விடுதலை9
கயிற்றின் வழியாக மேலே ஏறிய பரஞ்சோதி கூரையை அணுகியபோது, இரண்டு இரும்புக் கரங்கள் தன் புயங்களைப் பிடித்து மேலே தூக்கிவிடுவதை உணர்ந்தான். மறுகணமே தான் மேற்கூரையில் நிற்பதையும், தனக்கு எதிரில், "பேச வேண்டாம்" என்பதற்கு அறிகுறியாக உதட்டில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டு புத்த பிக்ஷு நிற்பதையும் பார்த்தான். அவருக்குப் பின்னால் இன்னொரு இளம் புத்த சந்நியாசி நிற்பதும் தெரிந்தது. பெரிய பிக்ஷு ஜாடை காட்டியவுடன் இளம் புத்தன் கயிற்றை மேலே இழுத்துச் சுருட்டி ஒரு காவித் துணிக்குள் அதை வைத்துக் கட்டினான். பரஞ்சோதி கூரைமேல் நின்ற வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் காஞ்சி நகரத்து மாட மாளிகைகளின் உப்பரிகைகள் வெண்ணிலாவில் தாவள்யமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
இதற்குள் பெரிய பிக்ஷுவானவர் சிறைச்சாலை கூரையின் துவாரத்தை ஓடுகளைப் பரப்பி அடைத்துவிட்டு, பரஞ்சோதியை ஒரு விரலால் தொட்டுத் தம் பின்னால் வரும்படி சமிக்ஞை செய்தார். அவரைப் பின்தொடர்ந்து பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் ஓட்டுக் கூரைகளின் மேலேயும், நிலா மாடங்கள் மண்டபங்களின் மேலேயும் ஓசைப்படாமல் மெதுவாக நடந்து சென்றார்கள். வீதியில் ஏதாவது சந்தடி கேட்டால் புத்த புக்ஷு உடனே தம் பின்னால் வருவோருக்கு ஜாடை காட்டி விட்டு உட்கார்ந்து கொள்வார். சந்தடி நீங்கிய பிறகு எழுந்து நடப்பார். இவ்விதம், ஏழெட்டு கட்டிடங்களை மேற்கூரை வழியாகக் கடந்த பிறகு, ஒரு வீட்டின் முகப்பில் வீதி ஓரத்தில் பன்னீர் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்கள்.
பன்னீர் மரங்களின் அடர்ந்த பசிய இலைகளுக்கு இடை இடையே கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த பன்னீர் மலர்கள் வெண்ணிலாவில் வெள்ளி மலர்களாகப் பிரகாசித்தன. அம்மலர்களின் சுகந்த பரிமளத்தை இளந்தென்றல் நாலாபக்கமும் பரப்பிக் கொண்டிருந்தது. புத்த பிக்ஷு வீதியை இரு புறமும் நன்றாகப் பார்த்து விட்டு, அந்தப் பன்னீர் மரங்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினார். பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் அவ்விதமே இறங்கினார்கள். சிறிது தூரம் நடந்து கோயிலைப் போல் அமைந்த ஓர் அழகிய கட்டிடத்தின் வாசலை அடைந்தார்கள். அந்தக் கட்டிடந்தான் காஞ்சி நகருக்குள்ளிருந்த புத்த விஹாரங்களுக்குள் மிகப் பெரியது. 'இராஜ விஹாரம்' என்று பெயர் பெற்றது. கருணாமூர்த்தியான புத்த பகவானின் திருப் பற்களில் ஒன்று அந்தக் கோயிலின் கர்ப்பக் கிருஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
பல்லவ மன்னர்கள் அவ்வப்போது ஒவ்வொரு மதத்தில் பற்றுடையவர்களாயிருந்தாலும், எல்லா மதங்களையும் சம நோக்குடன் பார்த்து அந்தந்த மத ஸ்தாபனங்களுக்கு மானியம் விடுவது வழக்கம். அவ்விதம் இராஜாங்கமானியத்தைப் பெற்றது இராஜ விஹாரம். அன்றியும், காஞ்சியில் சில பெரும் செல்வர்கள் பௌத்த சமயிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருவனான தனதாஸன் என்னும் வியாபாரி தன்னுடைய ஏகபுத்திரன் வியாதியாய்க் கிடந்தபோது, "பிள்ளை பிழைத்தால் இராஜ விஹாரத்தைப் புதுபித்துத் தருவேனாக" என்று வேண்டுதல் செய்து கொண்டான். பிள்ளை பிழைக்கவே, ஏராளாமான பொருட்செலவு செய்து விஹாரத்தைப் புதுப்பித்தான்.
