கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கண்டி மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிக்குகளின் பாதயாத்திரைக்குப் பின்னால் பல அரசியல் நகர்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாதயாத்திரை தொடங்குவதற்கு முந்தைய நாள், அதில் பங்கேற்ற முன்னணி பிக்குகள் இருவர் கொழும்பு 7 இல் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்குவதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.
இந்தச் சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஐக்கிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, தாம் முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து பிக்குகள் விரிவாக விளக்கமளித்ததுடன், அதற்கு பூரண ஆதரவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
நிலைமைகளைக் கேட்டறிந்த ரணில் விக்கிரமசிங்க, ‘எங்களிடமிருந்து உங்களுக்கு என்ன மாதிரியான உதவிகளை எதிர்பார்க்கப்படுகின்றீர்கள்?’ என வினவினார்.
தொடர்ந்து பேசிய ரணில், நீங்கள் இந்த ஆன்மீகப் பணியை தாராளமாக முன்னெடுத்துச் செல்லுங்கள். அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாங்கள் இந்த நடைபயணத்தில் நேரடியாகப் பங்கேற்கப் போவதில்லை. ஆனால், உங்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பின்னணியிலிருந்து வழங்குவோம்.
இதனை பூரணமான பிக்குகளின் ஆன்மீகப் போராட்டமாகவே முன்னெடுத்துச் செல்லுங்கள் எனத் தெரிவித்தார். ஞானசார தேரருக்கு நேர்ந்த சம்பவம் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, இது வெறும் துறவற ஆடைக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பௌத்த தர்மத்திற்கும் சாசனத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட பெரும் இழுக்கு எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், அரசியலமைப்பின் 9-வது பிரிவில் பௌத்த மதம் என்பதற்குப் பதிலாக ‘பௌத்த சாசனம்’ எனச் சேர்த்தவர் எங்களது தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன. இதன் மூலம் பௌத்தத்தின் கட்டமைப்பு மிகப்பரந்த அளவில் பாதுகாக்கப்படுகிறது. நாங்களும் அந்தப் பாரம்பரிய வழியிலேயே தற்போதும் செயற்பட்டு வருகிறோம்’ எனச் சுட்டிக்காட்டினார்.
அமைப்பாளர்களுக்கு அவசர உத்தரவு
சந்திப்பு நிறைவடைந்த கையோடு, ரணில் விக்கிரமசிங்க, கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களைத் தொடர்பு கொண்ட அவர், பாதயாத்திரை ஆரம்பமாகும் இடத்தில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு பணித்தார். அத்துடன், அப்பகுதியில் உள்ள அனைத்து விகாரைகளிலிருந்தும் பிக்குகளை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
கேகாலை மாவட்ட அமைப்பாளர்களுக்கும் தொடர்பு கொண்டு பாதயாத்திரைக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மறுபுறம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த ரணில், அந்தந்தத் தொகுதிகளிலிருந்து பிக்குகளை அதிகளவில் பங்கேற்க வைக்குமாறு கேட்டுக்கொண்டார். பாதயாத்திரையின் இறுதி நாளில் கொழும்பில் செய்யப்பட வேண்டிய அனைத்துப் பணிகளையும் நேரில் ஆராய்ந்து நிறைவேற்றுமாறு கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவிடம் பொறுப்பளித்தார்.
இது ஒரு மத மற்றும் ஆன்மீகப் பணி என்பதால், அரசியல் தலைவர்களாக இதில் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர்க்க ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். துறவற ஆடை விவகாரத்தை மையமாக வைத்துத் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், தற்போது தீவிரமடைந்து ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தும் அளவுக்கு பரந்துபட்ட மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தத் திரைக்குப் பின்னைய நகர்வுகளும், பிக்குகளின் தீவிரப் போராட்டமும் தற்போது அரசாங்கத்திற்கு மீள முடியாத பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
ரணில் – சட்டத்தரணிகள் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சட்டத்தரணிகளுடனான விசேட சந்திப்பொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பின்போதும் பிக்குகளின் துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரமே முதன்மைப் பொருளாக விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இது தொடர்பாக நீண்டநாட்களாக இருந்துவந்த ஒரு சந்தேகத்திற்கு ரணில் விக்கிரமசிங்க இதன்போது நேரடியாகப் பதிலளித்தார்.
‘நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஞானசார தேரர் சிறைக்கு அனுப்பப்பட்டபோதிலும், அவரது துறவற ஆடை ஒருபோதும் களையப்படவில்லை’ என ரணில் விக்கிரமசிங்க அழுத்தமாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் நீதி அமைச்சராக இருந்த தலதா அத்துகோரள, கொடபிட்டிய ரா{ஹல தேரருக்கு அனுப்பிய கடிதத்தில் இது குறித்த தெளிவான வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததையும் ரணில் சுட்டிக்காட்டினார்.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று இடையூறு விளைவித்த குற்றத்திற்காக, அன்றைய நீதவான் ரங்க திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டபோதிலும், அன்று அவரது துறவற ஆடை களையப்படவே இல்லை. சிறைத்தண்டனை அனுபவித்து ஒரு வருடம் கடந்த நிலையில், சில மகா சங்கத்தினர் தன்னைச் சந்தித்து உரையாடியதை ரணில் இதன் போது நினைவு கூர்ந்தார்.
