அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் முதன்மை எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு வெடித்துச் சிதறுவது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவைப் பகிர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். “கார்க் தீவு துண்டு துண்டாக நொறுக்கப்படுகிறது” என்ற வாசகத்துடன் அவர் வெளியிட்டுள்ள இந்தச் பதிவு உலக அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லாரக் தீவில் கடல் கண்ணிவெடிகளை ஏவத் தயார் நிலையிலிருந்த ஈரானிய ராணுவத்தின் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த இருதரப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே டிரம்ப் தனது தளத்தில் போலி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதிபர் டிரம்ப் பகிர்ந்த அந்த வீடியோவில் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளும் டேங்கர் கப்பல்களும் பயங்கர வெடிவிபத்தில் சிதறுவது போலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், சர்வதேச செய்தி நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் அது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஈரானிய அதிகாரிகளும் இந்த வீடியோவைப் “கேலிக்கூத்தானது” என நிராகரித்துள்ளனர். ஈரானின் 90% கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவு பாதுகாப்பாகவே இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்தத் திடீர் ராணுவ மோதல் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதன் விளைவாகப் ப்ரெண்ட் ரகக் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $90 டாலரைக் கடந்து உயர்ந்துள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான வர்த்தகக் கப்பல் போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்து உலகப் பொருளாதாரத்திற்குப் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.



