உக்ரைனில் இந்திய ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் இருவர் பலி

உக்ரைனில் உள்ள இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கு சொந்தமான எஃகு ஆலை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடந்து வரும் நிலையில்,
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு உக்ரைனின் மத்திய நகரமான கிரிவி ரிஹ் பகுதியில் அமைந்துள்ள, உலகின் 2வது பெரிய எஃகு உற்பத்தியாளரான ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் சுரங்க ஆலை மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்திய கோடீஸ்வரர் லட்சுமி மிட்டலுக்கு சொந்தமான இந்த ஆலையில் நடந்த தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் காயமடைந்தனர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தாக்குதல் காரணமாக ஆலையின் ஆற்றல் மற்றும் உலை சார்ந்த முக்கிய உற்பத்தி செயல்முறைகள் பகுதியளவு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.