோதிலும் மங்காமல் பிரகாசிக்குமல்லவா? உம்முடைய சிருஷ்டி தெய்வ சிருஷ்டியைக் காட்டிலும் மேல் என்பதில் சந்தேகம் என்ன?"
இதையெல்லாம் கேட்ட ஆயன சிற்பியின் முகத்தில் கலை ஞானத்தின் கர்வம் தாண்டவமாடியது. "அடிகளே! தாங்கள் சொல்லும் பெருமை எல்லாம் சிவகாமிக்கே சேரும். நடனக் கலையில் அவள் இவ்வளவு அற்புதத் தேர்ச்சி அடைந்திராவிட்டால், இந்தச் சிலை வடிவங்களை நான் எப்படி அமைத்திருக்க முடியும்?.. ஆஹா! குழந்தையின் அரங்கேற்றத்துக்கு நீங்கள் இல்லாமல் போய்விட்டீர்களே! ருத்ராச்சாரியார் பிரமித்து ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அன்றைக்கு இரண்டுபேர் இல்லாமல் போனதாலே தான் எனக்கு வருத்தம். தாங்களும் இல்லை; நாவுக்கரசர் பெருமானும் இல்லை..."
"ஆமாம், ஆமாம்! ஆயனரே! நாவுக்கரசர் சிவகாமியின் அரங்கேற்றத்தின்போது இருந்திருந்தால் ரொம்பவும் குதூகலமடைந்திருப்பார். முக்கியமாக, சக்கரவர்த்தியின் 'மத்தவிலாச'த்திலிருந்து எடுத்து அபிநயம் செய்த கட்டத்தை ரொம்பவும் ரசித்திருப்பார் நாவுக்கரசர். மதுபானம் செய்த புத்த பிக்ஷுவும் காபாலிகனும் சண்டையிட்ட இடம் வெகு ரசமாக இருந்திருக்குமே?" ஆயனரின் முகம் சிறிது சுருங்கிற்று. "சுவாமி! ஹாஸ்ய ரஸத்தைக் காட்டுவதற்காக அந்த விஷயத்தைச் சிவகாமி எடுத்துக் கொண்டாள். மற்றபடி அவளுக்கு மகான்களாகிய புத்த பிக்ஷுக்களைப் பரிகசிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை!" என்றார்.
மகா ரசிகரும் சகல கலைகளிலும் வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி ஜைனராயிருந்தபோது, 'மத்த விலாஸம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை இயற்றியிருந்தார். அதில் காபாலிகர்களும் புத்த பிக்ஷுக்களும் பெருங்கேலிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். அந்த நாடகத்தில் ஒரு பகுதியைச் சிவகாமி அபிநயத்துக்கு விஷயமாக எடுத்துக் கொண்டிருந்தாள். அதைக் குறித்துத்தான் மேற்கண்ட பேச்சு நடந்தது பின்னர் பிக்ஷு சொன்னார்.
"வாஸ்தவந்தான்; ஹாஸ்ய ரசத்தை அபிநயித்துக் காட்ட மிகவும் பொருத்தமான சம்பவம். காபாலிகன் புத்த பிக்ஷுவின் தலைக் குடுமியைப் பிடிக்கப் பார்த்து, மொட்டைத் தலையைத் தடவி விட்டுக் கீழே விழும் கட்டத்தில் ஹாஸ்ய ரசம் ததும்பியிருக்கும்! ஆனால், சபையோர் சிரித்து முடிவதற்குள்ளே ஏதோ யுத்தத்தைப் பற்றிய செய்தி வந்து, சக்கரவர்த்தி எழுந்து போய் விட்டாராமே? சபையும் கலைந்துவிட்டதாமே?.." "ஆமாம், ஆமாம்! அதுதான் சற்று மனக் கிலேசத்தை அளித்தது. அதனாலேயே சிவகாமிகூட நாலு நாளாக உற்சாகமில்லாமல் இருந்தாள். அரங்கேற்றத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் மறுபடியும் காலில் சதங்கை கட்டிக் கொண்டாள். அடிகளே, யுத்தம் எதற்காக வருகிறது? எதற்காக ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாகவேண்டும்?" என்றார் ஆயனர்.
