வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு அளிக்கப்பட்ட உயர்மட்ட அரசு விருந்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “வரலாற்றிலேயே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு இவ்வளவு சிறப்பானதாக இருந்ததில்லை” என சீன அதிபரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த இருதரப்பு உச்சிமாநாட்டின் நிறைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்தில், இரு நாடுகளின் தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சர்வதேசக் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். விருந்தின் போது பேசிய டிரம்ப், வர்த்தகம் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஷி ஜின்பிங்குடனான தனது தனிப்பட்ட நட்பு மிகவும் வலுவாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தனது வழமையான பாணியில் நகைச்சுவையாகப் பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகையின் பிரம்மாண்டமான ‘பால்ரூம்’ அரங்கைச் சுட்டிக்காட்டி, “இந்த அரங்கை நாங்கள் புதிதாகப் புதுப்பித்துள்ளோம். ஆனால், இதைவிடப் பெரிய அரங்குகளை சீனா மிகக் குறைந்த நேரத்தில் கட்டி முடித்துவிடும்” என்று கூறியபோது அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. சீனாவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தங்களை எட்ட இரு நாடுகளும் தீவிரமாக உழைத்து வருவதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா – சீனா இடையே சுங்க வரிப் போர் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வரும் இக்காலக்கட்டத்தில், அதிபர் டிரம்பின் இந்த இணக்கமான பேச்சும் உபசரிப்பும் சர்வதேச அரசியல் அரங்கில் கவனத்தைப் பெற்றுள்ளன. இரு உலகப் பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணித்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்க இந்த உச்சிமாநாடு வழிவகுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



