அமெரிக்காவில் முதமுதலாக கருப்பின பெண் ஒருவர் ஆளுநராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜார்ஜியா மாகாண ஆளுநர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், தனது வெற்றி மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அட்லாண்டாவின் முன்னாள் மேயரான இவர், இந்த தேர்தல் மூலம் குடியரசு கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிக் ஜாக்சனை தோற்கடித்துள்ளார்.
ஜார்ஜியா மாகாணத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆளுநராக குடியரசு கட்சியின் பிரைன் கெம்ப் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது இம்மாகாணத்தில் ஜனநாயகக் கட்சிக்கு கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றியை தேடித் தந்துள்ளார்.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவருக்கு மூத்த ஆலோசகராகவும், வெள்ளை மாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்ற அதே நாளின் மாலையில், மற்றொரு கருப்பின பெண் ஆளுநராக வெற்றி பெற்றார். ஸ்டேசி பிளாஸ்கெட் என்ற கருப்பின பெண், விர்ஜின் தீவுகளின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் மற்றும் ஸ்டேசி பிளாஸ்கெட் ஆகியோரின் வெற்றி அமெரிக்க அரசியலில் கருப்பினப் பெண்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியின் முக்கிய அடித்தளமாக இவர்கள் இருந்து வந்தாலும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உயர் பதவிகளில் இவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்து வருகிறது.
மற்றொரு முக்கிய நிகழ்வாக குடியரசு கட்சியைச் சேர்ந்த பைரன் டொனால்ட்ஸ், புளோரிடா மாகாண ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓஹியோ ஆளுநர் தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வி
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவைப் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் 51 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு ஓஹியோவில் பேசிய 41 வயதாகும் விவேக் ராமசாமி, “இது ஒரு கடினமான போட்டி. சில தருணங்களில் இரு தரப்பிலும் கசப்பான சூழல்கள் ஏற்பட்டன. இந்த அறையில் உள்ள நாம் அனைவரும் ட்ரம்ப்பின் நிர்வாகம் வெற்றிபெற வாழ்த்த வேண்டும்” என்று தெரிவித்ததாக சி-ஸ்பான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் விவேக் ராமசாமி 45 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குளைப் பெற்றுள்ளார்.
2024ம் ஆண்டு குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் விவேக் ராமசாமி பங்கேற்றார். எனனும், இந்த போட்டியில் அவர் டொனால்டு ட்ரம்ப்பிடம் தோல்வி அடைந்தார்.
இம்முறை ஓஹியோ ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்ட விவேக் ராமசாமி, இந்த தேர்தலுக்காக தனது சொந்த சொத்தில் இருந்து 36 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்ததாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சக கோடீஸ்வரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெஃப்ரி யாஸ் ஆகியோரிடம் இருந்து பல மில்லியன் டாலர் நன்கொடைகளை விவேக் ராமசாமி பெற்றுள்ளார்.
துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் அரசியல் குழுக்களில் இருந்த மிகச்சிறந்த வியூக நிபணர்களின் ஆலோசனைகளின்படி தேர்தலை எதிர்கொண்ட போதிலும் விவேக் ராமசாமி தோல்வி அடைந்துள்ளார். இந்தத் தேர்தலில் விவேக் ராமசாமிக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ஆதரவை வழங்கி இருந்தார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஓஹியோவுக்கு ட்ரம்ப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



