“நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பான சரியான முடிவாகும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அந்தத் தீர்ப்புக்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கு அப்பால் எம்மிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பதுளையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
“சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். சட்டம் தம்மை நெருங்காது எனக் கருதியவர்களும், கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியவர்களுமே தற்போது சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு எதிராகக் கூக்குரல் எழுப்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கினோம் – அமைச்சர் சரோஜா போல்ராஜ் அரசியல் அலையால் அல்ல; சமூக மாற்றத்துக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர்!
“கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் உழைக்கும் எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என நாம் உறுதியளித்தோம். அதற்கமைய, அவர்களுக்கான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தோம்.
கடந்தகால ஆட்சியாளர்கள் 10 ரூபாவைக்கூட சம்பள அதிகரிப்பாக வழங்காத நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தச் சம்பளமாக 1,750 ரூபாவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தோம்” என அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
“இம்முறையும் 15 இலட்சம் மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவாக 6,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
நாம் அரசியல் அலைக்காக வாக்களிக்கவில்லை. எதிரணியினர் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும், தனிநபர்களைக் குறிவைத்துச் சேறு பூசினாலும் உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும். சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர்.
எமக்குத் தனிப்பட்ட ரீதியில் இழப்பதற்கு எதுவுமில்லை. நாட்டை மீட்டெடுப்பதற்காகவே நாம் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அந்தப் பயணத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம்” எனவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.



