ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களை நடத்தியது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று தொடர்ந்து ஈரான் பிடிவாதம் காட்டியது.
இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல் அல் ரெஹாயத், சவுதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை சமீபத்தில் கடந்தன. அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில், அனுமதிக்கப்படாத பாதையில் சென்றதாக ஒரு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது. இதுகுறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஹார்முஸ் ஜலசந்தி அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடுகள் முடிவுக்கு வரும் வரையிலும் மூடப்பட்டிருக்கும்; எந்தக் கப்பலும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஹார்முஸ் வழியாகச் சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடங்கியது.
இன்று அதிகாலையில் இந்தத் தாக்குதல்கள் தொடங்கின என்றும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. ‘சுமார் நான்கு மணி நேரம் கழித்து, தாக்குதல்கள் நிறைவடைந்தன. இந்த முறை சுமார் 140 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ என அமெரிக்க ராணுவ கட்டளை மையமான சென்ட்காம் கூறியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது



