அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், திருமணம் முடிந்து புதுமணத் தம்பதி ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் விமானி நிகில் நர்குண்டகர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
அட்லாண்டா அருகே டாட்சன்வில் பகுதியில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற திருமண விழா நடைபெற்றது. விழா நிறைவடைந்ததும், புதுமணத் தம்பதியினருக்கு சிறப்பு வழியனுப்பாக ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அடர்ந்த வனப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மரங்களில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய நிகில் நர்குண்டகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மணமகள் ஜென்சி, தனது உயிரிழந்த கணவரின் உடலுக்கு அடியில் சிக்கிய நிலையில் சுமார் ஆறு மணி நேரம் உயிருக்குப் போராடியதாக கூறப்படுகிறது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
திருமணக் கொண்டாட்டம் முடிந்து சில நிமிடங்களிலேயே நிகழ்ந்த இந்த சோக சம்பவம், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



