ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: பற்றி எரியும் மாஸ்கோ!

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர், நான்கு ஆண்டுகளைக் கடந்து மிக உக்கிரமான கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜி7 (G7) மாநாட்டில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் உக்ரைனுக்கு தங்களின் முழு ஆதரவை உறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே, உக்ரைன் ராணுவம் ரஷ்யா மீது வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு ‘மெகா’ வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் 1,000 ஆளில்லா விமாங்களை (Drones) ஏவி ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அரண்களை உக்ரைன் நிலைகுலையச் செய்துள்ளது.

இந்த அதிரடி தாக்குதலில் உக்ரைனின் முக்கிய இலக்காக இருந்தது ரஷ்ய தலைநகர் மாஸ்கோ தான். மாஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள, அந்த நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி நிலையமான கபோட்னியா (Kapotnya Oil Refinery) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உக்ரைனிய ட்ரோன்கள் துல்லியமாகத் தாக்கியுள்ளன. இதனால் ஆலை வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட எண்ணெய் சேமிப்பு தொட்டிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்து மாஸ்கோ நகரமே பற்றி எரிவது போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மாஸ்கோ நகரை நோக்கி மட்டும் வந்த சுமார் 200 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த கடுமையான ட்ரோன் வீச்சின் காரணமாக மாஸ்கோவில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது ட்ரோன் பாகங்கள் விழுந்து நொறுங்கியதில் குழந்தைகள் உட்பட 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி பேசுகையில், “நாங்கள் இந்தப் போரை விரும்பவில்லை, ஆனால் உக்ரைன் எரியும் போது உங்கள் மாஸ்கோவும் எரியும்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரவும், போரை முடிவுக்குக் கொண்டு வரவுமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இதற்கிடையே, ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபைத் தலைவர் வியாசஸ்லாவ் வோலோடின், இதற்குப் பதிலடியாக இன்னும் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன் மீது மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளதால் இரு நாடுகளிடையே மீண்டும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.