கடந்த பிப்ரவரியில் இருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதுடன் ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியுள்ளது. இதனைதொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகை அமைத்து கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இதனால் ஈரானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், நாட்டு மக்களை ஒன்று திரட்டி தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட ஈரான் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்யத் தயார் என்பதை உணர்த்தும் வகையில் ‘‘ஜான்ஃபடாய்-இ ஈரான்” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்குக் குறைந்தபட்ச ராணுவப் பயிற்சி அளிக்க ஈரான் அரசு முன்வந்துள்ளது.
இதில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சியில் பங்கேற்பார்கள் என்றும் தெஹ்ரானின் புரட்சிகரப் படைத் தளபதி ஜெனரல் ஹசன் ஹசான்சாதே தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாய்நாட்டைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தத் தயார் என அறிவித்து ஈரானில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட அணிவகுப்பு பேரணி தெஹ்ரானில் நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்.