"ஆயனரே! அந்தக் கேள்வியை ஏழை பிக்ஷுவாகிய என்னிடம் கேட்டு என்ன பிரயோஜனம்? உலகத்திலுள்ள திரிபுவன சக்கரவர்த்திகளையும், குமார சக்கரவர்த்திகளையும், மகாராஜாக்களையும் யுவ ராஜாக்களையும், சிற்றரசர்களையும் படைத் தலைவர்களையும் கேட்கவேண்டும். கொலையும் கொடூரமும் நிறைந்த இந்த உலகத்தில் புத்த பகவான் அவதரித்து அன்பு மதத்தைப் பரப்பினார். அதற்காகப் பிக்ஷுக்களின் சங்கத்தையும் ஸ்தாபித்தார். அந்தப் புத்த பிக்ஷுக்களை ராஜ சபைகளில் பரிகசித்துச் சிரிக்கும் காலம் இது! யுத்தம் ஏன் வருகிறது என்று என்னைக் கேட்டு என்ன பயன்?"
அந்தப் பொல்லாத புத்த பிக்ஷுவிடம், பேச்சு யுத்தத்தில் அகப்பட்டுக்கொண்டு தன் தந்தை திணறுவதைச் சிவகாமி அறிந்தாள். அவளுடைய கண்களில் கோபக் கனல் வீசிற்று. அவள், "அப்பா! புத்த பகவான் அன்பு மதத்தையும் அஹிம்சா தர்மத்தையும் உபதேசித்தது உண்மைதான். ஆனால் இந்தக் காலத்தில் அந்தப் புத்த பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு போலி பிக்ஷுக்கள் தோன்றி, மக்களை வஞ்சித்து ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான் யுத்தம் முதலிய விபரீதங்கள் வருகின்றன!" என்றாள்.
ஆயனருக்கு, 'இதேதடா வம்பு?' என்று தோன்றியது. அங்கிருந்து சிவகாமியை எப்படியாவது அனுப்பிவிட எண்ணி அவளை இரக்கம் தோன்றப் பார்த்து, "குழந்தாய், சிவகாமி! நீ வேணுமானால் உள்ளே அத்தையிடம் போய்.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். அதற்குள் நாகநந்தி, "ஆயனரே! நான் தோற்றேன். சிவகாமி மிகவும் புத்திசாலி! அவள் சொல்லியதில் ரொம்பவும் உண்மை இருக்கிறது!" என்றார். அவருடைய கடூர முகத்தில் மறுபடியும் ஒரு கண நேரம் விசித்திரமான புன்னகை காணப்பட்டது. பேச்சை வேறு வழியில் திருப்பியாக வேண்டுமென்று ஆயனர் கருதிச் சுற்று முற்றும் பார்த்தார். அப்போது அவருடைய பார்வை அம்மண்டபத்தின் இன்னொரு பக்கத்தில் சிலைகளையும் சித்திரங்களையும் பார்த்துக் கொண்டு நின்ற பரஞ்சோதியின் மேல் விழுந்தது. "சுவாமி! அந்தப் பிள்ளை யார்? உங்களுடைய சீடனா?" என்று கேட்டார் ஆயனர்.
தாமரைக் குளம்.14
தன்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது காதில் விழுந்ததும் பரஞ்சோதி அவர்கள் இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் புத்த பிக்ஷு, "என்னுடைய சீடன் இல்லை, ஆயனரே! தங்களுடைய சீடனாகப் போகிறவன். பரஞ்சோதி! இங்கே வா!" என்றார். பரஞ்சோதி அவர்களருகில் நெருங்கி வந்தான். அப்போதுதான் அவனை நன்றாகக் கவனித்த ஆயனர் வியப்புடன், "யார் இந்தப் பிள்ளை? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது?" என்றார். "அப்பா! உங்களுக்குத் தெரியவில்லையா? அன்றைய தினம் மத யானையின்மேல் வேலை எறிந்தாரே, அவர்தான்!" என்று உற்சாகத்துடன் கூறினாள் சிவகாமி.
பரஞ்சோதி நன்றியறிதலுடன் சிவகாமியை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தான். ஆயனரின் முகத்தில் ஆச்சரியமும் ஆர்வமும் பொங்கின. "என்ன? என்ன? அந்த வீர வாலிபனா இவன்? என்ன லாகவமாய் வேலை எறிந்தான் மாமல்லர்கூட அதிசயிக்கும்படி! இவனுக்கு எந்த ஊர்? இத்தனை நாளும் எங்கே இருந்தான்? தங்களை எப்போது சந்தித்தான்...?" என்று சரமாரியாக ஆயனர் கேள்விகளை அடுக்கினார். சாதாரணமாக, ஆயனர் தாம் ஈடுபட்டுள்ள கலைகளின் விஷயத்திலே தவிர, வேறெதிலும் இவ்வளவு ஆர்வம் காட்டிப் பேசுவதில்லை.
