மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்கத் தளங்களை அகற்றுவதே ஈரானின் திட்டம்!

 

அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் ஈரானுடனான போரினால் முடிவுக்கு வருகின்றதென்பது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. இஸ்ரேலின் நலன்காக்கும் திட்டத்தில் தொடங்கப்பட்ட ஈரான் மீதான போர் அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாகவே தெரிகிறது.

இதனை வியட்நாம் போருடன் ஒப்பீடு செய்ய முடியாதவாறு அமெரிக்காவுக்கு இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. வியட்னாம் போரில் அமெரிக்கா அழிவுகளை சந்தித்ததையடுத்து போரை நிறுத்திக் கொண்டது. ஆனால் மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேலின் அழுத்தத்தினால் போரை நிறுத்த முடியாமல் நெருக்கடிக்குள் அமெரிக்கா காணப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகின்றதெனவும், சமாதான உடன்பாடு எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கும் அதேவேளை, மறுபுறத்தில் போர் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவின் இத்தகைய இரட்டை உத்தி காணப்படுகின்றது. அதேவேளை மீண்டும் இஸ்ரேல் லெபனலான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

பதிலாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பெற்றோலியக் கப்பல்களையும் இராணுவ இலக்குகளையும் நோக்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஈரான் வளைகுடா நாடுகளில் காணப்படும் அமெரிக்க இரகசிய புலனாய்வு மையங்கள் மீதும் இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதலை நிகழ்த்தியதன் மூலம் பாரிய சேதங்களை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு ஆசியாவில் குவிந்திருக்கும் அமெரிக்க இராணுவ புலனாய்வுத் தளங்கள் அழிந்து கொண்டு போகின்ற நிலையில், அமெரிக்க இராணுவத் தளங்கள் மேற்காசியாவில் முடிவுக்கு வருகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்காசியாவின் அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியை இராஜினாமா (17, மார்ச் 2026) செய்திருந்தார். அவர், ஈரானுடனான போரை ஆதரிக்க முடியாது என்றும், இந்தப் போரில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என்றும் தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசின் உயர்மட்ட நெருக்கடியாகக் கருதப்படுகிறது.

மேலும் அமெரிக்காவின் ஐரோப்பிய கட்டளைத் தளபதி ஜெனரல் அலெக்சஸ் கிரின்கெவிச் தற்போது கிடைத்திருக்கும் கடற்படை வளங்கள் போதுமானதாக இல்லையென பென்டகனை எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் போர்க்கப்பல்கள் வழங்கப்படாவிட்டால், அமெரிக்க தாயகத்தின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்; அதனால் இஸ்ரேலுக்கு இதுவரை வழங்கிய அளவிலான ஏவுகணை பாதுகாப்பை தொடர்ந்து வழங்குவது கடினமாகலாம் என்று அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போதைய ஆயுத வழங்கல் நீண்டகாலம் போதாது என்ற எச்சரிக்கை போருக்கான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஈரானின் இலக்காக மேற்காசியாவில் உள்ள இராணுவ புலனாய்வு மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் தளங்கள் மீது நடத்திய தாக்குதல் காரணமாக ஏற்பட்டதென்றே தெரியவருகிறது.

மேற்காசிய நாடுகள் மீது ஈரான் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு வலுவான காரணம் ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது. தனது நாட்டு மக்கள் தாக்கப்படுகின்ற போது, அதற்குரிய பதில் தாக்குதல்களாக மேற்காசியாவில் இருக்கும் அமெரிக்கத் தளங்களை இலக்கு வைக்கப் போவதாகவும், அவை முழுமையாக அழித்தொழிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய மேற்காசியாவில் அமெரிக்காவில் இராணுவ உத்திகளும் பலமும் முடிவுக்கு வருவதாகவே தெரிகின்றது.

அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி தப்பிக்க முடியாத பதற்றத்தில் சிக்கியுள்ளதாகவும், ஈரான் மீதான அமெரிக்கப் போர் நிரந்தரத் தீர்வுக்கு வராது என்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் பேராசிரியர் ரொபர்ட் பேப் கூறுகிறார்.

மறுபுறத்தில் ஹிஸ்புல்லாக்களை அழித்தொழித்து விட்டதாகத் தெரிவித்த இஸ்ரேல், மீண்டும் லெபலான் மீதான தாக்குதலை ஆரம்பித்துள்ளமை அதிக குழப்பத்தைத் தருகிறது. இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகப் பின்பற்றிய போர்நிறுத்தத்தை மீறி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இதே போன்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளமை வலுவான பிராந்திய நெருக்கடியாக மாறி உள்ளது.

சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கப்பல்கள் ஆபிரிக்கக் கண்டத்தின் கடல் பாதைகளை பயன்படுத்தி பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது பெரும் அளவுக்கு மேற்காசியாவுடனான உலக நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்தையும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தையும் முற்றாகவே சீர்குலைத்துள்ளது. இதன் மூலம் பெட்றோலியத்தின் விலை அதிகரிப்பு மட்டுமன்றி, மேற்காசியாவுக்கான சந்தை வாய்ப்பும் உலக நாடுகளுக்கு இடையில் முடங்கும் நிலைமை ஏற்படலாம்.

அமெரிக்காவின் இலக்கு அனைத்தும் தோல்வியடைந்ததோடு, இப்போரை நீடிப்பதற்கும் அதன் மூலம் ஈரானை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கும் அமெரிக்க நட்பு நாடுகளும் அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளன. அதற்கான உத்திகளை அமெரிக்கா வகுத்து இருப்பதோடு, போரையும் சமாதானத்தையும் சமதளத்தில் பிரயோகப்படுத்தி மாற்றங்களை எட்டுவதற்கான வாய்ப்புகளை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.

கடந்த காலங்களில் காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் தோல்விகளை வெற்றிகளாக இஸ்ரேல் மாற்றியது. அதே உத்தியை நவீன தொழில்நுட்ப சூழலிலும் இஸ்ரேலியர்கள் பின்பற்றுகின்றனர். அதனையே இஸ்ரேல்- அமெரிக்க கூட்டு மேற்காசியப் பிராந்தியத்தின் மீது ஏற்படுத்த திட்டமிடுகிறது.

இப்போரை அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு காலத்தை நீடிப்பதன் ஊடாக வெற்றிகொள்ளலாம் என்பது இஸ்ரேல்- அமெரிக்க தரப்பின் எண்ணமாகும்.

இதுஒருபுறமிருக்க, ஜுலை 15, 2026 அன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இஸ்ரேலுக்கான ஆண்டுதோறும் வழங்கப்படும் 3.3 பில்லியன் டொலர் இராணுவ உதவியை நிறுத்தும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்தத் தீர்மானம் 314–104 என்ற பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறினாலும், எதிரான வாக்குகள் அமெரிக்க மனோநிலையைக்காட்டுகின்றன.

இஸ்ரேலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் எழுந்த சர்ச்சையிலும் இஸ்ரேலுக்கு எதிரான நியூயோர்க் நகர மேயரின் கருத்துகளும் மக்களது போராட்டங்களும் இஸ்ரேலிய – அமெரிக்க உறவில் விரிசலை தோற்றுவிப்பதற்கான முனைப்புகளை கொண்டு இருக்கின்றமை புலனாகிறது. இது உடனடியான விளைவை தராவிட்டாலும்; ஈரானுடனான போரில் பாரிய விளைவை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தக் கூடியது என்று கணிப்பீட்டுக் கொள்ள முடியும்.

எனவே குழப்பகரமான தீர்மானங்களை கடந்து தீர்க்கமான தீர்மானங்களை நோக்கி ஈரான் நகர்கின்றது. ஈரான் இப்போரில் அதிக மாற்றங்களை அடைந்திருக்கிறது…