பிரபாகரனை உயிருடன் பிடித்திருந்தால் மீண்டும் யுத்தம் வெடித்திருக்கும் – சரத் பொன்சேகா

பிரபாகரன் சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், தன்மானப் பிடிவாதத்துடன் அதனை நிராகரித்து இறுதிவரை போரிட்டு உயிரிழக்கத் தீர்மானித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் கைதுசெய்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியிருக்கும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

‘அபிமானமிக்க தேசத்தையும் தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்காக’ எனும் தொனிப்பொருளில் நேற்று சனிக்கிழமை (21) திகதி காலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாம் 32 ஆண்டுகள் யுத்தம் செய்தோம். அந்த யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களிடமோ அல்லது இராணுவத் தளபதிகளிடமோ சரியான யுத்தத் தொலைநோக்குப் பார்வை இருந்ததாக நான் நம்பவில்லை.

எமது இராணுவத்தில் திறமையான தளபதிகள் பலர் இருந்தனர். ஸ்ரீலால் வீரதுங்க, டென்சில் கொப்பேகடுவ, ஜானக பெரேரா உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகள் யுத்த அனுபவமும் திறமையும் கொண்டவர்களாக விளங்கினர். அவர்களில் பலரும் இந்த யுத்தத்தை இராணுவ ரீதியாக மாத்திரம் வெற்றிகொள்ள முடியாது என்றும், இதற்கு அரசியல் தீர்வொன்றும் அவசியம் என்றும் ஊடகங்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் மக்களிடமும் இதே கருத்து காணப்பட்டது. இராணுவத்தினர் தாக்குதல்களை எதிர்கொண்டு பின்வாங்கிச் சென்ற சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனையிறவில் சுமார் 12,000 இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியைக் கைப்பற்றியதையடுத்து இராணுவத்தினர் பின்வாங்கிய சம்பவமும் இடம்பெற்றது.

இத்தகைய சம்பவங்களின் காரணமாக, இந்த யுத்தத்தை ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என்றும், இதற்கு அரசியல் தீர்வே அவசியம் என்றும் மக்கள் நம்பினர். அரசியல் தீர்வு என்பது பிரபாகரனுக்கு ஏற்ற வகையிலான தீர்வொன்றை வழங்குவதாகவே சிலர் கருதினர்.

ஆனால், நாம் யுத்தத்தை முன்னெடுத்த விதம் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. யுத்தத்தை முன்னெடுப்பதற்காக அழகான பெயர்களைச் சூட்டுவதோ, விளம்பரப்படுத்துவதோ, நாடகமாடுவதோ எமது நோக்கமாக இருக்கவில்லை. பயங்கரவாதிகள் எங்காவது சுற்றிவளைக்கப்பட்டால் அவர்களை மீட்பதற்காகப் பெயரிடப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து அதனைப் பெரிதுபடுத்தும் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடவில்லை.

முழு வடக்கு, கிழக்கு யுத்தப் பிரதேசத்தையும் எனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, அந்தப் பிரதேசம் முழுவதையும் வெற்றிகொள்ளக்கூடிய திட்டமொன்றை உருவாக்கினேன். அந்தத் திட்டமே இறுதியில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது. அதன் மூலம் யுத்த வெற்றியை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

யுத்தத்தின் போது இராணுவத்தினருக்கு எதிராகப் பல்வேறு தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. சுமார் 10 கிலோமீற்றர் அளவிலான பிரதேசத்துக்குள் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது தலைவர்கள் அனைவரும் சுற்றிவளைக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் தலைவர் இரண்டு நாட்களுக்கு யுத்த நிறுத்தமொன்றை அறிவிக்கத் தீர்மானித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்காகவே இந்த யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.

அப்போது மக்கள் யுத்தம் முடிவடையும் வரையில் காத்திருந்தனர். விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பாற்சோறு உண்ணலாம் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருந்தனர். அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இரண்டு நாட்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியளவில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் சுமார் 400 மீற்றர் வு 400 மீற்றர் அளவிலான குறுகிய பிரதேசத்துக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் சரணடைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்கள் சரணடைந்தால் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பிரபாகரன் அந்த யோசனைக்கு இணங்கவில்லை. அவர் பயங்கரவாதியாக இருந்தபோதிலும், தனக்கென ஒரு தன்மானப் பிடிவாதத்தைக் கொண்டிருந்தார். சரணடைந்து உயிர்வாழ்வதைவிட இறுதிவரை போரிட்டு உயிரிழப்பதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் அவர் இருந்தார். அதனால்தான் சரணடைவதற்கான யோசனையை அவர் நிராகரித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அனைவரும் முற்றாக அழிக்கப்படும் வரையில் மேலும் 24 மணித்தியாலங்கள் காத்திருக்க முடியுமா என்ற நிலைமையும் அப்போது காணப்பட்டது. அவர்களை உயிருடன் கைதுசெய்து, அவர்களது உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் நாட்டின் தலைவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அவர்களது சகோதரர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அவர்களை உயிருடன் கைதுசெய்திருந்தால், இன்றைய நிலைமையில் வடக்கில் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகியிருக்கும். ஏனெனில், அவர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்து, பிள்ளையான், கருணா ஆகியோரைப் பராமரித்து அரவணைத்ததைப் போன்று அவர்களையும் அரவணைத்திருப்பார்கள். அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதம் வளர்வதற்கான நச்சுவிதைக்கு இடமளிக்கப்பட்டிருக்கும்.

எனவே, இத்தகையவர்களின் தேசியப் பற்றையும் நாட்டின் மீதான அக்கறையையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்பட வேண்டுமானால், சில சந்தர்ப்பங்களில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும்.

சிங்கப்பூர், மலேசியா, ருவாண்டா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகள் கடுமையாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலமே அபிவிருத்தியை அடைந்தன. அந்த நாடுகளில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்த தலைவர்களால் மக்களின் வாழ்க்கைத் தரம் விரைவாக உயர்த்தப்பட்டது. அவை தத்தமது பிராந்தியங்களில் அபிவிருத்தியடைந்த நாடுகளாக மாறின.

ஆனால், கொழும்பில் வாழும் சில செல்வந்தர்கள் நாட்டை என்னிடம் ஒப்படைத்தால் நான் சர்வாதிகாரியாகிவிடுவேன் என்று கூறுகின்றனர். நான் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் காரணமாகவே இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நான் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவராமல், அதனை அடுத்த இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தால், என்னையும் ஏனைய முன்னாள் இராணுவத் தளபதிகளைப் போன்று மென்மையானவராகவும் மக்கள் நலன் சார்ந்தவராகவும் வர்ணித்திருப்பார்கள்.

இன மற்றும் மத வேறுபாடுகளைத் தூண்டி மக்களை மீண்டும் ஆத்திரமடையச் செய்ய முயற்சிப்போருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இத்தகைய விவகாரங்களைப் பெரிதுபடுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன என்றார்.