அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தூதரக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், வாஷிங்டன் அளித்த பதில்கள் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஈரான் முன்வைத்துள்ள 7 முக்கிய நிபந்தனைகளுக்கும் அமெரிக்கா முழுமையாகவும் தெளிவுபடவும் பதிலளித்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்திப் பாதை மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காஸா மற்றும் லெபனானில் உடனடி போர்நிறுத்தம், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவித்தல், எண்ணெய் துறை மீதான தடைகளை நீக்குதல் மற்றும் கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெறுதல் போன்றவை ஈரானின் 7 நிபந்தனைகளில் அடங்கும்.
இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் பயப்படவில்லை என்றும், ஆனால் முந்தைய ஒப்பந்தங்களை மீறிய அமெரிக்காவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடனேயே பங்கேற்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார். கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க தரப்பில் கூடுதல் படைகள் பிராந்தியத்தில் குவிக்கப்பட்டு வரும் நிலையில், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், அடுத்தகட்ட முடிவுகள் குறித்து உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன



