ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவை மீறிச் செல்ல முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், 2 கப்பல்களில் நேரடிச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
ஜூலை 14 முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்த இந்த முற்றுகை நடவடிக்கைகளை மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை அமைத்துள்ள இந்த முற்றுகையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரும்புச் சுவர் என வர்ணித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்கும் வரை கடல் வழித்தடம் திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணை இன்னும் எங்கள் பிடியில்…! ட்ரம்பிற்குப் பதிலடி கொடுத்த ஈரான்
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கூற்றை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியின் கடல்வழிப் போக்குவரத்தை நிர்வகிக்கும் ஈரானிய அமைப்பான பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம் (Persian Gulf Strait Authority) இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.
குறித்த ஆணையத்தின் கருத்தின்படி, “ஹோர்முஸ் நீரிணையின் முடக்கம் நீக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிவரும் கூற்றுகளும் சமூக வலைதளப் பதிவுகளும் எதார்த்த நிலையை மாற்றிவிட முடியாது.
ஈரான் முன்வைத்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் எங்கள் கடற்படை முற்றுகையானது இரும்புச் சுவர் (Wall of Steel) போன்றது எனவும் ஈரானால் இனி எதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு இருதரப்பு மோதல்கள் மற்றும் பதற்றம் காரணமாக இந்த முக்கிய சர்வதேச எண்ணெய் வர்த்தக வழித்தடத்தில் பயணிக்கும் வணிகக் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