தாவள்யமான முத்துச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த இராஜ விஹாரம் வெண்ணிலாவில் அழகின் வடிவமாக விளங்கிற்று. அதைப் பார்த்ததும் பரஞ்சோதி, "ஆஹா! என்ன அழகான கோயில்!" என்று கூவினான். புத்த பிக்ஷு சட்டென்று நின்று அவனுடைய வாயைப் பொத்தினார். அச்சமயம் அவர்கள் பன்னீர் மரங்களின் நிழலைத் தாண்டி இராஜ விஹாரத்துக்கு எதிரில் திறந்த வெளிக்கு வந்திருந்தார்கள். அதே சமயத்தில் இராஜ விஹாரத்துக்கு எதிர் வரிசையிலிருந்த கட்டிடங்களின் இருண்ட நிழலிலிருந்து இரண்டு வெண் புரவிகள் வெளிப்பட்டு வந்தன. அவற்றின் மீது இரண்டு வீரர்கள் காணப்பட்டார்கள். ஒருவர் நடுப்பிராயத்தினர், இன்னொருவர் வாலிபர். இருவரும் பெரிய முண்டாசு கட்டியிருந்தார்கள்.
இரண்டு குதிரைகளும் இராஜ விஹாரத்தை நெருங்கி வந்தன. வீரர்களில் பெரியவன், "புத்தம் சரணம் கச்சாமி!" என்றான். இளம் பிக்ஷு, "தர்மம் சரணம் கச்சாமி!" என்றார். "அடிகளே! இரவு இரண்டாம் ஜாமத்துக்கு மேல் யாரும் வெளியில் கிளம்பக் கூடாது என்று தெரியுமோ?" என்றான் முதிய வீரன். "தெரியும்; ஆனால் சந்நியாசிக்கும் அந்தக் கட்டளை உண்டு என்பது தெரியாது" என்றார் பிக்ஷு. "இந்த அர்த்தராத்திரியில் எங்கே கிளம்பினீர்களோ?" "இந்தப் பிள்ளை என்னுடைய சிஷ்யன், காஞ்சிக்குப் புதியவன்; காணாமல் போய்விட்டான் அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தேன். "இந்த வாலிபனுக்கு எந்த ஊரோ?" "சோழ நாட்டில் செங்காட்டங்குடி." "இன்றைக்குத்தான் இருவரும் வந்தீர்களாக்கும்!" "ஆம், ஐயா!" "தங்கள் திருநாமம் என்னவோ!" "நாகநந்தி என்பார்கள்." "இனிமேல் நள்ளிரவில் கிளம்ப வேண்டாம், சுவாமி! சிஷ்யப் பிள்ளையிடமும் சொல்லி வையுங்கள்."
வீரர்கள் குதிரைகளைத் தட்டி விட்டுக் கொண்டு போனபிறகு மூவரும் இராஜ விஹாரத்துக்குள் பிரவேசித்தார்கள், அவர்கள் உள்ளே நுழைந்ததும் இராஜ விஹாரத்தின் வெளிக் கதவு சாத்தப்பட்டது. உள்ளே வெகு தூரத்தில் கர்ப்பக்கிருஹம் தீப வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பரஞ்சோதி பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். உள்ளேயிருந்து வந்துகொண்டிருந்த அகிற் புகையின் வாசனை அவனுடைய தலையைக் கிறுகிறுக்கச் செய்தது. புத்த பிக்ஷு அவனுடைய தலையைத் தொட்டு, "பிள்ளாய்! எப்பேர்ப்பட்ட ஆபத்து உனக்கு வந்தது! புத்த பகவானுடைய கருணையினால் தப்பினாய்!" என்றார். பரஞ்சோதி அவரை ஏறிட்டுப் பார்த்து, "அடிகளே! எந்த ஆபத்தைச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான். "பெரிய ஆபத்து! இந்த விஹாரத்தின் வாசலிலேயே வந்தது. குதிரை மேல் வந்தவர்கள் யார் தெரியுமா?" "எனக்கு எப்படித் தெரியும், சுவாமி? காஞ்சிக்கு நான் புதிதாயிற்றே!" பிக்ஷு பரஞ்சோதியின் காதோடு, "மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய மகன் மாமல்ல நரசிம்மனுந்தான்!" என்றார். பரஞ்சோதிக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப்போட்டது. "நிஜமாகவா?" என்று வியப்புடன் கேட்டான். "ஆம்! இருவரும் மாறுவேடம் பூண்டு நகர் சுற்றக் கிளம்பியிருக்கிறார்கள். வேஷம் தரிப்பதில் மகேந்திர பல்லவருக்கு இணையானவர் இந்தப் பரத கண்டத்திலேயே இல்லை." பரஞ்சோதி சிறிது நேரம் ஆச்சரியக் கடலில் மூழ்கியிருந்து விட்டு, "அவர்களால் எனக்கு என்ன ஆபத்து?" என்று கேட்டான்.
