சீனாவில் வரலாறு காணாத கனமழை.. பண்ணைகளில் இருந்து தப்பிய 900 நச்சுப் பாம்புகள்

சீனாவில் கனமழை பெய்துவரும் நிலையில், ஹெங்ஜோ நகரில் உள்ள பாம்புகள் நீடித்து அடித்து செல்லப்பட்டு குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சீனாவின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு மாகாணங்களில் கல்லூரிகள், பள்ளிகள், அவசர கால மருத்துவமனையை தவிர்த்து மற்றபடி, உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைக்களுக்காக அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.

சீனாவில் வரலாறு காணாத கனமழை
இந்த வேளையில், குவாங்சி (Guangxi) மாகாணத்தில் எதிர்பாராத புது ஆபத்தாக நூற்றுக்கணக்கான பாம்புகள் ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.அங்குள்ள ஹெங்ஜோ (Hengzhou) நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தின் காரணமாக, பாம்புகள் வளர்க்கும் பண்ணைகளில் இருந்து சுமார் 900-க்கும் மேற்பட்ட பாம்புகள் தப்பித்து வெளியேறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தப்பிய பாம்புகளில் ‘கோப்ரா’ (நல்லபாம்பு) உள்ளிட்ட மிகக் கொடிய நச்சுப் பாம்புகளும் அடங்கும். இந்த பாம்புகள் வெள்ள நீரில் நீந்திச் செல்லும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தாமதமான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு:
இதற்கிடையில், வெள்ள நீரில் வந்த நச்சுப் பாம்பு கடித்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெள்ளம் மற்றும் சாலை மறிப்புகள் காரணமாக அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுவரை பலருக்குப் பாம்பு கடி ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆங்காங்கே தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தப்பியோடிய பாம்புகளைப் பிடிக்கத் தனிப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

 

விலங்கியல் தோட்ட விலங்குகளும் தப்பியோட்டம்:
பாரம்பரிய மருந்துகள் மற்றும் இறைச்சித் தேவைக்காக சீனாவிலேயே குவாங்சி மாகாணத்தில்தான் அதிக அளவில் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. தற்போதைய வெள்ளத்தால் பல கிராமங்கள் மூழ்கியுள்ளன. இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்; 1.3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

பாம்புகள் மட்டுமன்றி, வெள்ளத்தால் உயிரியல் பூங்காவின் சுவர்கள் சேதமடைந்ததால் வரிக்குதிரைகள், மினி பன்றிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விலங்குகளும் தப்பியோடியுள்ளன. மீட்புப் பணிகளில் 8,000-க்கும் மேற்பட்ட வீரர்களும், 5,700 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.