நல்ல கொலஸ்ட்ரால் உருவாகுவது எப்படி...?
01 May,2019
25 வயதான இளைஞர்களுக்கு இன்றைய திகதியில் மாரடைப்பு ஏற்படுவது என்பது இயல்பாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் தங்களது உணவு முறையையும், வாழ்க்கை முறையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உண்ணும் உணவுகள் கெட்ட கொலஸ்ட்ராலை உருவாக்கி, இதய தசைகளையும், இதய இரத்தக் குழாய்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க நல்ல கொலஸ்ட்ராலின் தேவை ஏற்படுகிறது.
பொதுவாக நல்ல கொலஸ்ட்ராலை எம்முடைய உடலில் இருக்கும் கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது. கல்லீரல் உற்பத்தி செய்தாலும் சில வகை உணவுகளில் நல்ல கொழுப்புகளும் அடங்கியிருக்கின்றன.
இதனை சாப்பிடுவதன் மூலம் நல்ல கொழுப்பை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். அதே சமயத்தில் மாரடைப்பை தவிர்க்க வேண்டுமென்றால், அதற்குரிய நல்ல கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் நாம் சிலவற்றை உறுதியாக பின்பற்ற வேண்டும்.
நாளாந்தம் சீரான நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். உடல் எடையை சீரான முறையில் பராமரிக்க வேண்டும். புகை பிடிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். மது அருந்துவதையும் அறவே தவிர்க்க வேண்டும். பீட்சா, பர்கர், சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ், அப்பளம், வடை போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
அதிகமான பழவகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவில் மீன் சாப்பிடுவது நல்லது. தினமும் யோகாசனப் பயிற்சியும், தியானப் பயிற்சியும் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேற்கூறியவற்றை உறுதியாக பின்பற்ற தொடங்கினால், எம்முடைய கல்லீரல், மாரடைப்பு ஏற்படாத வண்ணம் இதய இரத்தக் குழாய்களுக்குத் தேவையான இரத்தத்தில் கெட்ட கொழுப்பு தங்காமல், அதனை அகற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். . அத்துடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.