புத்த பிக்ஷு ஒரு கேலிச் சிரிப்புச் சிரித்தார். "என்ன ஆபத்து என்றா கேட்கிறாய்? யானை மீது வேல் எறிந்த பிள்ளை நீதான் என்று அவர்களுக்குத் தெரிந்தால் நீ பிழைப்பது துர்லபம். அந்தச் சக்கரவர்த்திக்கு குமாரன் இருக்கிறானே, அவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா? இந்தப் பூமண்டலத்தில் தன்னைவிடப் பலசாலியோ, வீரனோ ஒருவனும் இருக்கக் கூடாது என்பது அவனுடைய எண்ணம். அப்படி யாராவது இருந்தால் அவனுடன் மல்யுத்தம் செய்து தோல்வியடைய வேண்டும்; இல்லாவிடில், யமனுலகம் போகவேண்டியதுதான்!" "சண்டை என்று வந்தால் நான் பின்வாங்க மாட்டேன் அடிகளே! சக்கரவர்த்தி குமாரனாகவே இருக்கட்டும்! யாராய்த்தான் இருக்கட்டும்!" என்றான் பரஞ்சோதி. "தெரியும் தம்பி! நீ இப்படிப்பட்ட வீரனாயிருப்பதனாலேதான் உனக்கு ஆபத்து அதிகம்; நீ வேலை எறிந்ததனாலேதான் கோயில் யானைக்கு மதம் பிடித்தது என்று பொய்க் குற்றம் சாட்டி உன்னைத் தண்டித்து விடுவார்கள்.
பரஞ்சோதிக்கு நெஞ்சில் 'சுருக்'கென்றது சுமைதாங்கியில் படுத்திருந்தபோது யாரோ பேசிக்கொண்டு போனது ஞாபகம் வந்தது. நாகநந்தியின் வார்த்தைகளில் இதுவரை நம்பிக்கையில்லாதவனுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று. "அப்படிப்பட்ட அநியாயமும் உண்டா?" என்றான். பரஞ்சோதி! இந்தக் காஞ்சி பல்லவர்களின் குலத்தொழிலே அதுதான். இன்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் உன்னைப் போலவே கல்வி பயில்வதற்காக, மயூரசன்மன் என்னும் இளைஞன் இந்த நகருக்கு வந்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு அசூயை கொண்ட பல்லவ இராஜகுமாரன் அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துவிட்டான்..." "அப்புறம்?" "மயூரசன்மன் சிறையிலிருந்து தப்பிக் கொண்டு போய்க் கிருஷ்ணா நதிக்கரையில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துக் கொண்டு, பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கினான். புத்த பகவான் அருளால் மயூரசன்மனைப் போலவே நீயும் பெரும் ஆபத்திலிருந்து தப்பினாய்!..."
பரஞ்சோதி அப்போது குறுக்கிட்டு, "அடிகளே! மற்ற ஆபத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இப்போது எனக்குப் பசி என்கிற ஆபத்துத்தான் பெரிய ஆபத்தாயிருக்கிறது! பசியினாலேயே பிராணன் போய்விடும் போலிருக்கிறது!" என்றான். நாகநந்தி அவனை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று உணவு அருந்துவித்தார். பிறகு ஒரு மண்டபத்தின் தாழ்வாரத்துக்கு அவனை அழைத்து வந்து, "பரஞ்சோதி இங்கே படுத்துக்கொள்; தூங்குவதற்கு ஒரு முகூர்த்த காலம் கொடுக்கிறேன். நிம்மதியாகத் தூங்கு உனக்கு வந்த ஆபத்து இன்னும் முழுவதும் நீங்கிவிடவில்லை. பொழுது விடிவதற்குள்ளே நாம் கோட்டையை விட்டுப் போய்விடவேண்டும்" என்றார். பரஞ்சோதி அப்படியே அந்த மண்டபத்தின் தளத்தில் சாய்ந்தான். அடுத்த நிமிஷமே நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள்.
கண்கட்டு மாயம்.10
பரஞ்சோதி தரையில் படுத்தவுடனே கண்ணயர்ந்தான். ஆயினும், அவன் நல்ல தூக்கம் தூங்கினான் என்று சொல்வதற்கில்லை. ஏதேதோ பயங்கர துர்க்கனவுகள் தோன்றித் தூக்கத்தைக் கெடுத்தன. ஒரு சமயம் ஐந்தாறு புத்த பிக்ஷுக்கள் வந்து அவனைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் தம் கையிலிருந்த தீபத்தைத் தூக்கிப் பரஞ்சோதியின் முகத்தில் வெளிச்சம் விழும்படி பிடித்தார். "ஆமாம்! நாகநந்தி சொல்வது சரிதான் இவன் முகத்தில் அபூர்வமான களையிருக்கிறது. இவன் மகாவீரன் ஆவான்! அல்லது மகாத்மா ஆவான்!" என்று யாரோ ஒருவர் சொன்னது போலிருந்தது.
