போலந்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘வாம்பயர்’ (இரத்தக் காட்டேரி) எனக் கருதி கழுத்தில் அரிவாள் வெட்டப்பட்ட நிலையிலும், கால் விரலில் பூட்டு போடப்பட்ட நிலையிலும் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு குறித்த புதிய அறிவியல் ஆய்வில், அவர் சமுதாயத்தின் மூடநம்பிக்கைக்கும் பயத்திற்கும் பலியான ஒரு இளம் பெண் என்ற திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது.
போலந்தின் ‘பியேன்’ கிராமத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட ‘ஜோசியா’ என்று பெயரிடப்பட்ட அந்த எலும்புக்கூடு, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிக்கல் சயின்ஸ்’இதழில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, மரணமடைந்த போது அந்தப் பெண்ணிற்கு 17 முதல் 19 வயது மட்டுமே இருக்கும் என்றும், அவர் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த உயர் சமூக அந்தஸ்து கொண்ட பெண் என்பதும் மரபணு மற்றும் ஐசோடோப் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் இறந்த பிறகு உயிர்த்தெழுந்து ஊருக்குத் தீங்கு விளைவிப்பார் என்ற தீவிர மூடநம்பிக்கை காரணமாக, அவரது இடது கால் விரலில் முக்கோணப் பூட்டு போடப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவரது சவக்குழியைத் தோண்டி, அவர் மீண்டும் எழுந்திருக்க முயன்றால் கழுத்து அறுபடும் வகையில் கூர்மையான இரும்பு அரிவாளைக் கழுத்தின் குறுக்கே வைத்து மூடியுள்ளனர். மேலும், அவரது வாயில் தாமிரப் பொருள் ஒன்று திணிக்கப்பட்டிருந்ததும், மார்பெலும்பில் கட்டியால் அவதிப்பட்டதால் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
அக்காலத்தில் பரவிய பஞ்சம் மற்றும் கொடூர நோய்களுக்கு இந்த இளம்பெண்ணே காரணம் என அப்பகுதி மக்கள் தவறாகக் கருதி, அவர் மீது கொண்ட சொல்ல முடியாத பயம் காரணமாகவே இந்த வன்கொடுமைகளைச் செய்துள்ளனர். 400 ஆண்டுகளுக்கு முன்பு ஹாரர் சினிமா பாணியில் காட்டேரியாகச் சித்தரிக்கப்பட்டுப் புதைக்கப்பட்டவர், உண்மையில் ஒரு பரிதாபகரமான அசம்பாவிதத்திற்குப் பலியான இளம் பெண் என்ற அறிவியல் உண்மை தற்போது உலகை உலுக்கியுள்ளது.



