: இந்திய புகையிரத திணைக்களம் நடவடிக்கை!
இந்தியாவில் பயணிக்கும் நந்திகிராம் எக்ஸ்பிரஸ் புகையிரத்தின் முதலாவது அதிசொகுசு பெட்டியை ஒன்று, ‘தேனிலவு அறை’ போல பலூன்கள் மற்றும் ரோஜா இதழ்களால் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட காாணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, இந்திய புகையிரத திணைக்களம் டிக்கெட் பரிசோதகரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
கடந்த 06 ஆம் திகதி 11002 என்ற வண்டி எண் கொண்ட நந்திகிராம் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் பயணித்த தம்பதி ஒருவரே இந்த வினோத அலங்காரத்தை செய்துள்ளனர்.
புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டி பகுதி முழுவதும் பலூன்கள், ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்கள் மற்றும் “ஐ லவ் யூ” என்ற வாசகங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, இந்திாவின் தெற்கு மத்திய புகையிரதம் திணைக்களம் உடனடியாக விசாரணையை ஆரம்பித்தது.
இது தொடர்பாகத் தெற்கு மத்திய புகையிரதம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,
“நந்திகிராம் எக்ஸ்பிரஸில் பயணித்த தம்பதியினர், இணையவழி மூலம் ஒரு அலங்கார நிபுணரை இதற்காகத் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். ஜால்னா புகையிரத நிலையத்தில் வைத்து அந்த அலங்கார நிபுணர் புகையிரதம் பெட்டிக்குள் நுழைந்துள்ளார். உரிய அனுமதியின்றி வெளிநபர் ஒருவர் அதிசொகுசு பெட்டிக்குள் நுழைந்தது கடுமையான பாதுகாப்புக் குறைபாடாகும். இதனால், சம்பந்தப்பட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், விரிவான துறைசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.”
இந்தச் சம்பவம் நடந்த போது புகையிரத்தத்தில் கடமையிலிருந்த முதன்மை டிக்கெட் பரிசோதகர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உரிய அனுமதியின்றி வெளிநபர் ஒருவர் எவ்வாறு முதலாவது அதிசொகுசு பெட்டிக்குள் நுழைந்தார் என்பது குறித்து இவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
புகையிரத திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“அதிசொகுசு முதலாவது பெட்டி என்பது பயணிகளின் தனி உரிமைக்கானது. அவர்கள் பணம் கொடுத்து வாங்கிய அறையில் ஒரு அழகான நினைவை உருவாக்கியதற்காக டிக்கெட் பரிசோதகரை ஏன் இடைநீக்கம் செய்ய வேண்டும்? புகையிரதங்களின் கண்ணாடிகளை உடைப்பவர்கள் மற்றும் ஆடுகளை ஏற்றிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லையே” என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“புகையிரத என்பது பொதுச் சொத்து, அங்கு இவ்வாறான எல்லை மீறிய வேலைகளைச் செய்யக் கூடாது. டிக்கெட் பரிசோதகரை இடைநீக்கம் செய்ததுடன், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த தம்பதியினரின் பெயரையும் பகிரங்கப்படுத்த வேண்டும்” என மற்றொரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.



