தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக சிக்கன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் சிக்கன் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சிக்கன் தட்டுப்பாடு காரணமாக விற்பனை நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது. தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவப் பிரியர்களின் வீடுகளில் சிக்கன் மணம் கமழ்வது வழக்கம்.
ஆனால், தற்போது கோழியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோ 220 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனையான பிராய்லர் கோழி தற்போது தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஒரு கிலோ 360 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அசைவ உணவகங்களில் சிக்கன் ரைஸ், தந்தூரி, சவர்மா போன்ற உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழி விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள் இந்த திடீர் விலை உயர்வுக்குப் பின்னால் கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு இடையே நிலவும் மோதல்கள், கடுமையான வெயில் காரணமாக ஏற்பட்ட கோழிகளின் இறப்பு விகிதம், தீவன விலை உயர்வு ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
சில்லறை வியாபாரிகள் மோதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கும் சில்லறை கோழி வியாபாரிகளுக்கும் இடையே தற்போது கடுமையான மோதல் நிலவி வருகிறது. தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு சில்லறை கோழி வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநாட்டில், கோழிப்பண்ணைகளுக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக தங்களுக்கு கோழிகளை விற்கும் போது, எடையை செயற்கையாக அதிகரிக்கச் செய்வதாக சில்லறை வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கோழிகளுக்கு அதிகப்படியான தீவனம் வழங்கப்படுவதால், அவற்றின் வயிற்றில் தீவனம் அப்படியே தங்கி விடுகிறது. இதனால் சில்லறை வியாபாரிகள் வாங்கும் போது கோழியின் எடை அதிகமாகக் காட்டுகிறது. ஆனால், அதனை வெட்டி சுத்தம் செய்யும் போது வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, விற்பனைக்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே கோழிகளுக்கு தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்துகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரம் கோழி விற்பனையை நிறுத்தப் போவதாகவும் வியாபாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கோழி தீவன விலையேற்றம் மற்றொரு புறம், சர்வதேச அளவில் நிலவி வரும் போர்க்குழப்பங்கள் மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக கோழி தீவனங்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் முட்டை உற்பத்தியிலும் எதிரொலித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு முட்டைக்கு 6.55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் ஒரு முட்டை 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த தீவன விலை உயர்வே கறிக்கோழி வளர்ப்புக்கான செலவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது என பண்ணையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வெயில் பாதிப்பு கோடைக்கால வெப்பம் காரணமாக கோழிப்பண்ணைகளில் கோழிகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. இதனால் சந்தைக்கு வர வேண்டிய கோழிகளின் வரத்து பெருமளவில் குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சப்ளை குறைவாக உள்ளதால் விலை 400 ரூபாயை எட்டியுள்ளது. ஹோட்டல் தொழில் பாதிப்பு சிக்கன் விலை கிலோ 400 ரூபாயை நெருங்கியுள்ளதால், சாலையோர பிரியாணி கடைகள் முதல் நடுத்தர ஹோட்டல்கள் வரை கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. விலையை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள், விலையை உயர்த்தாவிட்டால் லாபம் கிடைக்காது என்ற இக்கட்டான சூழ்நிலையில் உணவக உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.



