டிரம்ப் கட்சி படுதோல்வி அமெரிக்க இடைத்தேர்தல் – மக்கள் பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக்கட்சி கைப்பற்றியது

 

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியை வீழ்த்தி எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி அபார வெற்றி பெற்றுள்ளதால் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அங்கு விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு மற்றும் ஈரான் மீதான போர் காரணமாக மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்நாட்டின் 435 உறுப்பினர்களை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் சபை முழுமைக்கும் மற்றும் 100 இடங்களை கொண்ட செனட் சபையின் 35 இடங்களுக்கும் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி மக்கள் பிரதிநிதிகள் சபையை கைப்பற்ற 3 இடங்களும், செனட் சபையை தன்வசப்படுத்த 4 இடங்களும் தேவை என்ற நிலை இருந்ததால் இந்த தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் ஜனநாயகக்கட்சி 241 இடங்களை கைப்பற்றி பிரதிநிதிகள் சபையில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆளும் குடியரசு கட்சிக்கு மிகப்பெரிய அடி கொடுத்துள்ளது. ஆளும் குடியரசு கட்சி 194 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று சபையின் அதிகாரத்தை எதிர்க்கட்சியிடம் பறிகொடுத்து படுதோல்வி அடைந்துள்ளது. செனட் சபையிலும் குடியரசு கட்சி வசம் இருந்த நார்த் கரோலினா உள்ளிட்ட 2 முக்கிய இடங்களை ஜனநாயகக்கட்சி அதிரடியாக தட்டிப்பறித்து அங்கும் மெஜாரிட்டியை பிடிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. மேலும் வர்ஜீனியா மாகாணத்தின் 10வது தொகுதியில் போட்டியிட்ட பராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுகாஸ் சுப்பிரமணியம் மீண்டும் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து ஜனநாயகக்கட்சியின் அவைத் தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ், ‘அமெரிக்க நாடு தற்போது ஒரு வியத்தகு அரசியல் மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது’ என்று தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளதால், அதிபர் டிரம்ப் இனிமேல் எந்த சட்ட மசோதாவையும் தன்னிச்சையாக நிறைவேற்ற முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம் ‘நாட்டை நாங்கள் தொடர்ந்து தலைசிறந்த இடத்திற்கு கொண்டு செல்வோம்’ என்று கூறிய அதிபர் டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தேர்தல் முறைகேடு புகார்களை கூறி வருவது அமெரிக்க அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

அமெரிக்க அரசியலில் சமீப காலமாக இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி மற்றும் ஆளும் குடியரசு கட்சி ஆகிய இரு பெரும் கட்சிகள் சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அமெரிக்க வாக்காளர்களின் பேராதரவைப் பெற்று வெற்றிகளை குவித்து வருகின்றனர். வர்ஜீனியா மாகாணத்தின் 10வது நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்ட சுகாஸ் சுப்பிரமணியம் 63 சதவீத வாக்குகளை வாரிக் குவித்து மீண்டும் எம்பியாக தேர்வாகியுள்ளார்.

அதேபோல் புளோரிடாவின் 22வது தொகுதியில் பள்ளி முன்னாள் முதல்வரான பியா டண்டியா 51.9 சதவீத வாக்குகள் பெற்று குடியரசு கட்சியின் கேசி அஸ்காரை தோற்கடித்து புதிய வரலாறு படைத்ததோடு, மேரிலாந்து மாகாண துணை கவர்னர் அருணா மில்லரும் தனது பதவியை வெற்றிகரமாக தக்கவைத்துள்ளார். இதேபோன்று கலிபோர்னியாவில் ரோ கன்னா, அமீ பெரா மற்றும் வாஷிங்டனில் பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட மூத்த இந்திய வம்சாவளி எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதே வேளையில், இந்திய வம்சாவளி தொழிலதிபரும் குடியரசு கட்சியின் முக்கிய பிரமுகருமான விவேக் ராமசாமி , ஒகையோ மாகாண கவர்னர் பதவிக்கான போட்டியில் ஜனநாயகக்கட்சியின் எமி ஆக்டனிடம் தோல்வியுற்றார். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் பதவிக்கான தீவிர போட்டியில் நித்யா ராமன் முன்னாள் மேயர் கரேன் பாஸுடன் கடுமையான பலப்பரீட்சை நடத்தி வருவது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புவியியல் காண்;

அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தலில் அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆளும் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்தது. சுமார் 100 ஆண்டுகால குடியரசு கட்சியின் கோட்டையான கன்சாஸ் மற்றும் 1994ம் ஆண்டுக்கு பின் எப்போதும் இல்லாத வகையில் டெக்சாஸ், தென் கரோலினா ஆகிய மாகாணங்களின் செனட் இடங்களையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி தட்டிப்பறித்தது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டையும் ஜனநாயகக்கட்சி தன்வசப்படுத்தி வரலாற்று வெற்றி பெற்று, அதிபர் டிரம்பின் அதிகாரத்திற்கு கடிவாளம் போட்டுள்ளது.

இந்த அதிரடி தேர்தல் பின்னடைவுக்கு மத்தியில், ‘வீட்டோ’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப் புதிய போர்க்கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி பேட்டியில் பேசிய அவர், ‘எதிர்க்கட்சியினர் ஏதேனும் விபரீதமான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினால், அதிபருக்கான சிறப்பு வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அவற்றை உடனடியாக முடக்குவேன்’ என்று ஆவேசமாக தெரிவித்தார். மேலும் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில், ‘தேர்தல் களத்தில் நான் நேரடியாக போட்டியிடவில்லை, அப்படி நின்றிருந்தால் நிச்சயம் மகத்தான வெற்றி கிடைத்திருக்கும்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார். எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளதால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டிரம்ப் கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்த முடியாத பெரும் அரசியல் முட்டுக்கட்டை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.