ட்ரம்ப் விமர்சனம் “பாரிஸ் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும்,

 

பிரான்சில் நடைபெற்று வரும் கலவரங்களுக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். குடியேற்றம் தொடர்பான தனது அறிவுரையை மேக்ரான் கேட்டிருந்தால் இந்த வன்முறையைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “பாரிஸ் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறிவிடும், இது சரியான ஒப்பந்தம் அல்ல. பெருமளவில் குடியேறிகளை பிரான்சுக்குள் அனுமதிப்பதன் மூலம் நீங்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறீர்கள் என்று மேக்ரானிடம் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தேன். ஆனால் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாரிஸ் நகரம் விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறப்போகிறது” என்று கூறினார்.

 

பிரான்சின் பாரிஸ், லில்லே, நீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வார இறுதியில் பெரிய அளவில் கலவரம், கடைகள் சூறையாடல் மற்றும் காவல்துறையினருடன் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதன் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை தொடர்பாக சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 1,000 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமையன்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகப் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், இந்த கலவரத்தால் 3,000 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டில் அமைதியை மீட்டெடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடையே உரையாற்றிய அதிபர் மேக்ரான், வன்முறைச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுபோன்ற அழிவுச் செயல்களை எதனாலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றாலும், வன்முறையில் ஈடுபடுபவர்களை அதனுடன் ஒப்பிட முடியாது என்று தெரிவித்த அவர், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களைப் பாதுகாக்கத் தேவையான இடங்களில் போராட்டங்களுக்குத் தடை விதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.