திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொல்லியல் பகுதியில் புதிய கட்டடங்கள் எவையும் கட்டப்படவில்லை; திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உறுதி
திருமலை கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகாமையில் உள்ள தொல்லியல் பகுதியாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் எவ்வித கட்டடங்களையும் தாம் கட்டவில்லை, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் பகுதியைப் பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செவ்வாய்க்கிழமை (22) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் பிள்ளையார் கோயில் இருந்த பகுதியானது தொல்லியல் திணைக்களத்தால் தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் அப்பகுதிக்கு அருகில் உள்ள பகுதியில் பிள்ளையார் கோயிலை மீளமைப்பதற்குத் தேவையான காணி அடையாளப்படுத்தப்பட்டு அளவிடப்பட்டது.
அதற்கமைய தொல்லியல் பகுதி என அடையாளம் காணப்பட்ட பகுதியில், பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள தொல்லியல் திணைக்களத்துக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அண்மைக்காலத்தில், அப்பகுதிக்குச் செங்கற்கள் மற்றும் நிர்மாணப் பணிகளுக்கான பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதற்கமைய ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாட்டை மீறி தொல்லியல் திணைக்களத்தினர் செயற்படுவதாக பிரசாந்தினி விஜேகுமார் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேற்படி நகர்த்தல் பத்திரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதற்கமைய பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும், திருகோணமலை மாவட்ட செயலாளர் சார்பில் உத்தியோகத்தர் ஒருவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய மன்றில் ஆஜராகியிருந்தனர். இந்நிலையில், பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விடயங்களை முன்வைக்கையில், “இதற்கு முன்னர் இந்தத் தொல்லியல் பகுதி தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக எந்தவொரு கட்டடத்தையும் அப்பகுதியில் நிர்மாணிக்கவில்லை.
தொல்லியல் இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால் அகழப்பட்ட இடத்தை மீள நிரப்புவதற்காகவும், சிதைவடைந்த பகுதிகளை மீளச் சரிசெய்வதற்காகவும் அதற்குத் தேவையான பொருட்களே அப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆகையால் தாம் குறித்த பகுதியைப் பேணிபாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுப்பதாக” உறுதியளித்திருந்தார்.
அத்தோடு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதற்கான உறுதிப்பத்திரத்தையும் மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், சம்பவத்துடன் தொடர்புபட்ட தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளரே எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு இணங்கச் செயற்படுவதாக உறுதியளித்தமையால் இந்த வழக்கை முன்னோக்கி கொண்டு செல்லத் தேவையில்லை என தமது நிலைபாட்டை மன்றுக்கு அறிவித்திருந்தனர்.



