இன்று(ஞாயிற்றுக்கிழமை – 20) பெய்த கடும் மழை காரணமாக, கேகாலை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவரும் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
புலத்கொஹுபிட்டிய, ஹாத்தாகொடை பகுதிலை் 33 வயதுடைய சமந்த சேனரத் பண்டார என்ற நபர் ரிடிகஹ ஓயாவில் விழுந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை – 20) காலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, இன்று (ஞாயிற்றுக்கிழமை – 20) காலை லேவல பகுதியில் 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் ரிடிகஹ ஓயாவில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை
மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மகாவலி கங்கையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
இந்த எச்சரிக்கையானது கெலிஓயா, கம்பளை, நாவலப்பிட்டி மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை உள்ளடக்கியுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமையின் தீவிரத்திற்கு ஏற்ப, மக்களை அவசியமான இடங்களில் பாதுகாப்பான மையங்களுக்குச் செல்லுமாறு நெறிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டிய, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை(20) அதிகாலை முதல் பெய்துவரும் கனமழையால் மகாவலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள பல வீடுகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன், சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக பஸ்பாகே கோரளை பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியவின் கிதுல்கொட்டே, லபுவெல்கொட்டுவ, ஜயசுந்தரஓவிட்ட உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் பலி
நிலவிவரும் தீவிர மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட பிரதேசத்தில் வீடொன்றின் அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்த 15 வயது பாடசாலை மாணவன் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், அகலவத்தை, தெல்பே, ஹல்ஓவிட்ட முகவரியில் வசிக்கும் அகலவத்தை மிஹிந்து மகா வித்யாலயாவில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹசித பிரதீப் குமார (வயது 15) என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு அறையில் தரையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புப் படுகையில் (Plug Point) பாய்ந்த மின்னல் தாக்குதல் அந்த மாணவனையும் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த மாணவன் அகலவத்தை பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்