இன்னொரு சமயம் அவனை ஒரு மதயானை துரத்திக் கொண்டு வருகிறது. பரஞ்சோதி சட்டென்று ஒரு பன்னீர் மரத்தின் மேல் ஏறிக்கொள்கிறான். புஷ்பக் கொத்துடன் கூடிய ஒரு பன்னீர்க் கிளையை ஒடித்து யானையின் மேல் போடுகிறான். அச்சமயம் திடீரென்று இரு குதிரை வீரர்கள் தோன்றி, "அடப்பாவி! கோயில் யானையைக் கொன்று விட்டாயா?" என்று கூவிக் கொண்டே தங்கள் கையிலிருந்த வேல்களை அவன்மீது எறிகிறார்கள்! மற்றும் ஒரு பயங்கரக் கனவு! நாகநந்தியடிகள் வந்து அவன் பக்கத்தில் நின்று அவனுடைய முகத்தை உற்றுப் பார்க்கிறார். அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய முகமானது படமெடுத்தாடும் பாம்பின் முகமாக மாறுகிறது! அந்தப் பாம்பு அதனுடைய மெல்லிய பிளவுபட்ட நாவை நீட்டி அவனுடைய முகத்தைத் தீண்ட வருகிறது!
பரஞ்சோதி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்தான். பார்த்தால், நாகநந்தி அடிகள் உண்மையாகவே அவன் அருகில் நின்று அவனைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார். "பிள்ளாய்! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? ஏதாவது துர்க்கனவு கண்டாயா?" என்று பிக்ஷு கேட்டார். பரஞ்சோதி, "இல்லை, இல்லை, ஒன்றுமில்லை நீங்கள் திடீரென்று தொடவே கொஞ்சம் திடுக்கிட்டேன்" என்றான். "பொழுது விடிய இன்னும் ஒரு முகூர்த்தந்தான் இருக்கிறது. புறப்படு, போகலாம்! பொழுது விடிவதற்குள் இந்தக் கோட்டையைக் கடந்துபோய்விட வேண்டும்." "ஏன் சுவாமி?" "புத்த தேவருடைய ஆக்ஞை!" "யாருக்கு?" "எனக்குத்தான் உன்னை அபாயத்திலிருந்து தப்புவிக்கும்படி ஆக்ஞை. என்னிடம் உனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையா?" என்று நாகநந்தி பரிவு ததும்பிய குரலில் கேட்டார். பரஞ்சோதி மௌனமாயிருந்தான்.
"போகட்டும், இன்னும் ஒரே ஒரு முகூர்த்த காலம் இரவு கழிந்து பொழுது விடியும்வரையில் நான் சொல்கிறதைக் கேள். புத்த தேவருடைய கட்டளையை நான் நிறைவேற்றி விடுகிறேன். கோட்டைக்கு வெளியே உன்னைக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் அப்புறம் உன் இஷ்டம்போல் செய்." கனிந்த குரலில் கூறிய இந்த வேண்டுகோளைப் பரஞ்சோதியினால் மறுக்க முடியவில்லை. "ஆகட்டும், அடிகளே!" என்றான். "அப்படியானால் இன்னும் ஒரு முகூர்த்த காலம் என்னிடம் நம்பிக்கை வைத்து நான் சொன்னபடி கேட்பாயல்லவா!" "கேட்கிறேன்". "உன்னுடைய கண்களைக் கட்டி இவ்விடமிருந்து அழைத்துப் போகவேண்டியதாயிருந்தால்?" பரஞ்சோதி ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, "எப்படியானாலும் சரி" என்றான்.
உடனே, நாகநந்தி அடிகள் ஒரு சிறு துண்டை எடுத்துப் பரஞ்சோதியின் கண்களைச் சுற்றிக் கட்டினார். "பிள்ளாய்! என் கையைப் பிடித்துக் கொண்டே வர வேண்டும். நான் சொல்கிற வரையில் கண்ணின் கட்டை அவிழ்க்கக் கூடாது. இப்போது நீ என்னிடம் காட்டும் நம்பிக்கையின் பலனை ஒருநாள் அவசியம் தெரிந்து கொள்வாய்!" இவ்விதம் கூறிப் பரஞ்சோதியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, நாகநந்தி நடக்கத் தொடங்கினார். பரஞ்சோதியின் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக்கொண்டது. ஆயினும், அவன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பிக்ஷுவைப் பின்பற்றி நடந்தான்.
