ஒழுக்கக்கேடான செயல்-சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை!

 

சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பகுதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இருவருக்கும் இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவூதி உள்துறை அமைச்சகம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் நஸீருல் இஸ்லாம் அப்துல் பஷீர் (Nazerul Islam Abdul Basir) மற்றும் சிட்டி அக்தர் (Siti Akhtar) ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவூதி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இருவரும் மக்கா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

புனித தலத்தின் புனிதத்தன்மையையும் நேரத்தையும் மீறி கடுமையான குற்றத்தில் ஈடுபட்டமைக்காக இஸ்லாமிய சட்டத்தின் தஃஸீர் (Ta’zir) பிரிவின் கீழ் நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தினால் இத்தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மன்னரின் உத்தியோகபூர்வ உத்தரவுக்கேற் மக்கா பிராந்தியத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இம் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்துச் சவூதி அரேபியா தங்களுக்கு முன்கூட்டியே எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வழங்கவில்லை என ஜெத்தாவிலுள்ள பங்களாதேஷ் துணைத்தூதரகம் (Consulate General of Bangladesh) கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தெளிவான உத்தியோகபூர்வ விளக்கத்தைக் கோரி சவூதி வெளியுறவு அமைச்சகத்திற்குத் தூதரகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகப் பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.