ஆன்லைன் ஆப் மூலமாக இயக்கப்படும் டாக்சிகளில் பயணம் மேற்கொளும் பயணிகள், பயணத்தின் இறுதியில் வழக்கத்திற்கு மாறாகப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறித் தொடர்ந்து அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். முன்பதிவு செய்யும் போது காண்பிக்கப்படும் ஆரம்பக் கட்டணத்திற்கும், பயணம் நிறைவடைந்த பிறகு கணக்கிடப்படும் இறுதிப் பில்களுக்கும் இடையே பிரம்மாண்ட வித்தியாசம் இருப்பதால், இது குறித்துச் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஓலா (Ola) போன்ற ஆப் அடிப்படையிலான டாக்சி சேவைகளில் ‘டிரிப் டைமிங்’ (Trip Timing), ‘டைனமிக் சர்ஜ் கட்டணம்’ (Dynamic Surge Pricing) மற்றும் தவறான வழித்தடக் கணக்கீடு போன்ற காரணங்களைக் கூறிப் பயணியின் கணக்கில் கூடுதல் கட்டணம் சேர்க்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. பயணத் தொடக்கத்தில் ரூ.1,285 எனக் காட்டிய கட்டணம், இலக்கை அடைந்ததும் ரூ.5,662 வரை உயர்ந்து அதிர்ச்சி அளித்ததாகப் பயணிகள் பலர் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளனர்.
ஆப் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மென்பொருள் குளறுபடிகள் அல்லது தூரக் கணக்கீட்டுப் பிழைகள் காரணமாக இத்தகைய அசாதாரண கட்டண உயர்வுகளும், போலி ஓவர்-சார்ஜிங் பில்களும் உருவாக்கப்படுவதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற தருணங்களில் வாடிக்கையாளர் உதவி மையத்தைத் தொடர்புகொண்டு உடனடியாகப் புகார் அளிப்பதிலும், டிரைவர்களுடன் கட்டணம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் பயணிகளுக்குப் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
அரசு மற்றும் போக்குவரத்துத் துறை நிர்ணயித்துள்ள கட்டண விதிகளை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆன்லைன் டாக்சி நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும், போக்குவரத்துத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆன்லைன் டாக்சிகளில் பயணிக்கும் போது முன்பதிவு விவரங்களின் ‘ஸ்கிரீன்ஷாட்’ (Screenshot) எடுத்து வைப்பதே இத்தகைய மோசடிகளிலிருந்து தப்பிக்க உடனடித் தீர்வாக அமையும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