முதலில், புத்த விஹாரத்தின் வாசல் வழியாக வெளியேறுவது போலப் பரஞ்சோதிக்குத் தோன்றிற்று. பின்னர், வீதியோடு நடந்து போவதாகத் தோன்றிற்று. பன்னீர் புஷ்பங்களின் வாசனையிலிருந்து அன்று முன்னிரவில் மேல் மாடத்திலிருந்து வீதியில் இறங்கிய இடமாக இருக்கலாமென்று ஊகித்துக் கொண்டான். இன்னும் சிறிது தூரம் நடந்த பிறகு, போகும் திசை மாறியது. சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் பன்னீர்ப் பூவின் நறுமணம். "வந்த வழியே திரும்பிப் போகிறோமா, என்ன? ஆ! இந்தப் பொல்லாத பிக்ஷு எனக்கு வழி அடையாளம் தெரியாமலிருப்பதற்காக இப்படி இழுத்தடிக்கிறார் போலும்!" என்று பரஞ்சோதி எண்ணிக் கொண்டான்.
மறுபடியும் ஒரு கட்டிடத்துக்குள் பிரவேசிப்பது போலிருந்தது. அகிற் புகையின் மணத்திலிருந்து, "இது இராஜ விஹாரந்தான்' என்று பரஞ்சோதி தீர்மானித்தான். பிறகு சிறிது நேரம் இருளடைந்த குகைகளின் வழியாகச் சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றியது. கண்ணைக் கட்டியிருந்தபடியால் வெகு நேரம் முடிவேயில்லாமல் நடந்து கொண்டிருப்பதாகப்பட்டது. "அடிகளே! இன்னும் எத்தனை நேரம் இவ்விதம் கண் கட்டு வித்தை செய்ய வேண்டும்?" என்று பரஞ்சோதி கேட்டான். "பிள்ளாய்! கிட்டத்தட்ட வந்துவிட்டோம் இன்னும் கொஞ்சம் பொறு!" என்றார் பிக்ஷு.
திடீரென்று இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாகப் பரஞ்சோதி உணர்ந்தான். "பரஞ்சோதி! நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்து விட்டோம். கண்கட்டுச் சோதனை முடிந்தது" என்று சொல்லிக் கொண்டே அடிகள் கட்டை அவிழ்த்தார். புத்த பகவான் அருளால் சொர்க்கலோகத்துக்கே வந்து விட்டோமோ என்று பரஞ்சோதிக்குத் தோன்றியது. அவன் கண் முன்னால் அத்தகைய சௌந்தர்யக் காட்சி தென்பட்டது. அகழி நீரில் அஸ்தமன சந்திரனின் வெள்ளிக்கிரணங்கள் படிந்து, உருக்கிய வெள்ளி ஓடையாகச் செய்து கொண்டிருந்தன. அகழிக்கப்பால் மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசம் காணப்பட்டது. மரங்களின் உச்சியில் சந்திர கிரணங்கள் இலைகளின் மீது தவழ்ந்து விளையாடின. அகழியில் ஒரு படகு மிதந்தது, பரஞ்சோதியைச் சிறை மீட்க உதவி செய்த இளம் பிக்ஷு கையில் துடுப்புடன் படகில் நின்றார்.
பெரிய பிக்ஷுவும் பரஞ்சோதியும் அகழியண்டை போய் படகில் ஏறினார்கள் படகு நகர்ந்தது. "இந்த அகழியைத் தாண்டப் படகு என்னத்திற்கு? எளிதில் நீந்திக் கடந்து விடலாமே?" என்றான் பரஞ்சோதி. "ஆம்; நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தலாம்." "இந்த அகழியினால் கோட்டைப் பாதுகாப்புக்குத்தான் என்ன பிரயோஜனம்? எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா?" "அதோ பார்!" என்றார் பிக்ஷு, சற்றுத் தூரத்தில் ஒரு முதலை பயங்கரமாக வாயைத் திறந்தது. "ஐயோ!" என்றான் பரஞ்சோதி. "இம்மாதிரி நூற்றுக்கணக்கான முதலைகள் இந்த அகழியில் இருக்கின்றன. சாதாரண காலங்களில் அங்கங்கே இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பார்கள். யுத்த காலங்களில் திறந்து விட்டுவிடுவார்கள். நேற்று இரவு திறந்து விட்டிருக்கிறார்கள்." "அப்படியானால், யுத்தம் வருவது நிஜந்தானா? சுவாமி!" "பின் எதற்காக இவ்வளவு அமர்க்களமெல்லாம் என்று நினைத்தாய்!" என்றார் பிக்ஷு. பரஞ்சோதி மௌனமாயிருந்தான். படகு அகழியின் அக்கரையை அடைந்தது.
