கடந்த ஏப்ரல் 8ம் தேதி போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஈரானும், இஸ்ரேலும் நேற்று மீண்டும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின. இந்த மோதலுக்கு மத்தியில், ஓமன் அருகே நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் கடலில் சென்று கொண்டிருந்த எம்டி மேரிவெக்ஸ் எண்ணெய் கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் இருந்து 24 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஒபேஷ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணத்தை தெரிவிக்க மறுத்த அவர், மடகாஸ்கர் கொடி ஏந்திய அக்கப்பல், மேற்காசியா போர் பதற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே இருந்ததாகவும், கப்பல் காலியாக இருந்ததாகவும் கூறி உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘எங்களுக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். ஓமனின் டுக்ம் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கப்பலில் இருந்து ஆபத்து அழைப்பு விடுக்கப்பட்டது. ஓமன் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, 24 இந்திய மாலுமிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, வெளியுறவு அமைச்சகம், தூதரகங்கள், இந்திய கடற்படை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்’’ என்றார். ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழைய முயன்ற இக்கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியதாக கூறப்படுகிறது.




