தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அஹ்சன் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளர் ராபியா அஹ்சன் ராவல்பிண்டியில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் ’92 நியூஸ்’ தனியார் செய்தித் தொலைக்காட்சியில் மூத்த செய்தித் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த 41 வயதான ராபியா அஹ்சன், ராவல்பிண்டியின் குல்ஷனாபாத் பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கிக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இச்சம்பவத்தின் போது வீட்டிற்கு வெளியில் அவரது தாயாரும் சகோதரியும் இருந்த நிலையில், படுக்கையறையில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டு விரைந்து சென்றபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த அவரது கணவர் அஹ்சன் தாஹிரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட உரிமமில்லாத 30-போர் கைத்துப்பாக்கியைக் கைப்பற்றினர்.

விசாரணையின் போது துப்பாக்கியை இயக்கியபோது தவறுதலாகக் குண்டு பாய்ந்துவிட்டதாக அவரது கணவர் அஹ்சன் தாஹிர் வாதிட்டுள்ளார். ஆனால், பஞ்சாப் தடய அறிவியல் முகமையின் சோதனைகளுக்குப் பிறகு பாகிஸ்தான் தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குப் பாகிஸ்தானின் முதல் பெண்மணி அசீஃபா பூட்டோ-ஜர்தாரி மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து, நியாயமான முறையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உயிரிழந்த ராபியா அஹ்சனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட கணவர் அஹ்சன் தாஹிரைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் இரண்டு நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சதர் பைரூனி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.