1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி . கறுப்பு ஜூலை சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதன் காரணமாக நாட்டைவிட்டுச் சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1983 கறுப்பு ஜூலையின்போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும் அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும் மேலும் இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்குமான விதப்புரைகளை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்ற நியமிக்க வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்பியினால் இன்று வெள்ளிக்கிழமை (09) பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டின் அரசியல் வரலாற்றில் 83 கருப்பு ஜூலையை ஒரு கருப்புப் புள்ளியாகவே நாம் கருதுகிறோம். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். கருப்பு ஜூலையினால் பாதிக்கப்பட்ட எமது நாட்டின் சமூகத்திடமிருந்து, குறிப்பாக தமிழ் சமூகத்திடமிருந்து, அதற்காக வருத்தத்தை தெரிவிப்பது மட்டுமன்றி, அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக, அந்தப் பாதிப்புக்குள்ளான அனைவருக்காகவும் ஒரு நாடாக நாம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எமது நாட்டின் பெருமளவிலான குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரையும் நல்லிணக்கத்தின் பெயராலும், சகோதரத்துவத்தின் பெயராலும் எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைக்கிறோம். மீண்டும் மீண்டும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம், அதே போல் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக, இந்த விவாதத்தில் பெரும்பான்மையினம், சிறுபான்மையினம் என்று பேசுவதை நான் கேட்டேன். எமது நாட்டில் பெரும்பான்மையினம், சிறுபான்மையினம் என்றில்லை, நாம் புரிந்துகொள்ள வேண்டியது ‘இலங்கையர்’ என்பதாகும்.
இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி, அந்தஸ்து பேதங்களின்றி, ஒற்றையாட்சி நாட்டில் எமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாத்து ஒரு நாடாக நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இந்நாட்டில் பிரதானமாக ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காக முன்வைக்கப்பட்ட பிரதான யோசனையே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகும். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாகக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் வழங்குவது எமது பொறுப்பாகும் என்பதை தெளிவாகக் கூறுகிறோம்.
ஒற்றையாட்சி நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு இதன் மூலம் சாத்தியமாகும். எமது நாட்டில் பலர் இதை பல வழிகளில் வியாக்கியானம் செய்கிறார்கள், யார் எவ்வாறு வியாக்கியானம் செய்தாலும் அது எமக்குக் கவலையில்லை.
அதுமட்டுமன்றி, மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அதை நடத்தாதிருப்பது மக்களின் இறையாண்மைக்கு வழங்கப்படும் மரண அடியாகும். அதேபோல், காணிகளை இழந்த மக்களுக்கு காணிகளை வழங்கும் நடவடிக்கை உடனடியாக இடம்பெற வேண்டும். ஒருபுறம் தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வகையிலும், மறுபுறம் காணிகளை இழந்த மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும் இது இடம்பெற வேண்டும்.
ஏதேனும் காரணத்தினால் ஒரு குறிப்பிட்ட காணிப் பகுதியை வழங்க முடியாதுபோனால், சந்தை மதிப்பீட்டிற்கு ஏற்ப குறைந்தபட்சம் நஷ்டஈடாவது வழங்கப்பட வேண்டும் என்றார்.



