கண்வலி வருவது கண்ணுக்கு நல்லது என்பது உண்மையா?
கண்வலி வருவது நல்லது; இதனால் கண் சுத்தமாகும் என்பதெல்லாம் உண்மையல்ல. கணவலிக்கு தாமாகவே மருந்து வாங்கி பயன்படுத்துவது தவறு. அவ்வாறு செய்வது அப்போது நிவாரணம் அளித்தாலும் பிற்காலங்களில் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்
மாறுகண் பார்வை என்றால் என்ன..?
மாறுகண் என்பது இரண்டு கண்களும் ஒரே திசையில் ஓரிடத்தைப் பார்க்க இயலாத தன்மைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். ஒவ்வொரு கண் விழி அசைவும் நான்கு நேராகவும் இரண்டு சாய்ந்தும் உள்ள ஆறு தசை நார்களின் செயல்களைப் பொறுத்தே அமையும். இவற்றின் குறைகளே ஓரக் கண்பார்வையை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் தொலை பார்வைக் கோளாறு பல தடவைகளில் உள்புறமாக ஓரக்கண்பார்வையைத் தோற்றுவிக்கிறது. அதுவும் குறிப்பாகக் குழந்தையானது அருகிலுள்ளவற்றைப் பார்க்கும் போதே இது தோன்றும்.
கிட்டப்பார்வை வெளிப்புறப் பக்கவாட்டுப் பார்வையை உண்டாக்கும். குழந்தைப் பருவ காலத்திற்குச் சில ஆண்டுகள் கழித்தே ஓரக்கண் பார்வை பக்கவாதத் தாக்கத்தால் வழக்கமாய்த் தோன்றுகிறது. காரணம் மூளையைச் சில நோய்கள் தாக்குவதால் அல்லது கண்களின் தசை நார்களின் நரம்புகளைச் சில நோய்கள் தாக்குவதால் இது ஏற்படுகிறது.
ஒரு கண் மற்ற கண்ணைக் காட்டிலும் சிறந்த பார்வை உடையதாயின், சிறந்த பார்வையுடைய கண் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் மேலும் மேலும் திறன் குறைந்து அதன் செயல் தன்மை குறைந்து கொண்டே செல்லத் தொடங்குகிறது. எனவே ஒருக்கணிப்புக்கண் சிகிச்சை எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்கப்படவேண்டும். ஒரு கறுப்பு லென்சை சிறப்புக் கண்ணின் தனிப்பயனைத் தடை செய்யும் பொருட்டு, ஒரு பக்கத்தில் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிவதே வழியாகும். இவ்வணிதல், செயல் குறைந்து வரும் கண்ணை மேலும் செயலிழப்பதிலிருந்து தடுக்கும். கண்ணின் தசைநார்களை வலுப்படுத்த உதவுவதற்காகச் சரியான பார்வை சார்ந்த பயிற்சிகள் எனக் கூறப்படும் தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அப்பயிற்சியில் சரியாக இலக்கு நோக்கி உதவ ஒரு உருவத் துளையிட்ட மூக்குக் கண்ணாடியும் கொடுத்தல் உண்டு. சில நபர்களுக்கு நோயுற்ற கண்ணின் தசை நார்களைச் சரிப்படுத்த அல்லது சிறந்த கண்ணின் வலுமிகுந்த தசைநார்களின் வலுவை நெகிழச் செய்ய அறுவைச் சிகிச்சையும் தேவைப்படுகிறது
மாறுகண் கோளாறை சரிப்படுத்த முடியுமா?
பொதுவாக இது “சோம்பேறிக் கண்நோய்” எனப்படுகிறது. இந்த வகை மாறுகண் கோளாறை சிறு வயதிலேயே சரிசெய்து இருக்க வேண்டும். வயதான பிறகு மாறுகண் கோளாறை சரிசெய்ய “காஸ்மெடிக் சர்ஜரி” முறையை நாடலாம். ஆனால், இதனால் பார்வைத் தெளிவு ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது. அதேபோல் கண்பயிற்சியும் சிறுவயதில்தான் பலன் கொடுக்கும். உடனே கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
மஞ்சள் காமாலையில் கண் ஏன் மஞ்சளாக மாறுகிறது?
பித்தநீர் கல்லீரல் செல்களினால் சுரக்கப்படுகிறது. இந்நீர் மஞ்சள் கலந்த வெளிர் நிற பச்சையாக உள்ளது. இஃது ஏனெனில் மஞ்சள் நிறமியான பில்லூபினால்தான். இந்த நிறமிதான் இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள் உடையும் பொழுது பித்த நீருடன் கலந்து உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் நோய்வாய்ப்பட்ட நிலையில் இவ்வுறுப்பு வேலை செய்ய முடியாத பொழுதுதான் இந்நிறமிகள் இரத்தத்தில் கலப்பதால் தோலும் கண் விழியும் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இவ்வாறு மஞ்சள் நிறமாக மாறும்பொழுதுதான் இது ஆங்கிலத்தில் ஜான்டிஸ் என அழைக்கப்படுகிறது.
பில்லுருபின் என்ற நிறமி ஒரு தேவையற்ற பொருள். சிவப்பு அணு உடையும்பொழுது உண்டாவது. உடல் நல்ல நிலையில் உள்ளபொழுது இவை மலத்துடன் வெளியேற்றப்படும். அப்போது மலம் மஞ்சள் நிறத்தைப் பெறுகிறது. ஆனால் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறி ஒருவருக்குத் தோன்றும் பொழுது சிறுநீரும், கண்ணீரும்கூட மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.
கண்களைப் பேணும் காய்கறிகள்
நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.
அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.
வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.
உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.