அல்பேனியா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அரசுகளுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக நீடிக்கின்றன. இப்போராட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னரின் முதலீட்டு நிறுவனம் பெரிய ஆடம்பர சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை மேற்கொள்ள இருந்ததற்கு எதிராக பிளமிங்கோ இயக்கம் பல மாதங்களாக பேரணி, போராட்டங்களை நடத்தியது. நாளடைவில் இப்போராட்டம் கல்வி அமைப்பில் நிலவும் ஊழலை கண்டித்தும் அரசுக்கு எதிராகவும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டமாக உருவெடுத்தது.
அல்பேனியா பிரதமர் எடி ரமா பதவி விலகும் வரை போராடப் போவதாக ஜென்-ஸி இளைஞர்கள் அறிவித்து நடத்திய இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 8வது நாளாக நேற்றும் தலைநகர் டிரானாவில் வன்முறைகள் நீடித்தன. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போராடி வருகின்றனர்.
மிலான் உள்ளிட்ட வடக்கு நகரங்களில் இளைஞர்கள் கடைகளை கொள்ளையடித்து, கண்ணாடிகளை உடைத்து, போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பிரதமர் ஜார்ஜியோ மெலோனி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், 500 ராணுவ படையினரை மிலானுக்கு அனுப்புதல், புதிய சட்டங்கள், கடுமையான தண்டனைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் போராட்டங்களில் ஈடுபட்டால், அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 20,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடு உடனடியாக வசூலிக்கப்படும். சிறுவர்கள் ஈடுபட்டால், அவர்களின் பெற்றோர்களே பொறுப்பேற்க வேண்டும். 14 முதல் 17 வயதுக்குட்பட்ட இளைஞர்களை போலீசார் ஆபத்தானவர்களாக கருதினால் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் கல்வித் துறையில் சீர்கேடுகளை கண்டித்து கடந்த ஒரு மாதமாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக மாறியிருக்கிறது. இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல புராதனச் சின்னங்கள் கலவரக்காரர்களால் அழிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரம் கற்க
மற்ற ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகலிலும் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கி இருக்கின்றன. கிரீஸ் நாட்டிலும் அரசுக்கு எதிராக நேற்று முன்தினமும் நேற்றும் பேரணிகள் நடந்துள்ளன. விலைவாசி உயர்வு, கல்வித்துறையில் சீர்கேட்டை கண்டித்து மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் அமைதி சீர்குலைந்துள்ளது. ஐரோப்பாவில் சுமார் 9 நாடுகளில் அரசுக்கு எதிரான ஜென்-ஸிக்களின் போராட்டம் காரணமாக அரசாங்கங்கள் கதி கலங்கிப் போயுள்ளன.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘‘இத்தனை இளம் கலவரக்காரர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை பார்ப்பது வேதனையளிக்கிறது, அச்சமூட்டுகிறது. பொருட்களை உடைக்கவும், திருடவும், இவற்றை செய்வதை தாங்களே படம் பிடித்து மற்றவர்களுக்கு பகிரவும் இளைஞர்கள் சதுக்கத்திற்கு வந்தனர். இது நாம் தீவிரமாக கவனிக்க வேண்டிய நிகழ்வு. அவர்கள் பகிரும் புகைப்படங்கள், மற்றவர்கள் பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக மாறுவதைத் தடுக்க வேண்டும்’’ என்றார்.
பிரான்சில் நடக்கும் வன்முறை போராட்டங்களுக்கு குடியேறிகளே காரணம் என்றும் குறிப்பாக முஸ்லிம்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார். பாரிஸ் முஸ்லிம் நகரமாக மாறிவிடும் என்றும், அமெரிக்காவிலும் குடியேறிகளால் அபாயங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் பிரான்ஸ் போராட்டத்திற்கு முஸ்லிம் அமைப்புகளோ, குடியேறிகளோ காரணமில்லை என அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் கூறி உள்ளனர். பிரான்சில் நடப்பது விலைவாசிக்கு எதிரான மக்கள் போராட்டம். இதை எந்த ஒரு குறிப்பிட்ட தனி அமைப்பும் முன்னின்று வழிநடத்தவில்லை. பல அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



