தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரிட்டன் விமான சேவைகள் முடக்கம்!

 

பிரிட்டனின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை அமைப்பான ‘நாட்ஸ்’ அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லண்டனின் ஹித்ரூ, கேட்கவிக், மான்செஸ்டர் உள்ளிட்ட நாட்டின் முன்னணி சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு முடங்கியுள்ளன.

இன்று பிற்பகலில் தேசிய வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தரவு செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பச் சிக்கலால், விமானங்களின் வழித்தடங்களைக் கண்காணிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டதாக ‘நாட்ஸ்’ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் பிரிட்டனில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து புறப்படவிருந்த விமானங்கள் அனைத்தும் ஓடுபாதையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

லண்டனின் மிக முக்கியமான ஹித்ரூ (Heathrow) மற்றும் கேட்கவிக் விமான நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் நிலையில், இந்தத் திடீர் முடக்கத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே பல மணி நேரமாகத் தவித்து வருகின்றனர். மேலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் நோக்கி வரவிருந்த பல சர்வதேச விமானங்களும் புறப்பட்ட இடங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், சர்வதேச அளவிலான வான்வழிப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பொறியாளர்கள் களத்தில் இறங்கிப் பிரச்சனையைக் கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட, விமானங்கள் அடுத்தடுத்து இயங்குவதில் பெரும் தாமதமும் ரத்து நடவடிக்கைகளும் நாள் முழுதும் நீடிக்கக்கூடும் என்பதால், பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அட்டவணையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.