கனமழையால் வெள்ளக்காடான பாங்காக்: 84,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு தாய்லாந்து நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் தலைநகர் பாங்காக் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழை காரணமாக பாங்காக்கில் உள்ள 50 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 50 மாவட்டங்களில் சுமார் 30 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
பாங்காக்கின் கிழக்குப் பகுதிகள் மற்றும் கால்வாய்களை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், கடைவீதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
‘
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் குவிந்தனர். இதனிடையே, 84,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். முக்கியச் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வாகனங்கள் செல்லும் சாலைகளில் தற்போது படகுகள் இயக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாங்காக்கில் உள்ள 50 மாவட்டங்களும் வெள்ளப் பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை மீட்புக் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தாய்லாந்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