ஆயனச் சிற்பி.11
வானளாவி வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பரவிப் பின்னிக்கொண்டிருந்த வனப் பிரதேசத்தின் மத்தியில் அழகான சிற்ப வீடு ஒன்று காணப்பட்டது. மனோகரமான காலை நேரம், சூரியோதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் உச்சியில் வஸந்த காலத்தில் இளந்தென்றல் உலாவியபோது 'சலசல'வென்று இலைகள் அசையும் இனிய ஓசை எழுந்தது. பட்சி ஜாலங்களின் கண்டங்களிலிருந்து விதவிதமான சுருதி பேதங்களுடன் மதுர மதுரமான அமுத கீதங்கள் பெருகிக் கொண்டிருந்தன.
வீட்டைச் சுற்றியிருந்த மரங்களின் அடியில் ஆங்காங்கே பெரிய பெரிய கருங்கற்கள் கிடந்தன. அந்தக் கருங்கற்களில், தனித்தனியாகவும் இருவர் மூவராகவும் இளம் சிற்பிகள் அமர்ந்து கையில் கல்லுளியுடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இளம் சிற்பிகள் கருங்கற்களில் கல்லுளியினால் வேலை செய்த போது உண்டான 'கல்கல்' என்ற ஓசை, இலைகள் அசையும் ஓசையுடனும் பட்சிகளின் மதுரகானத்துடனும் கலந்து, செவி கொடுத்துக் கேட்பவர்களுக்கெல்லாம் நாத போதையை உண்டாக்கிற்று. இத்தகைய கீதப் பிரவாகத்துக்கிடையே, திடீரென்று வீட்டிற்குள்ளிருந்து 'ஜல்ஜல்' என்ற சத்தம் வந்தது.
இளம் சிற்பிகள் அவ்வளவு பேரும் சொல்லி வைத்தாற்போல வேலையை நிறுத்திவிட்டுக் காது கொடுத்துக் கேட்டார்கள். அவர்களுடைய முகங்கள் எல்லாம் ஏக காலத்தில் மலர்ந்தன. ஏனெனில் அந்த 'ஜல்ஜல்' ஒலியானது, அவர்களுடைய ஆச்சாரிய சிற்பியின் மகள் சிவகாமி தேவியின் பாதச் சலங்கை ஒலியென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். மூன்று நாளாக ஏதோ ஒரு காரணத்தினால் சோகத்தில் ஆழ்ந்திருந்த சிவகாமி இன்றைக்குச் சோகம் நீங்கி மீண்டும் நடனம் செய்ய ஆரம்பித்திருக்கிறாள் என்பதை அந்த 'ஜல்ஜல்' ஒலி பறையறைந்து தெரிவித்தது. சற்று நேரம் அந்த இனிய ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, ஒருவரோடொருவர் முக பாவத்தினாலேயே சம்பாஷித்து விட்டு, இளம் சிற்பிகள் மறுபடியும் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள். ஆயனரின் சிற்பக் கோயிலுக்குள்ளே நாம் பிரவேசிப்பதற்கு முன்னால், அவர் அந்த நடுக்காட்டில் வந்து வீடு கட்டிக்கொண்டு வசிக்க நேர்ந்ததேன் என்பதைச் சிறிது கவனிப்போம்.
தெற்கே பாண்டிய நாட்டின் எல்லையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதி வரையில் பரந்திருந்த பல்லவ ராஜ்யத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மகேந்திரவர்ம சக்கரவர்த்தி சிறப்புடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில், தமிழகமெங்கும் ஓர் அதிசயமான 'கலை மறுமலர்ச்சி' ஏற்பட்டிருந்தது. செந்தமிழ் நாடெங்கும் மகா சிற்பிகளும் சித்திரக் கலைஞர்களும் தோன்றிச் சிற்ப, சித்திரக் கலைகளை அற்புதமாக வளர்த்து வந்தார்கள். குன்றுகளைக் குடைந்து கோயில்களாக்கும் கலையும், கற்பாறைகளிலே சிற்பங்களைச் செதுக்கும் கலையும் எங்கெங்கும் பரவி வந்தன.
அதே சமயத்தில் தெய்வத் தமிழகத்தில் சைவ, வைஷ்ணவ சமயங்கள் புத்துயிர் பெற்றுத் தழைக்கத் தொடங்கின. சிவனடியார்களும், வைஷ்ணவப் பெரியார்களும் ஸ்தல யாத்திரை என்ற வியாஜத்தில் தேசமெங்கும் பிரயாணம் செய்து, சைவ வைஷ்ணவ சமயங்களைப் பரப்பி வந்தார்கள். இது காரணமாகத் தமிழகத்தில் சென்ற சில நூற்றாண்டுகாலமாய் வேரூன்றியிருந்த புத்த, சமண சமயங்களுக்கும், சைவ, வைஷ்ணவ சமயங்களுக்கும், தீவிரப் போட்டி ஏற்பட்டது. அந்தந்தச் சமயத் தத்துவங்களைப் பற்றிய விவாதங்கள் எங்கே பார்த்தாலும் காரசாரமாக நடந்து கொண்டிருந்தன.
