இசைஞானி இளையராஜாவுக்காக பாடலை பதிவு செய்தபோது தான் செய்த சுட்டித்தனத்தால் ஜானகி அம்மா கோபித்துக் கொண்டு சென்று காரில் உட்கார்ந்துவிட்டதாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சொன்னது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜானகி அம்மா மறைவு: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி சேர்ந்து பாடிய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் என்றென்றும் கொண்டாடும் பாடல்கள் ஆகும். ஜானகி அம்மா மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்கிற தகவல் அறிந்ததுமே இனி சொர்க்கத்தில் எஸ்.பி.பி., ஜானகி பாட்டு கச்சேரி நடக்கும். இரண்டு பேருமே எங்களை விட்டு சென்றுவிட்டீர்களே என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா இசையில் தானும், ஜானகியும் சேர்ந்து பாட்டு பாடியபோது ஸ்டுடியோவில் நடந்தது பற்றி எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு முறை பேசியிருந்தார். அவர் கூறியதாவது, ஜானகி அம்மாவுக்கு ஒரு மேனரிசம் உள்ளது. அவர் ரெக்கார்டிங்கில் பாடினாலும் சரி, மேடையில் பாடினாலும் சரி கையில் ஒரு சின்ன புக் இருக்கும். அதில் ஒரு பக்கத்திலேயே மொத்த பாடலையும் எழுதி வைத்திருப்பார். அங்கு இங்கு பார்க்காமல் கையில் இருக்கும் புக்கை பார்த்து கையில் ஒரு கர்சீஃபை வைத்துக் கொண்டு அதை தேய்த்துக் கொண்டே பாடுவார்.
எஸ்.பி.பி. சேட்டை: டேக் போய்க் கொண்டிருக்கும்போது நான் அந்த கர்சீஃபை படக்குனு இழுத்துவிடுவேன். உடனே பாடுவதை நிறுத்துவிடுவார். ராஜா, இந்த சுப்பரமணியம் ரொம்ப ரொம்ப ரொம்ப கிண்டல் பண்றான். நான் நல்லா பாடுவது அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் இப்படி பண்றான் என்பார். அவன் என்ன பண்ணான் என ராஜா கேட்டால், கையில் இருந்து கர்சீஃபை இழுத்துட்டான் என எப்படி சொல்வாங்க. அதனால் என்னை பாட விடாம பண்றான்னு மட்டும் சொல்வாங்க.
அம்மா அடிப்பாங்க: உடனே ராஜாவோ டேய் பாலா, ரெக்கார்டிங் முடியட்டும்டா, லைவ் ரெக்கார்டிங்டா என்பார். நான் எதுவுமே செய்யலடா. அந்தம்மா எதுக்கு சொல்றாங்கனு தெரியலனு சொல்வேன். அதை கேட்ட ஜானகி அம்மாவோ, உன்னை உதைப்பேன் என்பார். சரிமா, டேக் போயிடலாம்னு ஆரம்பித்தால் கர்சீஃபை தூரமாக போட்டுவிட்டு சேலை நுனியை போட்டு உருட்டிக் கொண்டே பாடுவாங்க. அதையும் இழுப்பேன். உடனே கையில் கிடைத்ததை தூக்கி என் மீது வீசுவாங்க. வாய்ஸ் ரூமுக்குள்ளேயே ஓடுவோம்.
ஒரு நாள் ரொம்ப கோபம் வந்து, நான் பாடல என்று கிளம்பிச் சென்று காரில் உட்காரந்துவிட்டார். என்னடா நீ, ரெக்கார்டிங்கில் வந்து சின்னப் பையன் மாதிரி அதுவும் பெரியவங்களோட, பாட்டை பதிவு செய்யணுமேடானு ராஜா சொல்வான். போ, போய் அம்மாவை கூட்டிட்டுவானு சொல்வான் ராஜா. காருக்கு வெளியே கையெடுத்து கும்பிட்டு நான் நின்றால், போனு சொல்லி அந்த பக்கம் திரும்பிக் கொள்வார். அந்த பக்கம் போனால் போனு மறுபக்கம் திருப்பிக்குவாங்க. மா, கார் கண்ணாடியை இறக்குங்கனு கெஞ்சினால் முடியாதுனு சொல்வாங்க. ஒரு பேப்பரை எடுத்து ஆட்டோகிராஃப் தர முடியுமானு கேட்டால் சிரித்துவிட்டு, நீ இந்த மாதிரி எல்லாம் பண்ணா நான் பாட்டு பாட வர மாட்டேன் என்பார். சாரிமானு சொன்னதும் வந்துவிடுவார் என்றார்.
ஜானகி அழைத்த விதம்: எஸ்.பி.பாலசுப்ரணியத்தை சுப்பரமணியம் என்று அழைத்த ஒரே ஆள் ஜானகி அம்மா தான். மேடையில் எஸ்.பி.பி.யை வைத்துக் கொண்டே அவர் குரலில் அதாவது ஆண் குரலிலும் பாடியிருக்கிறார் அவர். கஷ்டமான பாட்டாக இருந்தாலும் ஒரே பிரெத்தில் பாடிவிடும் திறமை கொண்டவர் ஜானகி. அந்தம்மாவால் மட்டும் எப்படி முடியும் என்று தான் வியந்ததாக கூறியிருக்கிறார் பாடும் நிலா எஸ்.பி.பி.