"சித்தர்வாச மலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது இந்தப் பிள்ளையை வழியில் பார்த்தேன்.." என்று பிக்ஷு ஆரம்பிப்பதற்குள்ளே ஆயனர் பரஞ்சோதியை மறந்து விட்டார். "ஆஹா, அடிகள் சித்தர் மலைக்கா போயிருந்தீர்கள்? அங்கேயுள்ள சித்திர அதிசயங்களைப் பார்த்தீர்களா?" என்றார். "பார்த்தேன், ஆயனரே! அதைப்பற்றி அப்புறம் சொல்லுகிறேன். நான் வரும் வழியில் சாலை ஓரத்தில் இந்தப் பிள்ளை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். இவனை ஒரு பெரிய நாக சர்ப்பம் கடிக்க இருந்தது. என்னுடைய கொல்லா விரதத்தைக் கூடக் கைவிட்டு அந்த நாகத்தைக் கொன்று இவனைக் காப்பாற்றினேன்..." "இது நல்ல வேடிக்கை! தங்கள் திருநாமம் நாகநந்தி! இவனை நாகம் தீண்டாமல் தாங்கள் காப்பாற்றினீர்கள்! இவன் எங்களை நாகம் கொல்லாமல் காப்பாற்றினான்! ஆஹா! ஹா!" என்று ஆயனர் சிரித்தார். நாகம் என்பது சர்ப்பத்துக்கும் யானைக்கும் பெயரானபடியால் ஆயனருக்கு மேற்படி சிலேடைப் பொருத்தம் மிக்க விநோதத்தை அளித்தது.
பிக்ஷு, "இவனை நான் காப்பாற்றியதனால் பல காரியங்களுக்குச் சாதகமாயிற்று. தங்களுக்கு இவன் ஓலை கொண்டு வந்திருக்கிறான்!" என்றார். "ஓலையா? யாரிடமிருந்து?" "திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து, அவருடைய மருமகன் இவன்!" ஆயனர் ஆர்வத்துடன் எழுந்து, "என் அருமைச் சிநேகிதரின் மருமகனா நீ? உன் பெயர் என்ன, தம்பி!" என்று கேட்டுக் கொண்டே பரஞ்சோதியைத் தழுவிக்கொண்டார். பிறகு, "ஓலை எங்கே?" என்று கேட்டார்.
பரஞ்சோதி நாகநந்தியை நோக்கினான் அவர், "ஆயனரே ஓலை காணாமல் போய்விட்டபடியால் வாலிபன் இங்கு வருவதற்கே தயங்கினான். அதற்காகவே இவனை நான் அழைத்துக்கொண்டு வந்தேன். இவனுடைய மாமன் தங்களுக்கும் நாவுக்கரசருக்கும் ஓலைகள் கொடுத்திருந்தாராம். அந்த ஓலைகளை மூட்டைக்குள் கட்டி வைத்திருந்தான். அன்றிரவு யானைமேல் வேல் எறிந்த இடத்தில் மூட்டை காணாமல் போய் விட்டது..." என்று நிறுத்தினார். அப்போது ஆயனர், "ஆமாம், ஆமாம்! யானை நின்ற இடத்தில் ஒரு மூட்டை கிடந்தது. அதை நான் எடுத்து வந்தேன் ஆனால், மறுநாள் கோட்டைக் காவல் தலைவர் ஆள் அனுப்பி அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார். போனால் போகட்டும், என் அருமை நண்பரின் மருமகன் என்று சொன்னால் போதாதா! ஓலை வேறு வேணுமா?.. சிவகாமி, நம்மைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய வீரப்பிள்ளை இவன்தான் இவனுக்கு உன்னுடைய நன்றியைத் தெரியப்படுத்து!" என்றார்.
