அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக சண்டை ஓய்ந்திருந்தாலும், இருதரப்பிலும் இன்னும் போர் நிறுத்தம் ஏற்படாததால் பதற்றம் தணியவில்லை. ஈரான் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஓமனின் லிமாவிலிருந்து 11 கடல் மைல் தொலைவில் எண்ணெய் கப்பல் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், கப்பலின் இன்ஜின் அறை சேதமடைந்தது.
இதே போல, கசாப் நகருக்கு 21 கடல் மைல் தொலைவில் மற்றொரு எண்ணெய் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த 2 சம்பவத்திலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதவிர, குவைத்தை குறிவைத்து ஈரான் ஏவிய டிரோன்கள் நேற்று நடுவானில் அழிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் கட்டமைப்புகளை ஈரான் குறிவைத்து வருவதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது மேலும் தாக்குதல் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் போரில் வெற்றி பெறவே விரும்புகிறோம். அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை இன்னும் சில காலத்திற்கு தொடரும். ஈரானால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதன் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்’’ என்றார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையை இழந்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். ஹோர்முஸ் நீரிணை மீதான உரிமையை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக கூறி உள்ளது.
அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் உண்மையான நோக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்பதில் தனக்குத் தொடர்ந்து சந்தேகம் நிலவுவதாக கூறி உள்ளார். அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையிலும், ஈரான் தனது வாக்குறுதிகளைத் தொடர்ந்து மீறி வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
ஈரான் தரப்பு உண்மைகளைத் தவறாகச் சித்தரிக்கிறது என்று கூறிய டிரம்ப், அவர்கள் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறார்கள், ஆனால் அதே நேரம் அவர்கள் அடிக்கடி தங்கள் வாக்குறுதிகளை மீறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கம் தாக்குதல் என அவர்களின் நடவடிக்கை இருக்கிறது என்றும் ஈரான் மீது குற்றம்சாட்டி உள்ளார் டிரம்ப். ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து பொய் சொல்வதாகவும், அளித்த வாக்குறுதிகளை மீறுவதால் தான், தனக்கு ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கை குறைந்து வருவதாக டிரம்ப் விளக்கம் அளித்து உள்ளார்.



