400 ஆண்டுகளுக்குப் பிறகு மரபணு உண்மை வெளிச்சம் அரிவாளுடன் புதைக்கப்பட்ட பெண்

 

போலந்து நாட்டில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ‘வாம்பயர்’ (இரத்தக் காட்டேரி) என அஞ்சப்பட்டுப் புதைக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணின் எலும்புக்கூடு குறித்து நடத்தப்பட்ட புதிய மரபணு ஆய்வில், நவீன ஸ்லாவிக் மக்களிடம் காணப்படாத அரிய மரபணு வழித்தொடர் கண்டறியப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு வடக்கு போலந்தின் பியென் கிராமத்திற்கு அருகே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 17 முதல் 19 வயது மதிப்பிடப்பட்ட ‘சோசியா’ என்ற பெண்ணின் உடலை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

இறந்த அந்தப் பெண் மீண்டும் உயிர்த்தெழுந்து மனிதர்களைத் தாக்கக்கூடும் என்ற மூடநம்பிக்கை அச்சத்தால், அவரது கழுத்தின் குறுக்கே கூர்மையான அரிவாளும், கால் விரலில் இரும்புப் பூட்டும் வைக்கப்பட்டு விசித்திரமான முறையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது மேற்கொள்ளப்பட்ட Ancient DNA மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏபகுப்பாய்வின் மூலம், அந்தப் பெண்ணின் தாய்வழி மரபணு ஸ்காண்டிநேவிய (Scandinavian) பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது. தற்போதைய போலந்து மக்களிடையே இந்த குறிப்பிட்ட மரபணுத் தொடர் கிட்டத்தட்ட அழிந்துபோன ஒன்றாகவே கருதப்படுகிறது.

மேலும், சோசியாவின் மண்டை ஓட்டுக்கு அருகில் தங்க மற்றும் வெள்ளி நூல்களால் நெய்யப்பட்ட பட்டுத் துணியின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அன்றைய காலக்கட்டத்தில் அரச குடும்பத்தினரைக் காட்டிலும் ஆடம்பரமான இத்தகைய ஆடைகளை அணிந்திருந்ததால், அவர் ஒரு செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், செல்வந்தர் குடும்பப் பெண்ணாக இருந்தபோதிலும், சமூகத்தில் ஏற்பட்ட பஞ்சம், நோய்கள் அல்லது அவரது விசித்திரமான உடல்நலக் கோளாறுகள் காரணமாக அவர் ஒரு காட்டேரியாகப் பார்க்கப்பட்டு ஊருக்கு வெளியே தனியாக அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய மூடநம்பிக்கைகள், சமூக விலக்குகள் மற்றும் மரபணு அமைப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு முக்கியக் கதவாக அமைந்துள்ளது. நிலத்தில் புதைக்கப்பட்ட அரிய மரபணுத் தடயங்கள் மூலம் 400 ஆண்டு பழமையான ஒரு பெண்ணின் சோகமான வரலாற்றை நவீன அறிவியல் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.