பிக்குகள் அப்போது ரணிலிடம் கூறியதாவது
ஞானசார தேரர் குற்றவியல் வழக்கு எதிலும் தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றத்தை அவமதித்தமை துறவறத்தை இழக்கும் பெருங்குற்றம் ஆகாது. துறவறத்தை இழக்கும் நிலைமைக்கு வரும்போது மட்டுமே துறவற ஆடையை அகற்ற முடியும். அல்லாத பட்சத்தில், ஆடையை அகற்றுவது 9-வது அரசியலமைப்புப் பிரிவுக்கு முற்றிலும் எதிரானது. 1972-இல் ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்கள் ‘பௌத்த மதம்’ என்பதை ‘பௌத்த சாசனம்’ எனத் திருத்தியதன் நோக்கம் பௌத்த அமைப்பைப் பாதுகாப்பதே ஆகும்.’
பிக்குகளின் விளக்கத்தைக் கேட்டறிந்த ரணில், அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிரிசேனவிடம் பேசுமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில், ஜனாதிபதிக்கே அதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் இருந்தது. இதன் பின்னர் ‘பிக்குகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினார்கள். நாங்களும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம். ஒரு வருட காலம் சிறையில் இருந்த ஒரு பிக்குவின் துறவற ஆடையைக் களைந்து தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்க முடியாது.
எனவே, அமைச்சரவையிலும் ஏனைய அமைச்சர்களுடனும் நான் பிரதமராக கலந்துரையாடினேன். சிறையிலிருக்கும் ஒரு பிக்குவின் துறவற ஆடை கழற்றப்பட்டால், பழியனைத்தும் அரசாங்கத்தின் மீதே விழும் என நான் சுட்டிக்காட்டினேன். ஒரு வருடம் தண்டனை அனுபவித்துவிட்டதால், அரசியலமைப்பின் 9-வது பிரிவின் கீழ் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டது என ரணில் குறிப்பிட்டார். ஆனால், தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரத்தைக் கையாளத் தவறியதால், இது இன்று நாட்டின் பாரிய மதப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது’ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ரணிலிடம் புலம்பிய சஜித் அணியினர்
மறுபுறம், அரசாங்கத்திற்குப் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் பின்னணியிலிருந்து உதவக்கூடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தத் துறவற ஆடைப் பிரச்சினையிலும் அரசாங்கத்தைக் காப்பாற்றத் தீவிரமாக முயன்று வருகிறார். ஆரம்பத்தில் துறவற ஆடைப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகச் சஜித் 13-வது திருத்தம் குறித்துப் பேசினார். ஆனால், அரசியல் வட்டாரங்கள் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவொன்று மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து, கண்டி ஸ்ரீதலதா மாளிகை மீதான குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஜே.வி.பிக்குத் தொடர்பில்லை என முற்றிலும் குற்றமற்ற சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்தது. சஜித் பிரேமதாசவின் இந்த விசித்திரமான அரசியல் நகர்வுகளால் அதிருப்தியடைந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த விவரம் தெரியாத மனிதரை வைத்துக்கொண்டு எம்மால் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது’ என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி-க்கள் ரணிலிடம் புலம்பித் தள்ளியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஷேட தான நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். ரணிலின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் ஊடக பணிப்பாளராகப் பணியாற்றிய ஷானுக கருணாரத்னவின் மறைந்த மனைவியின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் தான நிகழ்வே அதுவாகும். கொழும்பு கங்காராம விகாரையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மகேஷ் சேனநாயக்க உள்ளிட்ட சில முக்கிய உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியாகச் சென்று தீவிர உரையாடலில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரின் கவனத்தையும் இந்த சந்திப்பு பெரிதும் ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், ரணில் விக்கிரமசிங்க மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையே மற்றுமொரு முக்கிய கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்,
சிறையிலுள்ள பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்களை நீதிமன்றத்திற்கு அல்லது வெளியில் அழைத்துச் செல்லும்போது அவர்கள் அணிய வேண்டிய ஆடை குறித்து சிபாரிசுகளை வழங்கக் குழுவொன்றை நியமிப்பதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் ஒரு கண் துடைப்பு நாடகமாகும். இவ்வாறானதொரு குழுவின் அவசியம் இங்கு எழவே இல்லை எனச் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து சட்ட நடைமுறைகளும் சிறைச்சாலை திணைக்களத்தின் நிலையான கட்டளைகளில் ஏற்கனவே மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அல்லது வேறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் தண்டனை பெற்ற கைதி ஒருவரை, சிறைச்சாலை சீருடையில் (கைதி உடையில்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கூடாது. சிறைச்சாலையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் சமூகத்தில் அவர் உடுத்திய ஆடைக்கு அமைவான சாதாரண சிவில் ஆடையை (அல்லது சம்பந்தப்பட்ட கலாசார மற்றும் மதப் பின்னணிக்குரிய ஆடையை) அணிவதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
இந்த சட்டப்பூர்வ உண்மைகளை உடனடியாக மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் ஊடக அறிக்கையொன்றை வெளியிடுமாறு முன்னாள் செய்திப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவுக்கு ரணில் விக்கிரமசிங்க உடனடி உத்தரவு பிறப்பித்தார். அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கையைக் கண்டித்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில்,
அரசாங்கம் இப்போது செய்ய வேண்டியது என்னவெனில், தேவையில்லாத குழுக்களை அமைத்து நேரத்தை கடத்துவதல்ல. ஞானசார தேரரின் துறவற ஆடையை கழற்றி எறிந்ததற்காக, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ் ஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரிடமும் முழு சங்க சபையிடமும் அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



