1983 கறுப்பு ஜூலைக்கு உண்மையான நீதியைப் பெற்றுக்கொடுத்தால்தான் சமத்துவத்தை உருவாக்க முடியும் – க. இளங்குமரன்

 

1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் என்பது தற்செயலாக தோற்றம் பெற்றது ஒன்றல்ல. அது அரசியல் இலாபத்திற்காகவும், இனங்களுக்கிடையே பிரிவினையைத் தூண்டுவதற்காகவும் அப்போதைய ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதியாகும்.இனிவரும் காலங்களில் தமிழ், சிங்கள மக்களிடையே இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழக் கூடாது. இந்த வரலாற்றுப் பிழையான கறுப்பு ஜூலை சம்பவத்திற்கு உண்மையான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் போது தான்,நாட்டில் ஒரு சமத்துவமான மற்றும் நியாயமான எதிர்காலச் சந்ததியை உருவாக்க முடியும் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற அமர்வின்போது 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை இனக்கலவரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர் பிரேரணையை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

1983ஆம் ஆண்டு ஜூலை இனப்படுகொலை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1983 கலவரத்திற்கு முன்னதாக நாட்டில் என்ன நடந்தது என்பதை நாம் ஆழமாக ஆராய வேண்டும். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவமே இந்த பேரழிவின் ஆரம்பமாகும்.அன்று நூலகம் மட்டுமின்றி, தமிழ் மக்களின் ஜனநாயக வாக்குரிமையையும் சேர்த்துதான் எரித்துச் சாம்பலாக்கினார்கள். யாழ்ப்பாணத்தில் தங்களால் வாக்குரிமையைப் பெற முடியாது என்ற அச்சத்தில் வாக்குச்சீட்டுகளை எரித்த அரசியல்வாதிகள் தான் இன்றைக்கு எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.வன்முறைக்கு அன்றைய அரசாங்கம் உரிய நீதியைப் பெற்றுத் தந்திருந்தால், 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் அத்தகையதொரு இனக்கலவரம் நிகழ்ந்திருக்காது. ஆனால்இ அன்றைய ஆட்சியாளர்கள் அதைத் தடுக்க எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை.

கடந்த 43 ஆண்டுகளாக நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் எவரும் இதற்காக முழுமையான குரல் கொடுக்கவில்லை. அன்றைய ஆட்சியாளர்களிடம் நீதி கிடைக்காது என்பதை அவர்களும் அறிந்தே இருந்தனர்.

இங்கு நாம் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.தமிழ் மக்கள் ஒருபோதும் ஒட்டுமொத்த சிங்கள மக்களால் பாதிக்கப்படவில்லை.

கலவரத்தின் போது கொழும்பில் வசித்த பெரும்பாலான தமிழ் மக்களை, அங்குள்ள சிங்கள மக்களே தங்களது வீடுகளில் வைத்துப் பாதுகாப்பாகக் காப்பாற்றினார்கள். எனவே இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பிரிவினைவாதச் சதியாகும். யாழ்ப்பாணத்தில் பல்வேறு ஆயுத இயக்கங்கள் உருவானதற்கும், தமிழ் மக்கள் அளப்பரிய இன்னல்களைச் சந்தித்ததற்கும் அன்றைய ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளே முதன்மைச் சான்றாகும்.நகரங்களை ஆராய்க

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்தே, தங்களது சுயநல வாக்கு வங்கிக்காகவே அரசியல்வாதிகளால் இனவாதம் வளர்க்கப்பட்டது. தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மக்கள் பிரிந்து கிடந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த ஆட்சியின் மூலமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வும் நீதியும் கிடைக்கும்.

இனிவரும் காலங்களில் தமிழ், சிங்கள மக்களிடையே இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழக் கூடாது. இந்த வரலாற்றுப் பிழையான கறுப்பு ஜூலை சம்பவத்திற்கு உண்மையான நீதியைப் பெற்றுக் கொடுக்கும் போது தான்,நாட்டில் ஒரு சமத்துவமான மற்றும் நியாயமான எதிர்காலச் சந்ததியை உருவாக்க முடியும் என்றார்.