மேற்படி சமயப் போட்டியானது கலைத் துறையில் மிகுதியாகக் காணப்பட்டது. ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் தங்கள் சமயத்தையொட்டிக் கலைகளை வளர்க்க முயன்றார்கள். சைவ வைஷ்ணவர்கள் சிவன் கோயில்களையும், பெருமாள் கோயில்களையும் நாடெங்கும் நிர்மாணிக்க விரும்பினார்கள். புத்தர்களும் சமணர்களும் எங்கெங்கும் புத்த விஹாரங்களையும் சமணப் பள்ளிகளையும் நிறுவத் தொடங்கினார்கள்.
பாறைகளுக்கும் குன்றுகளுக்கும்கூடப் பெரிய போட்டி ஏற்பட்டது! ஒவ்வொரு மதத்தினரும், "இது எங்கள் குன்று; எங்கள் பாறை!" என்று பாத்தியதை கொண்டாடினார்கள். அந்தப் பாறைகளையும் குன்றுகளையும் குடைந்து கோயில்களையும் விஹாரங்களையும் நிர்மாணிக்கும் ஆசையினால் தான் அத்தகைய போட்டி உண்டாயிற்று. அதே மாதிரி சிற்பிகள், சித்திரக் கலைஞர்களின் விஷயத்திலும் பலமான போட்டி ஏற்பட்டிருந்தது. பெயர் பெற்ற சிற்பிகளிடமும் சித்திரக் கலைஞர்களிடமும் நாலு மதத்தினரும் வந்து மன்றாடி அழைத்தார்கள். அத்தகைய பலமான போட்டிக்கு ஆளாகியிருந்தவர்களில் ஆயனச் சிற்பியும் ஒருவர்.
காஞ்சி மாநகரில் பிறந்து வளர்ந்து கலை பயின்ற ஆயனர், இளம் பிராயத்திலேயே 'மகா சிற்பி' என்று பெயர் பெற்றுவிட்டார். ஆயனருடைய புகழ் வளர வளர, அவருடைய வேலைக்குக் குந்தகம் அதிகமாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மகேந்திர சக்கரவர்த்தி முதல் சாதாரண ஜனங்கள் வரையில் அடிக்கடி அவருடைய விடுதிக்கு வருவதும் அவருடைய சிற்ப வேலைகளைப் பாராட்டுவதுமாக இருந்தார்கள். வந்தவர்களை வரவேற்று உபசரிப்பதிலேயே அவருடைய காலம் அதிகமாகச் செலவழிந்து வந்தது.
சைவ குலத்தில் பிறந்த ஆயனர் இயற்கையாகச் சைவ மதப்பற்றுக் கொண்டிருந்தார். அதோடு, பழந்தமிழ்நாட்டுச் சிற்ப வடிவங்களில் சிறந்த ஸரீநடராஜ வடிவம் அவருடைய உள்ளத்தைப் பூரணமாய்க் கவர்ந்திருந்தது. எனவே, அவருடைய சிற்ப வேலைகள் பெரும்பாலும் சைவ மதத்தைத் தழுவியனவாக இருந்தன. இது காரணமாக, புத்த பிக்ஷுக்களும் சமண முனிவர்களும் ஆயனரைத் தங்கள் சமயத்தில் சேர்த்துக்கொள்ள இடைவிடாத முயற்சி செய்த வண்ணமிருந்தார்கள்.
இந்தத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக, ஆயனச் சிற்பியார் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். அதாவது காஞ்சி நகரை விட்டுச் சென்று எங்கேயாவது நடுக்காட்டில் ஏகாந்தமான பிரதேசத்தில் வீடு அமைத்துக்கொண்டு வசிக்க வேண்டும் என்பதுதான். அவ்விதம் ஆயனர் தீர்மானித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது. அந்த மகா சிற்பி, சிற்ப சித்திரக் கலைகளை நன்கு பயின்றதோடு, பரத சாஸ்திரம் என்னும் மகா சமுத்திரத்தையும் கரை கண்டவராக இருந்தார். அவருடைய ஏக புதல்வி சிவகாமி குழந்தையாயிருந்த போதே நடனக் கலையில் அவள் சிறந்த தேர்ச்சியடைவாள் என்பதற்கு அறிகுறிகள் காணப்பட்டன.
