தொடரும் மீட்புப் பணி!இந்தோனேசியா படகு விபத்து பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

 

இந்தோனேசியாவின் ஜாவா கடல்  பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து நிகழ்ந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ள நிலையில், நீரில் மூழ்கிய மேலும் 71 பேரைக் கண்டறியும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நூற்றுக்கணக்கான பயணிகளுடன் புறப்பட்ட அந்தப் பயணிகள் படகு, ஜாவா கடல் பகுதியை அடைந்தபோது எதிர்பாராதவிதமாகக் கடுமையான சீற்றத்துடன் கூடிய ராட்சத அலைகளிலும் பலத்த புயல் காற்றிலும் சிக்கியது. சீரற்ற வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த படகு, ஒருபுறமாகச் சாய்ந்து சில நிமிடங்களிலேயே கடலில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்தோனேசியத் தேசியத் தேடல் மற்றும் மீட்பு முகமை  அதிகாரிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்துக் கப்பல்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். கடலில் மிதந்த 64 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிருக்குப் போராடிய பல பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், கடலில் மூழ்கி மாயமான 71 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தோனேசியாவில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ள நிலையில், போதிய பாதுகாப்பு வசதிகளின்றி அதிக எண்ணிக்கையிலான பயணிகளைப் படகுகளில் ஏற்றுவதே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அந்நாட்டு அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.