சிவகாமி பரஞ்சோதியைப் பார்த்தவண்ணம், "இவருக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை. இவரை யார் விதிக்குக் குறுக்கே வந்து வேலை எறியச் சொன்னது? இவர் பாட்டுக்கு இவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவதுதானே?" என்றாள். சிவகாமியின் இந்தக் கடுஞ்சொல், கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேரையும் சிறிது திடுக்கிடச் செய்தது. நாகநந்தி ஆயனரைப் பார்த்து, "உங்கள் குமாரிக்கு என்ன ஏதாவது உடம்பு குணமில்லையா?" என்று கேட்டார். "அதெல்லாம் ஒன்றுமில்லை, சுவாமி! அன்று அரங்கேற்றம் நடுவில் தடைப்பட்டதிலிருந்து அவளுக்கு உற்சாகக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அது ஏதோ அபசகுனம் என்று நினைக்கிறாள்... சிவகாமி! நீ உன் அத்தையிடம்போய், 'அதிதிகள் வந்திருக்கிறார்கள்' என்று சொல்லு, அம்மா!" என்றார்.
"ஆகட்டும், அப்பா!" என்று சொல்லிவிட்டுச் சிவகாமி அந்த வீட்டின் பின்கட்டை நோக்கிச் சென்றாள். மண்டபத்தின் பின்வாசற்படியை அவள் தாண்டிக் கொண்டிருந்த போது, புத்த பிக்ஷு பின்வருமாறு பரிகாசக் குரலில் சொன்னது அவள் காதில் இலேசாக விழுந்தது. "உம்முடைய குமாரியைத் தாங்கள் நன்றாகக் கவனிக்கவேண்டும், ஆயனரே! சாதாரணமாக, இளம் பெண்கள் உயிரின்மேல் வெறுப்புக் கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் காம தேவனுடைய புஷ்ப பாணங்களாகத்தான் இருக்கும் என்பது உமக்குத் தெரியாதா?" சிவகாமி தனக்குள், "இந்த புத்த பிக்ஷு பொல்லாதவர்; நெஞ்சிலும் நாவிலும் நஞ்சு உடையவர்; இவருடன் அப்பாவுக்கு என்ன சிநேகம் வேண்டிக் கிடக்கிறது?" என்று சொல்லிக் கொண்டாள்.
இரண்டாங் கட்டுக்குள் சிவகாமி நுழைந்ததும் அங்கே 'கலகல' என்றும் 'சடசட' என்றும், பலவிதமான சப்தங்கள் ஏக காலத்தில் உண்டாயின. பச்சைக் கிளிகளும் பஞ்சவர்ணக் கிளிகளும், 'அக்கா! அக்கா! என்று கூவின. நாகணவாய்ப் புட்கள் 'கிக்கி!' என்றன. புறாக்கள் 'சடசட' என்றும், சிறகுகளை அடித்துக் கொண்டன. முற்றத்துக் கூரைமேல் உட்கார்ந்திருந்த மயில் 'ஜிவ்'வென்று பறந்து தரைக்கு வந்தது. அங்கிருந்த மான்குட்டி மட்டும் சப்தம் ஒன்றும் செய்யாமல், சிவகாமியின் முகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு அவள் அருகில் வந்து நின்றது.
இந்தப் பட்சிகள், மிருகங்கள் எல்லாம் சிவகாமி விளையாடிப் பொழுதுபோக்குவதற்காகவும், ஆயனரின் சிற்ப சித்திரவேலைகளுக்காகவும் இரண்டாவது கட்டில் வளர்க்கப்பட்டு வந்தன. சிவகாமி பிரவேசித்ததும் அவை போட்ட சத்தத்தைக் கேட்டு, "சீ! பேசாமலிருங்கள்! தலைவேதனை!" என்று அதட்டினாள். உடனே அங்கு அதிசயமான நிசப்தம் உண்டாயிற்று. சிவகாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "இன்றைக்கு ரதியைத்தான் அழைத்துப் போக வேண்டும். ரதிதான் சத்தம் போடாமல் வருவாள்! ரதி வா!" என்று கூறிவிட்டு மேலே சென்றபோது, மான்குட்டி மட்டும் அவளைத் தொடர்ந்து சென்றது. மற்ற பட்சிகள் மௌனமாயிருந்த போதிலும், தலையைச் சாய்த்துக்கொண்டும் மற்றும் பலவிதக் கோணங்கள் செய்து கொண்டும் ரதியைப் பொறாமை ததும்பிய கண்களால் நோக்கின.