உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சலேவுக்காக கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட விமல் வீரவன்ச தனது மனைவிக்காகவும், சகோதரனுக்காகவும், ஊடக செயலாளருக்காகவும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடபடலாம். குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் தான் ஒருசிலர் செயற்படுவதற்கு முயற்சிக்கிறார்கள்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுவதற்கு முயற்சிக்கிறார்கள்.இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களைத் தொடர்ந்தே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.சுரேஸ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.
சுரேஸ் சலே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் போலியான விடயங்களை முன்னிலைப்படுத்து மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறான நிலைப்பாட்டை தோற்றுவிப்பது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும், விசாரணைகளுக்கும் இடையூறு விளைவிப்பதாகும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சலேவுக்காக கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட விமல் வீரவன்ச தனது மனைவிக்காகவும், சகோதரனுக்காகவும், ஊடக செயலாளருக்காகவும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடபடலாம். குண்டுத்தாக்குதலின் உண்மை சூத்திரதாரியை பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதித்த பின்னரே சுரேஸ் சலேவுக்காக பலர் குரல் கொடுக்க முன்னிலையாகியுள்ளனர்.
போராட்டங்கள் ஊடாக உண்மையை மூடிமறைக்க முயற்சிக்கிறார்கள்.குண்டுத்தாக்குதல் தொடர்பான உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என்றார்.