ஆயனருடைய உள்ளத்தில் ஒரு பெரிய ஆசை உதயமாயிற்று. 'குழந்தை சிவகாமிக்குப் பரத நாட்டியக் கலையில் பயிற்சி அளிக்கவேண்டும்; அவளுடைய நடனத் தோற்றங்களைப் பார்த்து அவற்றைப் போல் ஜீவகளையுள்ள நவநவமான நடன வடிவங்களைச் சிலைகளிலே அமைக்க வேண்டும்' என்னும் மனோரதம் அவருக்கு உண்டாகி, நாளுக்கு நாள் வலுப்பெற்று வந்தது. நகரத்தை விட்டு எங்கேயாவது ஏகாந்தமான பிரதேசத்துக்குப் போனாலொழிய மேற்படி மனோரதம் நிறைவேறுவது சாத்தியமாகாது என்பதையும் அவர் நன்கு உணர்ந்தார். ஆயனர் தமது விருப்பத்தை மகேந்திர சக்கரவர்த்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டபோது, கலைஞர்களுடைய விசித்திர குணாதிசயங்களை நன்கு அறிந்தவரான மகேந்திர பல்லவர் உடனே அவருடைய யோசனைக்குச் சம்மதம் அளித்தார். அதற்கு வேண்டிய சௌகரியங்களையும் செய்து கொடுக்க முன்வந்தார்.
காஞ்சியிலிருந்து ஒரு காத தூரத்தில், ராஜபாட்டையிலிருந்து விலகியிருந்த அடர்ந்த வனப் பிரதேசம் ஒன்றை ஆயனர் தேர்ந்தெடுத்து, அங்கே வீடுகட்டிக் கொண்டு, குழந்தை சிவகாமியுடனும், பதியை இழந்திருந்த தம் தமக்கையுடனும் வசிக்கலானார். எந்த நோக்கத்துடன் ஆயனர் அந்த ஏகாந்தமான பிரதேசத்தைத் தேடி வந்தாரோ அந்த நோக்கம் சில அம்சங்களில் நன்கு நிறைவேறிவந்தது. சிவகாமி நாட்டியக் கலையில் நாளுக்கு நாள் தேர்ச்சி அடைந்து வந்தாள். அவளுடைய நடனத் தோற்றங்களைப் பார்த்து ஆயனர் முதலில் அவை போன்ற சித்திரங்கள் வரைந்துகொண்டார். பிறகு அந்தச் சித்திரங்களைப் போலவே அதிசயமான ஜீவகளை பொருந்திய நடன உருவங்களைக் கல்லிலே அமைக்கலானார்.
ஆயனர் ஏகாந்தமான பிரதேசத்துக்குப் போன போதிலும், வெளி உலகம் அவரை அடியோடு தனியாக விட்டு விடவில்லை. கலைஞர்களும், கலைகளில் பற்றுடையவர்களும் காட்டு வழிகளிலே புகுந்து ஆயனர் வீட்டை அடிக்கடி தேடிச் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்களில் முக்கியமானவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய குமாரர் மாமல்லருந்தான். இவர்கள் ஆயனர் வீடு செல்லுவதற்கு ஒரு முக்கியமான முகாந்திரமும் இருந்தது.
சக்கரவர்த்தியும் மாமல்லரும் ஒருநாள் கடல்மல்லைத் துறைமுகத்துக்குச் சென்றிருந்தபோது, கடற்கரையோரமாகப் பரந்து கிடந்த குன்றுகளும் பாறைகளும் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தன. அந்தக் குன்றுகளிலும் பாறைகளிலும் விதவிதமான சிற்ப வேலைகளைச் செய்து கடல்மல்லைத் தலத்தை ஒரு சொப்பன லோகமாகச் செய்துவிட வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தார்கள். தமிழகமெங்குமிருந்து ஆயிரக்கணக்கான சிற்பிகள் அங்கு வந்து வேலை செய்யத் தொடங்கினார்கள்.
இந்த வேலைகள் சம்பந்தமாக ஆயனரிடம் கலந்து ஆலோசிப்பதற்கும், அவ்வப்போது அவரை அழைத்துச் சென்று நடந்திருக்கும் வேலைகளைக் காட்டுவதற்குமாகச் சக்கரவர்த்தியும் மாமல்லரும் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வரவேண்டியிருந்தது. அப்படி வரும்போதெல்லாம் ஆயனரின் நடனச் சிற்பங்களைப் பார்த்து அவர்கள் பாராட்டியதுடன் சிவகாமியை நடனமாடச் சொல்லியும் பார்த்து மகிழ்ந்தார்கள். சிவகாமி மங்கைப் பருவத்தை அடைந்து நடனக் கலையில் ஒப்பற்ற தேர்ச்சியும் அடைந்த பிறகு, காஞ்சி ராஜ சபையில் அவளுடைய நடன அரங்கேற்றத்தை நடத்த வேண்டுமென்று சக்கரவர்த்தி ஆக்ஞாபித்தார். அந்த அரங்கேற்றம் எப்படி இடையில் தடைப்பட்டுப் போயிற்று என்பதை இந்த வரலாற்றில் ஆரம்ப அத்தியாயங்களில் பார்த்தோம்.