கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி கமேனி, உயிரிழந்தார். இதனை கடந்த மார்ச் 1 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கமேனி உயிரிழந்ததாக தெரிவித்தார். ஆனால் , இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்தது. அந்த நேரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் அந்தக் கட்டிடம் கடுமையாக சேதமடைந்தது.
இந்த தாக்குதலின் பாதிப்பு செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த தாக்குதலில் அலி கமேனி, அவரது மகள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 7 நாட்கள் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி மரணத்திற்கு நீதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அலி கமேனி கடந்த 36 ஆண்டுகளாக ஈரானின் உச்ச தலைவராக இருந்து நாட்டை வழிநடத்தி வந்தார். இந்த நிலையில், ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஜூலை 4-ஆம் தேதி தொடங்குகின்றன. ஜூலை 7-ஆம் தேதி தெஹ்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள புனித நகரமான கோமில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதன் பின்னர், ஜூலை 9-ஆம் தேதி வடகிழக்கு ஈரானில் உள்ள அவரது சொந்த ஊரான புனித நகரமான மஷ்ஹாதில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக இஸ்லாமிய மரபுப்படி, உயிரிழந்தவரை 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்வது வழக்கம்.ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு பல மாதங்களாகத் தாமதமானது.போர்ச்சூழல், தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், மற்றும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் தேவையான உள்கட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கான நேரம் தேவைப்பட்டது ஆகிய காரணங்களால் நிகழ்ந்தது. மேலும், மொஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாள் துக்க நாட்களுக்குப் பிறகு சடங்குகள் நடத்த திட்டமிடப்பட்டது.
முந்தைய திட்டங்கள் மொஹர்ரம் மாதத்தில் மேற்கொள்ளப்படவிருந்தாலும், ஷியா இஸ்லாமியர்களின் புனித மாதமான மொஹர்ரமின் முதல் பத்து நாள் துக்க அனுசரிப்பு முடிந்த பின்னரே நடத்த வேண்டும் என்ற சமயக் காரணங்களாலும் இது தள்ளிப்போனது. கடந்த 1989-ஆம் ஆண்டு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஒரு கோடி மக்கள் கலந்துக் கொண்டனர்.
தற்போது ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி இறுதிசடங்கில் சுமார் 2 கோடி மக்கள் வரை இறுதிச் சடங்கில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் அதற்கான பிரம்மாண்டமான அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகளைச் செய்ய அதிக கால அவகாசம் தேவைப்பட்டது என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் பீகார் ஆளுநர் ஜெனரல் சையத் ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கரிட்டா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அலி கமேனியின் அரசு மரியாதை இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பில்லை என்றும், அதற்கு பதிலாக இந்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் இந்த இறுதிச் சடங்கு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.



