தூக்கமின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்டவை நினைவாற்றலை பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருவரின் பெயர் நினைவுக்கு வராமல் போவது, பொருட்களை எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிடுவது, ஒரு விஷயத்தை நினைவுகூர சிறிது நேரம் எடுத்துக்கொள்வது போன்றவற்றை உடனடியாக முதுமைக்கால மறதி நோயான (டிமென்ஷியா- Dementia) எனக் கருத வேண்டியதில்லை. வயது அதிகரிப்பது மட்டுமின்றி, தூக்கமின்மை, மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, 2021ம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 5.7 கோடி பேர் டிமென்ஷியா பாதிப்புடன் வாழ்ந்துள்ளனர். ஆண்டுதோறும் புதிதாக சுமார் 1 கோடி பேருக்கு டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அல்சைமர் நோய் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் முதியவர்களிடையே டிமென்ஷியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 88 லட்சம் பேர் டிமென்ஷியா பாதிப்புடன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், ஒருவருக்கு மறதி ஏற்பட்டால் அது வயது காரணமாகத்தான் இருக்கும் என எளிதில் கடந்து விடக்கூடாது. உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளாலும் நினைவாற்றல் பாதிக்கப்படலாம். வயது அதிகரிக்கும்போது நினைவாற்றலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானதாக இருக்கலாம். இருப்பினும், நினைவாற்றல் குறைபாடு என்பது மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றத்தால் மட்டும் உருவாகுவதில்லை என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்ஆர்ஐ மூளை பரிசோதனைகள் மற்றும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான நினைவாற்றல் மதிப்பீடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஆய்வில், சுமார் 3,700 ஆரோக்கியமான பெரியவர்கள் பங்கேற்றனர்.
இதில், மூளையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங்களுக்கும் நினைவாற்றல் குறைவுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மூளையில் ஏற்படும் சில மாற்றங்கள் குறிப்பிட்ட அளவை தாண்டிய பிறகு, நினைவாற்றல் குறைபாடு மெதுவாக இல்லாமல் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதுல்யா முதியோர் பராமரிப்பு மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் நிவேதா கூறியதாவது: நினைவாற்றல் என்பது மூளையின் தனிப்பட்ட செயல்பாடு மட்டுமல்ல. ஒருவர் நினைவில் வைத்துக்கொள்வது, கவனம் செலுத்துவது மற்றும் தெளிவாகச் சிந்திப்பது ஆகியவை அவரது மனநிலை, தூக்கத்தின் தரம், உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றாடச் சூழல் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவை. எனவே, மறதி அதிகரித்து வருவதாக ஒருவர் தெரிவிக்கும்போது, அதை உடனடியாக முதுமைக்கால மறதி நோயான டிமென்ஷியா (Dementia) என முடிவு செய்துவிடக் கூடாது.
மனச்சோர்வு, பதற்றம், நீண்டகால மன அழுத்தம், போதிய தூக்கமின்மை போன்ற காரணங்களால் கவனம் மற்றும் நினைவாற்றலில் சிரமம் ஏற்படுவதை மருத்துவ நடைமுறையில் அடிக்கடி காண முடிகிறது. சில நேரங்களில் ஒருவருக்கு தனது நினைவாற்றல் மோசமாகி வருவதாக தோன்றலாம். ஆனால், உண்மையில் கவனம் செலுத்தும் திறன் குறைந்திருப்பது அல்லது தொடர்ந்து கவலைகளில் மூழ்கியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும், சில மருந்துகளின் பக்கவிளைவுகள், போதைப்பொருள் அல்லது பிற பொருட்களின் பயன்பாடு, சில உடல்நலப் பிரச்னைகள் உள்ளிட்டவையும் அறிவாற்றல் தொடர்பான குறைபாடுகளை ஏற்படுத்தலாம். எனவே, மறதிக்கான காரணத்தை சரியாகக் கண்டறிவது முக்கியம். சில காரணிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் பிரச்னையை சரிசெய்யவோ அல்லது கணிசமாக மேம்படுத்தவோ முடியும்.
நினைவாற்றல் தொடர்பான பிரச்னைகளை பயத்துடனோ, அவமான உணர்வுடனோ அணுக வேண்டியதில்லை. சிகிச்சை அளிக்கக்கூடிய காரணிகளைக் கண்டறிந்து சரிசெய்யவும், தேவையான ஆதரவை வழங்கவும், டிமென்ஷியா உறுதி செய்யப்பட்டால் ஆரம்பத்திலேயே பராமரிப்பைத் திட்டமிடவும் மருத்துவ ஆலோசனை உதவும்.ஆரோக்கியமான மூளை முதுமை என்பது அதிக விஷயங்களை நினைவில் வைத்திருப்பது மட்டுமல்ல. முடிந்தவரை நீண்ட காலம் தெளிவாகச் சிந்திப்பது, அன்றாடப் பணிகளை சுயமாக மேற்கொள்வது, சமூகத் தொடர்புகளைப் பேணுவது மற்றும் சுதந்திரமாக வாழும் திறனைத் தொடர்ந்து பாதுகாப்பதே ஆரோக்கியமான மூளையின் முக்கிய நோக்கமாகும்.
மறதிக்கான பின்னணி காரணத்தை கண்டறிவது அவசியம். மனச்சோர்வு காரணமாக முதியவர்களுக்கு கவனம் செலுத்துதல், நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம். அதேபோல், போதிய தூக்கமின்மையும் நினைவாற்றலைப் பாதிக்கக்கூடும்.குறிப்பாக, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் ‘Obstructive Sleep Apnoea’ பிரச்னை உள்ளவர்களிடம் கவனம் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மறதி ஏற்பட்டவுடன் அதை வயது காரணமாக ஏற்படும் சாதாரண பிரச்னை என அலட்சியப்படுத்தாமல், அதன் பின்னணியில் உள்ள காரணத்தை மருத்துவர்களின் ஆலோசனையுடன் கண்டறிவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
அலட்சியம் வேண்டாம்
நினைவாற்றல் பிரச்னைகளை ‘வயதாகிவிட்டதால் ஏற்படும் சாதாரண மறதி’ என அலட்சியப்படுத்தவும் கூடாது. மறதி எந்த அளவில் உள்ளது, தொடர்ந்து அதிகரிக்கிறதா, அன்றாட வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, முக்கியமான தகவல்களை மீண்டும் மீண்டும் மறந்துவிடுதல், நன்கு அறிமுகமான இடங்களிலேயே வழி தெரியாமல் போதல், முன்பு எளிதாகச் செய்து வந்த பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்படுதல், பணம் அல்லது மருந்துகளை நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்படுதல், குணநலன் மற்றும் முடிவெடுக்கும் திறனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம்.
மூளை ஆரோக்கியம்
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், உடல் இயக்கமின்மை, உடல் பருமன், காது கேளாமை, மனச்சோர்வு மற்றும் சமூகத் தனிமை போன்றவை மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளாக உள்ளன. எனவே, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது, அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்ப்பது, காது கேட்பதில் பிரச்னை இருந்தால் உரிய சிகிச்சை பெறுவது, சமூக உறவுகளைப் பேணுவது மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை பெறுவது போன்றவை மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.



