தனியார் நிறுவனத்தில் பேருந்து நடத்துநர். அவருக்குக் காலில் வீக்கம் ஏற்பட்டது. காலையில் வீக்கம் குறைந்துவிடும். மாலையில் மறுபடியும் வீக்கம் வந்துவிடும். நடத்துநராக நீண்ட நேரம் நிற்பதால் வீக்கம் ஏற்படுவது இயல்பு என்று வீக்கத்தைக் கவனிக்காமல் இருந்துவிட்டார்.
ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் அந்த வீக்கம் நிரந்தரமாக மாறியது. கீழ்க்காலின் தோல் கருமை கலந்த பழுப்பு நிறமாக மாறியது. அதனுடன் கடுமையான அரிப்பும் ஏற்பட்டது. ஈரப்பதமூட்டும் எந்தக் களிம்பும் அந்த அரிப்பைக் கட்டுப்படுத்தவில்லை. ஸ்டீராய்டு களிம்பும் உதவவில்லை. அவர் அந்தக் காலைச் சிறிது சொறிந்தவுடன் தோல் கிழிந்துவிட்டது.
மூன்று மாதங்களாக அந்தப் புண் ஆறவே இல்லை; இவ்வளவுக்கும் அவருக்குச் சர்க்கரை நோய் இல்லை. அருள்செல்வனுக்கு ஏற்பட்ட ஆறாத புண்ணுக்குத் தோல்தான் காரணம் என்று அவர் நினைத்தது போலவே, பலரும் இம்மாதிரியான புண்களுக்குத் தோல் நோய் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பார்கள்.
அருள்செல்வனுக்கு ஏற்பட்ட புண்ணுக்குத் தோல் காரணமில்லை. தோலுக்கு அடியில் இருக்கிற சிரை ரத்தக் குழாய்க் குறைபாடுதான் காரணம். இதை ‘நாள்பட்ட சிரைக் குழாய்க் குறை திறன்’ என்கிறது நவீன மருத்துவம்.
அதாவது, ரத்தக் குழாயில் ஏற்படுகிற கோளாறு. அதைக் கவனிக்கத் தவறும்போது, இறுதியில் தோலைப் பாதிக்கிறது. தொடக்க நிலையில் வேண்டுமானால் இந்தப் புண்ணுக்குத் தோல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறலாம். அப்படி யும் புண் ஆறவில்லை என்றால், ரத்தக்குழாய் நல மருத்துவர்களிடம்தான் சிகிச்சை பெற வேண்டும்.
எப்படி ஏற்படுகிறது?
ஒருவர் நீண்ட நேரம் நின்றாலோ, அமர்ந்தாலோ, கால்களில் உள்ள சிறிய சிரை வால்வுகள் பலவீனமடைகின்றன. இதனால் ரத்தம் இதயத்தை நோக்கி மேலே செல்லாமல், கீழேயே தேங்கிவிடுகிறது.
இப்படித் தேங்கிய ரத்தம் சிரைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக, சிரைகளிலிருந்து திரவம் வெளியே கசிகிறது. சிவப்பணுக்கள் உடைந்து இரும்புச் சத்து தோலில் படிகிறது. இதனால் தோல் கருமை கலந்த பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த ரத்தத் தேக்கம், தோலில் அழற்சியை ஏற்படுத்திச் ‘சிரைத் தேக்கத் தோல் அழற்சி’ என்கிற தோல் நோயாக வெளிப்படுகிறது.



