பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே சமீபகாலமாக எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகள் சமரசம் செய்தும் கூட பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தொடர்ந்து எல்லையில் சண்டையிட்டு வருகின்றன. சமீபத்தில் கராச்சியில் உள்ள துணை ராணுவப் படையான ரேஞ்சர்சின் பிராந்திய தலைமையகத்தை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஆப்கானிஸ்தான் எல்லையில் வான்வழி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் நேற்று தகவல் வெளியிட்டார். கைபர் பக்துன்க்வாவின் பஜார் மாவட்டத்தில் ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மற்றும் முகாம்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 29 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தரார் கூறி உள்ளார்.
இந்த தாக்குதல் கோழைத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்றும் கொடூரமான செயல் என ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் துணை செய்தி தொடர்பாளர் ஹம்தல்லா பித்ரத் கூறுகையில், ‘‘பாக்டியா மாகாணத்தின் சாம்கானி மாவட்டத்தில் ஒரு வைீட்டை பாகிஸ்தான் படைகள் குறிவைத்ததில் ஒரு முதியவரும் குழந்தையும் கொல்லப்பட்டனர். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
அவர்களை மீட்க அப்பகுதி மக்கள் கூடியிருந்த போது பாகிஸ்தான் படை மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் கொல்லப்பட்டனர். 158 பேர் காயமடைந்தனர். மேலும் பாக்டியாவின் கியான் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்’’ என்றார்.
இது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.
மத்திய கிழக்கில் போரை நிறுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திய வெற்றியால் பாகிஸ்தான் பெருமிதம் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது . ‘இரட்டைத் தாக்குதல்’ என அழைக்கப்படும் இந்தத் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இஸ்லாமாபாத் படைகள் நடத்திய தரைவழி தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
பாகிஸ்தானின் தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. மேலும், தங்கள் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்பதை காபூல் அதிகாரிகளும் பலமுறை மறுத்துள்ளனர்.
கிடைத்த தகவல்களின்படி, பாகிஸ்தான் விமானப்படை (PAF) விமானங்கள் இந்திய நேரப்படி அதிகாலை 12:30 மணிக்கு புறப்பட்டு, ஆப்கானிஸ்தானின் மூன்று மாவட்டங்களான பக்திகாவில் உள்ள கியான், பக்தியாவில் உள்ள சாம்கானி மற்றும் குனாரில் உள்ள மரவாரா ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தின.
புகைந்துகொண்டிருந்த இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்களையும் அலறிக்கொண்டிருந்த குழந்தைகளையும் கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது , பாகிஸ்தானிய விமானங்கள் மீண்டும் திரும்பி வந்து, ஆயுதமற்ற மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் மீது இரண்டாவது கட்டமாக குண்டுகளை வீசியுள்ளன. திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த இரண்டாவது தாக்குதலே, இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.



