உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான 1983 கறுப்பு ஜூலையை நினைவுகூருகின்றனர். தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிர்களை காவுகொண்டது.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. வீடுகளும் வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.அது பின்னர் மூன்று தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டுப் போருக்கான முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது. இன்று அந்த நிகழ்வுகளுக்கு 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அரசாங்கங்கள் மாறியுள்ளன, தலைமுறைகள் மாறியுள்ளன.
அந்த நினைவுகளும் அதன் ஆழமான காயங்களும் இன்னும் தமிழ் மக்களின் மனங்களில் வாழ்கின்றன. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சியை வலியுறுத்தி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த நோக்கங்கள் பாராட்டத்தக்கவை.
ஆனால் உண்மையான ஜனநாயக மாற்றம், ஒரு நாடு தனது வேதனையான வரலாற்றை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதிலும் அளவிடப்படுகிறது. 1983ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்கு தற்போதைய அரசுக்கு பொறுப்பு இல்லை. அந்தப் பொறுப்பு அன்றைய ஆட்சியினருக்கே உரியது.
இருப்பினும், ஒவ்வொரு ஜனநாயக அரசும் கடந்த காலத்தில் அரசு தனது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிய தருணங்களை அங்கீகரித்து, அவை இனி மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வது என்ற ஒழுக்கப் பொறுப்பை ஏற்கிறது. பல தமிழர்களுக்கு கறுப்பு ஜூலை என்பது ஒரு வரலாற்றுச் சம்பவம் மட்டுமல்ல, அது அரசின் மீது இருந்த நம்பிக்கை சிதைந்த தருணமாகும்.
1983க்குப் பிறகு பாதுகாப்புக்காக உலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று மருத்துவம், பொறியியல், கல்வி, தொழில்முனைவு, அறிவியல் மற்றும் பொதுச் சேவைகளில் உலகளவில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர்.
அதே நேரத்தில் அவர்கள் இலங்கைக்கும் முதலீடு, கல்வி, மனிதாபிமான உதவி மற்றும் அறிவுப் பரிமாற்றம் மூலம் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
1983 கறுப்பு ஜூலையின் துயரத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காமல், இலங்கை உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா? உலகின் பல நாடுகள் தங்கள் வேதனையான வரலாற்றை ஏற்றுக்கொண்டு நல்லிணக்கப் பயணத்தை ஆரம்பித்துள்ளன.
இலங்கையும் தனது தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். அப்பாவி மக்களின் துயரத்தை அங்கீகரிப்பது தேசிய ஒற்றுமைக்கு எதிரான செயல் அல்ல; அது ஜனநாயகத்தின் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் செயல்.
கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் துயரத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தல், இன வன்முறைகளில் உயிரிழந்த அனைத்து பொதுமக்களுக்கும் தேசிய நினைவு நாள், மொழிச் சமத்துவம், காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், நீண்டகால கைதிகள் மற்றும் அரசியல் உரையாடலில் முன்னேற்றம், உலகத் தமிழர் புலம்பெயர் சமூகத்தை முதலீடு மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பங்காளிகளாக இணைத்துக்கொள்ளுதல்.
கடந்த காலத்தை அங்கீகரிப்பது இன்றைய தலைமுறையினரை குற்றஞ்சாட்டுவதற்காக அல்ல. அது ஒரு ஜனநாயக அரசு. தனது அனைத்து குடிமக்களினதும் துயரத்தை புரிந்துகொள்கிறது என்பதற்கான அடையாளமாகும். பொருளாதார வளர்ச்சியும் நல்லிணக்கமும் ஒன்றுக்கொன்று துணைபுரிவன.
நம்பிக்கை, சமத்துவம் மற்றும் சட்டத்தின் முன் சம உரிமை ஆகியவை நிலையான வளர்ச்சிக்கான அடித்தளமாகும். 43 ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கையால் கடந்த காலத்தை மாற்ற முடியாது என்பதே நிதர்சனம்.



