30 பேர் மரணம்! அகதிகள் முகாமுக்குள் புகுந்த எபோலா- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

 

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் (DR Congo) எபோலா வைரஸ் தொற்றின் 17-வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த 30 பேர் எபோலா தொற்று பாதிப்பால் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உலக சுகாதார அமைப்பை (WHO) பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொடிய பண்டிபுஜியோ திரிபு வகை எபோலா வைரஸ் அண்டை நாடான உகாண்டாவிற்கும் பரவியுள்ளதால், உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு போர்க்கால தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

காங்கோ நாட்டின் இத்தூரி (Ituri) மாகாணத்தில் உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கிகோன்சே (Kigonze) அகதிகள் முகாமில் தான் இந்த உச்சக்கட்ட சோகம் அரங்கேறியுள்ளது. கடந்த சில தினங்களில் மட்டும் இந்த முகாமில் தங்கியிருந்த 30 பேர் கடுமையான காய்ச்சல் மற்றும் ரத்த வாந்தி போன்ற எபோலா அறிகுறிகளுடன் திடீரென உயிரிழந்தனர்.

அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவர்கள் அனைவரும் எபோலா வைரஸ் தொற்றால் தான் உயிரிழந்தனர் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. போதிய சுகாதாரக் கட்டமைப்பு இல்லாத அகதிகள் முகாம்களில் இந்த வைரஸ் நுழைந்துள்ளதால், அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

காங்கோ நாட்டின் எல்லைகளைத் தாண்டி அண்டை நாடான உகாண்டாவிற்கும் இந்த வைரஸ் மிக வேகமாக ஊடுருவியுள்ளது. காங்கோவில் இருந்து சிகிச்சைக்காக உகாண்டாவிற்குள் நுழைந்த பயணிகள் மற்றும் அவர்களுக்குச் சிகிச்சை அளித்த 17-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த எபோலா பரவலை சர்வதேச பொதுச்சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்து, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

:
ஆப்பிரிக்கா முழுவதும் இதுவரை 896 நபர்களுக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கோ மற்றும் உகாண்டா முழுவதும் சேர்த்து இதுவரை 234-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தொற்றின் ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதம் 26% ஆக உள்ளது.

தற்போது காங்கோவில் பரவி வரும் வைரஸ், வழக்கமான எபோலா வகைகளைப் போலல்லாமல், மிகவும் அரிய வகையான பண்டிபுஜியோ (Bundibugyo Strain) வைரஸ் திரிபு என ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட திரிபுக்கு இன்னும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ (Approved Vaccines) அல்லது பிரத்யேக வைரஸ் எதிர்ப்பு மருந்துகளோ (Antiviral Treatment) கிடையாது என்பது தான் மருத்துவ உலகை தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா அசுர வேகமெடுத்ததை அடுத்து, இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச முனையங்களிலும் உகாண்டா மற்றும் காங்கோவிலிருந்து வரும் பயணிகளுக்குத் தீவிர காய்ச்சல் பரிசோதனை (Thermal Screening) மற்றும் கடந்த 21 நாட்களுக்கான பயண விவரங்களைக் கண்காணிக்கும் கட்டாயப் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது முகாம்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எபோலா மேலும் பரவாமல் தடுக்க சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார வளையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.